Sunday, May 16, 2010

நரசிம்ம வாமனன்


பெரியாழ்வாரின் திருவரங்கக் காதல் தொடர்கின்றது ...

***

உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி*
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான் கோயில்*

உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*

வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே.

மரவடியை 4-9-8

இரணியனின் இருதயத்தைத் தொட்டு, நகங்களின் முனையால் அவன் ஒளி பொருந்திய மார்பு அழுந்தும்படி அழுத்தி, அவன் தலையைப் பற்றி, கிரீடம் உடையும்படி, கண்கள் பிதுங்கி வழிய, வாயினால் அலறும்படி பிளந்தவனுடைய கோயிலானது,

திண்மை பொருந்திய தாமரை மலர்கள், உலகளந்த வாமனனுடைய சிவந்த திருவடிகள் போல் உயர்ந்து வளர, முற்றும் வளர்ந்த நெல் பயிர்கள் தண்டுகளைச் சாய வைத்து, நுனியைத் தாழ வைக்கும் குளிர்ந்த அரங்கமே!

(உரம் - மார்பு; தெழித்தான் - பிளந்தவன்; உரம் - வலிமை, திண்மை; வரம்புற்ற - வரம்பு + உற்ற = அதிக பட்சமாக வளர்ந்த; தாள் - தண்டு)

***

கையால் மண்ணை எடுப்பது போல் இரணியனை அள்ளு!
நகத்தால் மார்பில் ஒரு குத்து!
கொத்து மல்லியைப் போல் நரம்பு ஒரு கொத்து!
தலையில் ஒரு தட்டு!
'Paste' போல் கண்களை ஒரு பிதுக்கு!
'ஐயோ' என்ற கத்து!

ஆழ்வாரின் வர்ணை இப்படி! மற்ற வர்ணனைகள் எப்படியோ?

***

ன் பலத்தால், இரணியனைப் பிடிக்கிறான் எம்பெருமான். அரண்மனை வாசல் படியில், தன் மடியில் வைத்து, அவன் மார்பைப் பிளக்கிறான்.

'ஐயோ! ஐராவதத்தின் (இந்திரனின் யானை) பற்கள் மோதிய போது, என் மார்பில் பட்டு ஐராவவதத்தின் பற்கள் பொடிப் பொடியாயின. இப்படிப் பட்ட என் நெஞ்சை இந்த உருவம் சாதாரணமாகப் பிளக்கிறது! விதி நம்மை ஆட்டும் போது, புல்லும் நம்மை அவமதிக்கிறது!' (நரசிம்ம புராணம் - 44.30)

(இது ரொம்ப ஓவர்! சாகும் போதும் பழமொழி தேவையா?!)

என்று இரணியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நரசிம்மம் மார்பைப் இரு கூறாகப் பிளக்கிறதாம் - ஐராவதம், துர்வாசர் கொடுத்த தாமரை மாலையைத் தன் காலில் போட்டு நசுக்கியது போல்!

நரசிம்மத்தின் நகத்தில் இருந்து, இரணியன் மார்பு, இரண்டு கூறுகளாகக் கீழே விழுகின்றது! இதைப் பார்த்த நரசிம்மத்தின் கண்களிலும், வாயிலும் சிரிப்பு!

மார்க்கண்டேய ரிஷி, ஸஹஸ்ராணிகருக்கு, நரசிம்ம புராணத்தில், இரணிய வதத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

***

ரணியன் அனுப்பிய அசுரர்களை வதைத்த பின்னர், இரணியனுடன் போர் புரிகிறான் நாரயணன். இந்தப் போரை அற்புதமாக 6 கவிகளால் வருணிக்கிறார் கம்பர் (இதனைப் பின்பு பார்க்கலாம்)! போரின் முடிவில், மேலும் 4 கவிகளால் இரணியனை எம்பெருமான் வதைத்தமையைப் பாடுகிறார்.

வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி

கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,

தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால்.
(280)

இரணியன் கால்களிரண்டையும், தன் ஒரு கையால் சிம்மம் பிடித்துச் சுழற்றியதாம்!

சுழற்றிய காலத்து, இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி,

கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன; கிடந்த இன்றும்,

அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தமான,

நிழல் தரும் காலை, மாலை நெடுமணிச் சுடரின் நீத்தம்.
(281)

சுழற்றிய போது, அவன் காதிலிருந்த குண்டலங்கள், கிழக்கு, மேற்குத் திசைகளுக்குச் சென்று விழுந்தனவாம்! அவையே, இன்றும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் நமக்கு நிழல் தருகின்ற மலைகளாம்!

போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது; என்று
தான் தனி ஒருவன் தன்னை, உரை செயும் தரத்தன் நானோ?

வான் தகு வள்ளல், வெள்ளை வள்ளுகிர் வயிர மார்பின்

ஊன்றலும்; உதிர வெள்ளம் பரந்துளது உலக மெங்கும்.
(282)

பரமபதம் தருகின்ற வள்ளல், வெண்மையான கூரிய நகங்களை மார்பில் ஊன்றிய உடனேயே ரத்தம் உலகெங்கும் பரவியதாம்!

ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்

வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்

மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!


அரண்மனை வாயில் படியில், அவன் மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!

பிரகலாதன் சொன்னதை நிரூபிக்க வந்தாலும், இரணியன் மரணம், தேவர்கள் இன்னல் தீர்ப்பதற்காகத் தான் என்று கம்பர் கருதுகின்றாரோ?

***

செவ்வை சூடுவார் பாகவதத்தில், வதத்தை விளக்க எழுதிய ஒரே கவிதையை (கழை சுளி களிறு அன்னானை ... அன்றே. 1692) நாம் முன்னமேயே (அளைந்த கைகள்’ பதிப்பில்) பார்த்தோம்.

மூல பாரதத்திலும், இரணிய வதம் சுருக்கமாகவே உள்ளது (2 சுலோகங்கள் - 7.14.8.28-29). அதன் தமிழாக்கம் இதோ:

'நாராயணனுடைய ஒளியினால் கண்களை மூடிக் கொண்டு சண்டை செய்யும் அசுரனை, அட்டகாசமாகச் சத்தம் செய்து கொண்டு பிடித்தார். பாம்பு எலியைப் பிடிக்கும்போது எலி எவ்வாறு துன்பப் படுமோ, அவ்வாறு இரணியன் நரஸிம்மர் பிடியில் துன்பப் பட்டான்.

வஜ்ராயுதத்தாலும் காயப் படுத்த முடியாத தோலை உடைய அசுரனை, நரசிம்மர், இரணியன் அரண்மனையில் வாசல் படியில், தன் தொடையில் போட்டுக் கொண்டு நகங்களால், பகலும் இல்லாத, இரவும் இல்லாத மாலை வேளையில், அதிக விடமுள்ள பாம்பைக் கருடன் கிழிப்பது போல், விளையாட்டாகக் கிழித்தார்.'

எம்பெருமான் குடலை உருவினாரா, இல்லை மார்பைப் பிளந்தாரா?

***

ஸ்ரீமத் பாகவதத்தில், நரசிம்மம், 'அசுரனைக் கிழித்தார்' என்றே இருக்கின்றது (7.14.8.29). 'உடல்' என்றால், மார்பா? குடலா? உடலா?

இந்தக் கேள்வியை முன்பு ஒரு அன்பரும் ('கலவை' என்று நினைக்கிறேன்) கேட்டிருந்தார்.

சூடுவார் பாகவதத்தில், 'மார்பைக் கிழித்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார்' என்றும், நரசிம்ம புராணத்தில், 'மார்பைக் கிழித்தார்' எனவும், கம்பராமாயணத்தில் 'மார்பில் நகங்களை ஊன்றினார்' எனவும் உள்ளது! விஷ்ணு புராணத்தில், நரசிம்ம அவதாரம் மற்றும் வதம் பற்றி அதிகம் பேசப் படவில்லை.

பொதுவாக, வைணவப் பெரியோர்கள் இரணிய வதத்தை அதிகம் பேசுவதில்லை (நரசிம்மாவதாரத்தை எழுதுவதனால் அடியேன் இதை விளக்கமாக எழுத வேண்டியதாயிற்று).

இரணிய வதம் செய்யும் உக்ர நரசிம்மர் (படங்கள், சிலைகள், கோயில் சிலைகள்) பார்ப்பதற்குப் பயங்கரமாக இருப்பார். இந்தக் காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சிலருக்கு மனக்கலக்கம் ஏற்படலாம் (இதை அனுபவித்துள்ளதாக, சிலர் அடியேனிடம் கூறியுள்ளனர்). இதனாலேயே, 'வீட்டில் உக்ர நரசிம்மரை வைக்கக் கூடாது' என்றும் பெரியோர் கூறுவர். மாறாக லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வணங்குதல் நன்று! திருவும் சேர்ந்து இருந்தால் நலம் தானே?

மீண்டும் பாசுரத்திற்குத் தாவுவோமா?

***

திருவரங்கம், தீவரங்கம் = தீவும், அரங்கமும்!

காவிரி! அரங்கனுக்காகவே படுக்க இடம் கொடுத்து, உறங்கும் அவன் திருவடிகளைத் தன் அலைக் கைகளால் வருடிக் கொடுத்து, மீண்டும் ஓடும் காவிரி!

அதனுள் மூன்று தீவுகள்! ஆதி ரங்கம் (ஸ்ரீரங்கப் பட்டிணம்)!
மத்ய ரங்கம் (சிவ சமுத்திரம்),!


இதில் கடைக்குட்டியான அந்த்ய ரங்கம் தான் நம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!


இந்த மூன்று தீவுகளும், மிகவும் செழிப்பானவை! காவிரியினால் வளப்படுத்தப் பட்ட இந்த தீவுகளில் வளர்கின்ற யாவையும், எவரும் கொடுத்து வைத்த வைகள்/வர்கள்! அதீதமான வளர்ச்சி! அரங்கனின் பெயரைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தால் இருக்காதா என்ன?

இப்படிப் பட்ட குளிர்ச்சியான அரங்கத்தில் நன்கு முற்றிய, வளர்ந்த, செந்நெல் கதிர்கள் வளர்கின்றன! அருகே, அழகிய தாமரைகள்! திருவின் தயவால், ஏற்கனவே சிவந்து, அழகாக இருக்கும் தாமரைகள், அரங்க நாமம் எனும் உரமும் சேர்ந்து, மிகவும் உயர்ந்து இருக்கின்றன!


வழக்கமாகத் தங்களை விட தாழ்ந்து இருக்கும் தாமரைகளைப் பார்க்கின்ற நெற்கதிர்களுக்கு, மிகவும் ஆச்சரியம்! தாமரைகள், தங்களை விட உயரமாக வளர்ந்து, சிவந்து எம்பெருமான் திருவடி போல் தெரிகின்றன!


நெற்கதிர்களுக்கு, ஒரு வேளை அரங்கத்தில் வாழும் நரசிம்மன், மீண்டும் வாமன அவதாரம் எடுத்து விட்டாரோ என்ற வியப்பு! உடனே, வாமனனின் திருவடிகளை வணங்குவதற்காக, தங்கள் தண்டுகளை சற்று வளைத்து, தலைகளை சற்றே தாழ்த்துகின்றன!


(சில வகைத் தாமரைகளின் தண்டு, நீண்டு, நேராக இருக்கும்! விளைந்துள்ள முற்றிய கதிர்கள், நெல்லின் பளுவால், சற்று வளைந்து இருக்கும்! அந்த சமயத்தில், தாமரைகள் நெற்கதிர்களை விட உயரமாக இருக்கும், அல்லது அப்படித் தோன்றும்! தாமரையும், அருகே வளைந்து நெற்கதிர்கள் இருக்கும் இந்தக் காட்சியைத் தான் ஆழ்வார் இப்படி வருணிக்கின்றார்!)

இப்படி, நரசிம்மன் வாமன அவதாரம் எடுத்த திவ்ய தேசம், அரங்கமே என்கின்றார் பெரியாழ்வார்!

- அரங்க நரசிம்மர் மீண்டும் வருவார்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP