Showing posts with label நரசிம்மர். Show all posts
Showing posts with label நரசிம்மர். Show all posts

Sunday, May 16, 2010

நரசிம்ம வாமனன்


பெரியாழ்வாரின் திருவரங்கக் காதல் தொடர்கின்றது ...

***

உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி*
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான் கோயில்*

உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*

வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே.

மரவடியை 4-9-8

இரணியனின் இருதயத்தைத் தொட்டு, நகங்களின் முனையால் அவன் ஒளி பொருந்திய மார்பு அழுந்தும்படி அழுத்தி, அவன் தலையைப் பற்றி, கிரீடம் உடையும்படி, கண்கள் பிதுங்கி வழிய, வாயினால் அலறும்படி பிளந்தவனுடைய கோயிலானது,

திண்மை பொருந்திய தாமரை மலர்கள், உலகளந்த வாமனனுடைய சிவந்த திருவடிகள் போல் உயர்ந்து வளர, முற்றும் வளர்ந்த நெல் பயிர்கள் தண்டுகளைச் சாய வைத்து, நுனியைத் தாழ வைக்கும் குளிர்ந்த அரங்கமே!

(உரம் - மார்பு; தெழித்தான் - பிளந்தவன்; உரம் - வலிமை, திண்மை; வரம்புற்ற - வரம்பு + உற்ற = அதிக பட்சமாக வளர்ந்த; தாள் - தண்டு)

***

கையால் மண்ணை எடுப்பது போல் இரணியனை அள்ளு!
நகத்தால் மார்பில் ஒரு குத்து!
கொத்து மல்லியைப் போல் நரம்பு ஒரு கொத்து!
தலையில் ஒரு தட்டு!
'Paste' போல் கண்களை ஒரு பிதுக்கு!
'ஐயோ' என்ற கத்து!

ஆழ்வாரின் வர்ணை இப்படி! மற்ற வர்ணனைகள் எப்படியோ?

***

ன் பலத்தால், இரணியனைப் பிடிக்கிறான் எம்பெருமான். அரண்மனை வாசல் படியில், தன் மடியில் வைத்து, அவன் மார்பைப் பிளக்கிறான்.

'ஐயோ! ஐராவதத்தின் (இந்திரனின் யானை) பற்கள் மோதிய போது, என் மார்பில் பட்டு ஐராவவதத்தின் பற்கள் பொடிப் பொடியாயின. இப்படிப் பட்ட என் நெஞ்சை இந்த உருவம் சாதாரணமாகப் பிளக்கிறது! விதி நம்மை ஆட்டும் போது, புல்லும் நம்மை அவமதிக்கிறது!' (நரசிம்ம புராணம் - 44.30)

(இது ரொம்ப ஓவர்! சாகும் போதும் பழமொழி தேவையா?!)

என்று இரணியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நரசிம்மம் மார்பைப் இரு கூறாகப் பிளக்கிறதாம் - ஐராவதம், துர்வாசர் கொடுத்த தாமரை மாலையைத் தன் காலில் போட்டு நசுக்கியது போல்!

நரசிம்மத்தின் நகத்தில் இருந்து, இரணியன் மார்பு, இரண்டு கூறுகளாகக் கீழே விழுகின்றது! இதைப் பார்த்த நரசிம்மத்தின் கண்களிலும், வாயிலும் சிரிப்பு!

மார்க்கண்டேய ரிஷி, ஸஹஸ்ராணிகருக்கு, நரசிம்ம புராணத்தில், இரணிய வதத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

***

ரணியன் அனுப்பிய அசுரர்களை வதைத்த பின்னர், இரணியனுடன் போர் புரிகிறான் நாரயணன். இந்தப் போரை அற்புதமாக 6 கவிகளால் வருணிக்கிறார் கம்பர் (இதனைப் பின்பு பார்க்கலாம்)! போரின் முடிவில், மேலும் 4 கவிகளால் இரணியனை எம்பெருமான் வதைத்தமையைப் பாடுகிறார்.

வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி

கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,

தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால்.
(280)

இரணியன் கால்களிரண்டையும், தன் ஒரு கையால் சிம்மம் பிடித்துச் சுழற்றியதாம்!

சுழற்றிய காலத்து, இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி,

கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன; கிடந்த இன்றும்,

அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தமான,

நிழல் தரும் காலை, மாலை நெடுமணிச் சுடரின் நீத்தம்.
(281)

சுழற்றிய போது, அவன் காதிலிருந்த குண்டலங்கள், கிழக்கு, மேற்குத் திசைகளுக்குச் சென்று விழுந்தனவாம்! அவையே, இன்றும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் நமக்கு நிழல் தருகின்ற மலைகளாம்!

போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது; என்று
தான் தனி ஒருவன் தன்னை, உரை செயும் தரத்தன் நானோ?

வான் தகு வள்ளல், வெள்ளை வள்ளுகிர் வயிர மார்பின்

ஊன்றலும்; உதிர வெள்ளம் பரந்துளது உலக மெங்கும்.
(282)

பரமபதம் தருகின்ற வள்ளல், வெண்மையான கூரிய நகங்களை மார்பில் ஊன்றிய உடனேயே ரத்தம் உலகெங்கும் பரவியதாம்!

ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்

வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்

மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!


அரண்மனை வாயில் படியில், அவன் மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!

பிரகலாதன் சொன்னதை நிரூபிக்க வந்தாலும், இரணியன் மரணம், தேவர்கள் இன்னல் தீர்ப்பதற்காகத் தான் என்று கம்பர் கருதுகின்றாரோ?

***

செவ்வை சூடுவார் பாகவதத்தில், வதத்தை விளக்க எழுதிய ஒரே கவிதையை (கழை சுளி களிறு அன்னானை ... அன்றே. 1692) நாம் முன்னமேயே (அளைந்த கைகள்’ பதிப்பில்) பார்த்தோம்.

மூல பாரதத்திலும், இரணிய வதம் சுருக்கமாகவே உள்ளது (2 சுலோகங்கள் - 7.14.8.28-29). அதன் தமிழாக்கம் இதோ:

'நாராயணனுடைய ஒளியினால் கண்களை மூடிக் கொண்டு சண்டை செய்யும் அசுரனை, அட்டகாசமாகச் சத்தம் செய்து கொண்டு பிடித்தார். பாம்பு எலியைப் பிடிக்கும்போது எலி எவ்வாறு துன்பப் படுமோ, அவ்வாறு இரணியன் நரஸிம்மர் பிடியில் துன்பப் பட்டான்.

வஜ்ராயுதத்தாலும் காயப் படுத்த முடியாத தோலை உடைய அசுரனை, நரசிம்மர், இரணியன் அரண்மனையில் வாசல் படியில், தன் தொடையில் போட்டுக் கொண்டு நகங்களால், பகலும் இல்லாத, இரவும் இல்லாத மாலை வேளையில், அதிக விடமுள்ள பாம்பைக் கருடன் கிழிப்பது போல், விளையாட்டாகக் கிழித்தார்.'

எம்பெருமான் குடலை உருவினாரா, இல்லை மார்பைப் பிளந்தாரா?

***

ஸ்ரீமத் பாகவதத்தில், நரசிம்மம், 'அசுரனைக் கிழித்தார்' என்றே இருக்கின்றது (7.14.8.29). 'உடல்' என்றால், மார்பா? குடலா? உடலா?

இந்தக் கேள்வியை முன்பு ஒரு அன்பரும் ('கலவை' என்று நினைக்கிறேன்) கேட்டிருந்தார்.

சூடுவார் பாகவதத்தில், 'மார்பைக் கிழித்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார்' என்றும், நரசிம்ம புராணத்தில், 'மார்பைக் கிழித்தார்' எனவும், கம்பராமாயணத்தில் 'மார்பில் நகங்களை ஊன்றினார்' எனவும் உள்ளது! விஷ்ணு புராணத்தில், நரசிம்ம அவதாரம் மற்றும் வதம் பற்றி அதிகம் பேசப் படவில்லை.

பொதுவாக, வைணவப் பெரியோர்கள் இரணிய வதத்தை அதிகம் பேசுவதில்லை (நரசிம்மாவதாரத்தை எழுதுவதனால் அடியேன் இதை விளக்கமாக எழுத வேண்டியதாயிற்று).

இரணிய வதம் செய்யும் உக்ர நரசிம்மர் (படங்கள், சிலைகள், கோயில் சிலைகள்) பார்ப்பதற்குப் பயங்கரமாக இருப்பார். இந்தக் காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சிலருக்கு மனக்கலக்கம் ஏற்படலாம் (இதை அனுபவித்துள்ளதாக, சிலர் அடியேனிடம் கூறியுள்ளனர்). இதனாலேயே, 'வீட்டில் உக்ர நரசிம்மரை வைக்கக் கூடாது' என்றும் பெரியோர் கூறுவர். மாறாக லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வணங்குதல் நன்று! திருவும் சேர்ந்து இருந்தால் நலம் தானே?

மீண்டும் பாசுரத்திற்குத் தாவுவோமா?

***

திருவரங்கம், தீவரங்கம் = தீவும், அரங்கமும்!

காவிரி! அரங்கனுக்காகவே படுக்க இடம் கொடுத்து, உறங்கும் அவன் திருவடிகளைத் தன் அலைக் கைகளால் வருடிக் கொடுத்து, மீண்டும் ஓடும் காவிரி!

அதனுள் மூன்று தீவுகள்! ஆதி ரங்கம் (ஸ்ரீரங்கப் பட்டிணம்)!
மத்ய ரங்கம் (சிவ சமுத்திரம்),!


இதில் கடைக்குட்டியான அந்த்ய ரங்கம் தான் நம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!


இந்த மூன்று தீவுகளும், மிகவும் செழிப்பானவை! காவிரியினால் வளப்படுத்தப் பட்ட இந்த தீவுகளில் வளர்கின்ற யாவையும், எவரும் கொடுத்து வைத்த வைகள்/வர்கள்! அதீதமான வளர்ச்சி! அரங்கனின் பெயரைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தால் இருக்காதா என்ன?

இப்படிப் பட்ட குளிர்ச்சியான அரங்கத்தில் நன்கு முற்றிய, வளர்ந்த, செந்நெல் கதிர்கள் வளர்கின்றன! அருகே, அழகிய தாமரைகள்! திருவின் தயவால், ஏற்கனவே சிவந்து, அழகாக இருக்கும் தாமரைகள், அரங்க நாமம் எனும் உரமும் சேர்ந்து, மிகவும் உயர்ந்து இருக்கின்றன!


வழக்கமாகத் தங்களை விட தாழ்ந்து இருக்கும் தாமரைகளைப் பார்க்கின்ற நெற்கதிர்களுக்கு, மிகவும் ஆச்சரியம்! தாமரைகள், தங்களை விட உயரமாக வளர்ந்து, சிவந்து எம்பெருமான் திருவடி போல் தெரிகின்றன!


நெற்கதிர்களுக்கு, ஒரு வேளை அரங்கத்தில் வாழும் நரசிம்மன், மீண்டும் வாமன அவதாரம் எடுத்து விட்டாரோ என்ற வியப்பு! உடனே, வாமனனின் திருவடிகளை வணங்குவதற்காக, தங்கள் தண்டுகளை சற்று வளைத்து, தலைகளை சற்றே தாழ்த்துகின்றன!


(சில வகைத் தாமரைகளின் தண்டு, நீண்டு, நேராக இருக்கும்! விளைந்துள்ள முற்றிய கதிர்கள், நெல்லின் பளுவால், சற்று வளைந்து இருக்கும்! அந்த சமயத்தில், தாமரைகள் நெற்கதிர்களை விட உயரமாக இருக்கும், அல்லது அப்படித் தோன்றும்! தாமரையும், அருகே வளைந்து நெற்கதிர்கள் இருக்கும் இந்தக் காட்சியைத் தான் ஆழ்வார் இப்படி வருணிக்கின்றார்!)

இப்படி, நரசிம்மன் வாமன அவதாரம் எடுத்த திவ்ய தேசம், அரங்கமே என்கின்றார் பெரியாழ்வார்!

- அரங்க நரசிம்மர் மீண்டும் வருவார்!

Thursday, May 13, 2010

வளர்ந்த சிங்கம்



கு
ழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.


பெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.

இதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.

***
 
அளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே
வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*

உளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*

பேய்முலை உண்டானே! சப்பாணி.
மாணிக்கக் கிண்கிணி 1-7-9

தானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி! பேய் முலை உண்டவனே! கை கொட்டிச் சிரி!'

என்று 'யசோதை'யாழ்வார் பாடுகின்றாள்.

***

ரசிம்ம புராணத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: இரணியன் அரண்மனை
நேரம்: அவன் விதி முடியும் நேரம்

இரணியன் (கோபத்துடன்): மூடனே! எங்கே இருக்கின்றான் விஷ்ணு?

பிரகலாதன்: எல்லா இடத்திலும்!

இரணியன் (சிரித்து): இந்தத் தூணிலுமா?

(பிரகலாதன் கண்ணுக்கு மட்டும் எம்பெருமான் காட்சியளிக்கிறார்)


பிரகலாதன் (தூணைப் பார்த்து):
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!

(எல்லாமே எம்பெருமான் தான் என்று
நினைக்கும் மனப் பக்குவம் வந்து விட்டால், கூப்பிடும்போது தான் நரசிம்மர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே!)


இரணியன் (சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து):
பைத்தியமே! நான் சொல்வதை நன்றாகக் கேள்! உன்னை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன்!

(பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு
முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு! பிரகலாதன் பைத்தியமா? யாராவது பதில் அளிக்கிறீர்களா?)

இரணியன் (ஒரு தூணைக் காட்டி): முடிந்தால் இந்தத் தூணில் இருந்து விஷ்ணு வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!

ஓஹோ! 'அளந்திட்ட தூண்' இது தானோ?

***

ந்தத் தூண், சாதாரணத் தூண் அல்ல!

நாம் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கிறோம்! பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம்! மற்றதெல்லாம் கொத்தனார் வேலை. ஆனாலும், நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் 'நான் கட்டிய வீடு' என்று சொல்லிப் பெருமை கொள்கிறோம்!


('ராமர் பொறியியல் கல்லூரியில், B.E Degree வாங்காமல், சேது பந்தனம்' கட்டியதும் இப்படித் தானே?)


இப்படி, இரணியன், முதலில் 'அளந்து இட்ட' தூணாம் இது! அதுவும், தன் உருவத்திற்கு ஏற்பக் கட்டிய, மிகப் பெரிய, உயரமான, அழகான தூண்!

ஆனால், ஆழ்வார் கூறும் காரணம் இதுவல்ல!
 
தானே நட்டு வைத்த, பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தத் தூணில், 'நாராயணன் முன்னமேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்க முடியாது' என்ற நம்பிக்கையிலேயே!

ஒரு வேளை, 'தன் விதி இது தான்' என்று முன்னமேயே இரணியன் (வரங்களின் மூலம்) அளந்து வைத்த தூண் என்கின்றாரோ ஆழ்வார்?

இன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!


அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்:
கப்பல்களும், மற்றவையும் வந்து, அவை இரண்டும் அழிவதற்கு முன்னர், முடிந்தால் நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விடுங்கள் - இதுவரை தரிசனம் செய்யாமல் இருந்தால்!

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைத் தட்டுகிறான் இரணியன்!

***

ரசிம்மம் தோன்றுகிறது! தட்டிய இடத்தில் இருந்து!


'நாளைக்கு வருகிறேன்!' என்று எம்பெருமான் பாற்கடலில் தூங்கிக் கொண்டு இருக்க முடியுமா? அதற்குள் இருக்கிற ஒரே பக்தனையும் இரணியன் கொன்று விடுவானே!
 
நரசிம்மம், அப்பொழுதே தோன்றியது!

'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு!
 
இதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது!' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள்! கேட்டவுடன், உடனேயே கிடைக்கும் நரசிம்மனிடம் இருந்து!

'வளர்ந்திட்டு' என்கிறாரே? சிங்கம் வளர்ந்ததா?

***

ல்லா நரசிம்மாவதாரக் காவியங்களும், 'நரசிம்மர் தூணைப் பிளந்து வந்து இரணியனை வதம் செய்தார்' என்று கூறினாலும், உண்மையில் அவதாரம் முழுவதும் பல நிலைகளில் (Stages) வர்ணிக்கப் படுகின்றன:
 
- தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு!
- உடனே எடுத்த விசுவ ரூபம்!
- இரணியனுடன் இருந்த அசுரர்கள் வதம்!


- இரணியனுடன் போர்!
- அந்திப் போதில், இரணியனின் மார்பு பிளந்தது!
- எம்பெருமானின் கோபம்!
- கோபம் தணிந்ததும் நடந்தவை!


படைப்பாளியின் கற்பனைக்கு ஏற்ப, வர்ணனைகளில் சில நிலைகள் குறைவாகவும், சில நிலைகள் அதிகமாகவும் உள்ளன.

தூணில் இருந்து வெளிவந்தவுடன், நரசிம்மம் விசுவரூபம் எடுத்ததாகவும் கூறுவர். இதனாலேயே ஆழ்வார் 'வளர்ந்திட்டு' என்கின்றாரோ?

கம்பரின் விசுவரூப வர்ணனையையும், மற்ற காவியத்தில் உள்ள வர்ணனைகளையும், முழுவதும் நாம் பின்னால் ரசிக்கலாம்.

('பின்னால், பின்னால்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம் என்கிறீர்களா? அடியேன் கிட்ட இருக்கிற மொத்தச் சரக்கையும் 90+ பாசுரங்களுக்கு ஏற்கனவே கூறு போட்டுட்டேன் சாமி ... ஹி... ஹி...)

எம்பெருமான், சங்கு சக்கரங்களுடன் தோன்றியதாகக் கூறுவர். இருந்தும், அவதாரக் காரணம் கருதி, அவற்றின் ஒளியை விட அவருடைய நகங்கள் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், சங்கு சக்கரங்களைப் பற்றி விவரிக்காமல், 'வாள் உகிர்ச் சிங்க உரு' என்கிறார்.

நரசிம்மம் மார்பைத் தானே தொட்டது? 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்?

***

ட்டிய இடத்தில் இருந்து, அப்பொழுதே தோன்றும் எம்பெருமானைப் பார்த்தாவது, இரணியன் திருந்துவானா என்று எம்பெருமான் நினைத்தாராம் (திருந்தினால், இன்னும் ஒரு பக்தன் கிடைப்பானே என்ற நப்பாசை தான்)! எனவே, அவன் உள்ளத்தைத் தொடுகின்றார் ('உளம் தொட்டு')!

நன்கு தேடியும், எம்பெருமான் மேல் பாசம் சிறிதும் இல்லையாம் இரணியனுக்கு! அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. உடனே, உள்ளத்தை விட்டு விட்டு, பிளக்கிறார் மார்பை!

ஒண் மார்வகலம் பிளந்திட்ட’ - மார்பை, அகலமாகப் (முழுவதுமாக) பிளக்கின்றார் எனவும், அகலமான மார்பைப் பிளக்கின்றார் எனவும் பொருள் கொள்ளலாம்.

அன்று ஆயுதமாக இருந்த அதே கைகள், இன்று, கை கொட்டிச் சிரிக்கின்றதாம்! சிரிக்க வைக்கின்றதாம்!

ஐயோ! மீண்டும் பூதனையா? ஆழ்வாருக்கு பூதனையை ரொம்பப் பிடிக்குமோ?

***

பூதனையும், இரணியனும் ஒரே குலமாம் - அசுரர்கள் என்பதற்கும் மேலாக!

இருவரும் - ’தொடை’க்குலமாம் (!?!)

ஒருத்தியை, அவள் தொடைகளில் படுத்து, உயிரை எடுக்கின்றான்! ஒருவனை, தன் இரு தொடைகளில் கிடத்தி, அவன் உயிரை எடுக்கின்றான்!


ஒரு தொடையில் நிலமகளைப் பிரளயத்தி லமர்த்தினை*
இரு தொடையில் இருத்திநீ அவுண னுடல் பிளந்தனை*

ஒரு தொடையில் பத்தனை வதத் தின்பின் அமர்த்தினை*

இரு தொடையில் கிடந்துநீ யரக்கி உயிர் குடித்தனை*

ஒரு தொடை தட்டிநீ பாரதப் போர் முடித்தனை*

ஒரு தொடையில் திருமகளை இடந்தையி லமர்த்தினை*

ஒரு தொடைத் துளவம் தந்த அடிப்பொடிக் கருளினை*

ஒரு தொடை யலங்கார மெழுது மடியேனுக் கிரங்காயோ?


பாரதத்தில், தன் தொடையைத் தட்டி, பீமனுக்கு சமிக்ஞை செய்கிறான்! துரியோதனன் மரணத்துடன் போர் முடிகின்றது!

திருமகளையும், நிலமகளையும், பிரகலாதனையும் தன் இடப்பாகத்தில் அமர்த்துகின்றான்!

என்ன? ’தொடை’க்குலம் என்பது சரி தானே?

- நரசிம்மனே போற்றி!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP