Tuesday, May 18, 2010

நரசிம்மனுக்குத் தூது


ண்ணனைத் திருமணம் செய்து கொண்டாலும், அது கனவில் தானே? மின்மினி பறந்தது போல இருந்தது. அவள் நெஞ்சில் நிலையாக இல்லை!

அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும், தொடக்கத்திலேயே அவளிடம், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன், என்பது தெரியாது; ஆனால் வர வேண்டிய சமயத்துக்குச் சரியாக வந்துவிடுவேன்!' என்று சொல்லிச் செல்கிறான் கண்ணன்! ஆனால் வரவே இல்லை!

தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!

அவனுடன் பேசுவதற்கு, மற்றக் கலியுலகத்து ஆண்கள் மாதிரி, Mobile, Pre-Paid SIM Card வாங்கித் தரவில்லை அவன்! எனவே, அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, அவன் அருகிலேயே எப்போதும் இருக்கும் சங்கிடம் பேசுகின்றாள்.

பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கு, பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!

ஓடிய சங்கம், மீண்டும் வரவில்லை! கண்ணனும் வரவில்லை! சங்கு கண்ணனிடம் ஏதாவது சொல்லிற்றா என்றும் தெரியவில்லை! 'சங்கம், கண்ணனின் அந்தரங்கனானதால், அவன் சொன்னதை மட்டுமே கேட்கும், நான் சொன்னால் கேட்காது', என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள் பாவை.

சென்ற முறை பிரியும் தருணத்தில், மழைக் காலத்தில் கண்ணன் மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்! மழைக் காலமும் வந்தது. கருமை நிறக் கண்ணன் வரவில்லை. ஆனால் அவன் போல் நிறமுள்ள கருத்த மேகங்கள் முன்னே வந்து நின்றன!

கவலையுற்ற பாவை, மேகங்களை, திருவேங்கவனிடம் தூது அனுப்புகின்றாள்!

***
 
காலம் காலமாக, மன்னர்கள், காதலர்கள், மற்றவர்களும், தேவைப்படும்போது தூது அனுப்புவதை வழக்கமாகவே கொண்டு இருந்தனர்.

மன்னர்கள் அனுப்பும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தூதுவன் இன்னொரு அரசனிடம் செய்தி சொல்ல வேண்டிய முறை என, பல நியதிகள் தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.

தூதுவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று, நம் வள்ளுவனார் ஒரு அத்தியாயமே (69-தூது) வகுத்துள்ளார். மாதிரிக்கு, அதில் ஒன்று:

தொகச் சொல்லித, தூவாத நீக்கி, நகச் சொல்லி 
நன்றி பயப்பதாம் தூது.
குறள் 69-5

(காரண காரியங்களை எடுத்துச் சொல்லி, இன்னாத சொற்களை நீக்கி, கேட்பவர்கள் மனம் மகிழ உரைத்து, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து, தம் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதன் ஆவான்!)

தூது செல்பவன், நால்வகை உபாயங்களையும் (அறிவுறுத்துதல், கெஞ்சல், மிரட்டல், பொருள் கொடுத்தல்) கையாண்டு, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும்!


நம் எல்லோருக்கும் தெரிந்த முதல் தூதுவன் - தூதுவனுக்கு மிகச் சிறந்த உதாரணம் - அனுமனே (அனுமனுடைய தகுதிகளே வள்ளுவன் இந்த அத்தியாயம் எழுதக் காரணமாயிற்று என்றும் கூறப்படுவதுண்டு)!

மன்னர்கள், மனிதர்களையும், அனுமனைப் போன்றோரையும் தூது அனுப்பினாலும், காதலர்கள்/காதலிகள் தனிமையில் தவிக்கும்போது, தூது விடுவது மனிதர்கள் மூலம் அல்ல!

கிளிப்பத்து, குயில் பத்து, புறாக்கடிதம், மயில் பத்து, மேக விடு தூது, என்று, பதில் பேசாதவைகளைப் பல விதமாகத் தூது விடுபவர்களே நம் காதலர்கள்!


இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை,
பயன் பெறு மேகம், பூவை, பாங்கி,
நயந்த குயில், பேதை, நெஞ்சம், தென்றல்,
பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை.


(அன்னம், கிளி, மயில், மேகம், நாகணவாய்ப் பறவை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு, தோழி ஆகியோர் தூது செல்லத் தகுந்தவை)


மன்னர்களிடையே தூது செல்ல பெரும்பாலும் ஆண்களே அனுப்பப்பட்டாலும், ஒளவையார், அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது சென்று, போரை நிறுத்தியதாக வரலாறு உண்டு!

நம் பாவை, மேகத்தையும், குயிலையும் தூது விட, சில ஆழ்வார்கள், மற்ற பறவைகளையும், நெஞ்சத்தையும் தூது விட்டுள்ளனர்!

மதுரைச் சொக்கநாதர் அருளிய 'தமிழ் விடு தூது' எனும் நூல் (உ.வே.சாமிநாத ஐயர் தேடிக் கண்டுபிடித்தது) சற்று வித்தியாசமான தூதாக இருப்பது குறிப்பிடத் தக்கது!

***

மேகத்தைத் தூது விடுபவர்கள், ஏனோ, வெயில் கால வெண் மேகத்தைத் தூது விடுவதில்லை (அவை வெகுதூரம் செல்லாததால் இருக்குமோ?). மழை மேகத்தையும், பொழிகின்ற மழையையும் பற்றித்தான் எழுதுகின்றனர்!

மேக விடு தூதிலும், 'தலைவன் வருவான்' என்று மேகம் செய்தி கூறுதல், 'தலைவனிடம் போய்ச் சொல்' என்று தூது அனுப்புதல், இடியுடனும், மழையுடனும், மேகம் பதில் பேசுதல், போன்ற பல வகைகள் உண்டு!

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'திருநறையூர் நம்பி மேக விடு தூது' எனும் கலி வெண்பா இயற்றியுள்ளார் ('இது இவரால் எழுதப் பட்டது அல்ல' என்ற கருத்தும் உண்டு).

ஒரு தலைவி, திருநறையூர் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள நம்பி எம்பெருமான் மீது காதல் கொண்டு, 'நான் அணிந்து கொள்ள, நம்பியிடம் இருந்து துளசி மாலை வாங்கி வா' என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள்.

(200 கண்ணிகள் - சிறிய/பெரிய திருமடல்கள் போல் - கொண்டது. கலி வெண்பாக்களுக்கே உரித்தான கணக்கு விவாதம் - 400 வரிகளா, 200 கண்ணிகளா, 100 பாக்களா, எல்லாம் சேர்த்து ஒரே பாடலா? - இதற்கும் உண்டு. எது எப்படி இருந்தாலும், இதன் சொற்சுவையும், பொருட்சுவையும் மிகவும் நன்றாக உள்ளது)

பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில், ’கார் நாற்பது’ (மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது) எனும் சிறு நூல் உண்டு. மழைக் காலம் வந்து விட்டதை, நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் உரைக்கும். இது தூது உரைக்கும் நூல் அல்ல என்றாலும், ஒரு செய்யுள்,

கடும் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடும் காடு நேர் சினம் ஈன - கொடுங்குழாய்!
'இன்னே வருவர் நமர்!' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.
கார் நாற்பது-2

(சூரியன் வெப்பம் குறைந்து, மழைக் காலம் துவங்கி, காட்டில் எல்லாம், சிறு புல்கள் வளர, 'நம் தலைவர் இப்போதே வருவார்' என மேகம் தலைவர் அனுப்பிய தூதை அறிவித்தது என்று, தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)

'மழைக்காலம் ஆரம்பித்ததே, தூது உரைக்கத் தான்' என்ற பொருளில் வந்துள்ளது.


கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவனான காளிதாசன் எழுதிய 'மேகதூதம்' உலகப் புகழ் பெற்றது! தவறு செய்ததனால், குபேரனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறான்!

கலியுகமாயிற்றே! இவன் சொன்னால் மேகங்கள் உடனே தூது செல்லுமா? அவை தூது செல்வதற்கு, ஏதாவது Incentive வேண்டுமே!

'நீ போகும் வழியில், இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்து கொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்' என்று அவற்றிற்கு, போக வேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான்!

111 சந்தங்கள் கொண்ட இந்தக் காவியத்தை, Horace Hayman Wilson எனும் ஆங்கிலேயர், 1813-ஆம் ஆண்டு 'Megha Duta: The Cloud Messenger' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ('Water' படத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகின்றது).

மேகதூதம், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

***

வான் கொண்டு கிளர்ந்தெழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதற* திரண்டேறிப் பொழிவீர்காள்!*
ஊன் கொண்ட வள்ளுகிரால்* இரணியனை உடலிடந்தான்*
தான் கொண்ட சரிவளைகள்* தருமாகில் சாற்றுமினே.
நாச்சியார் திருமொழி 8-5

'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்'.

(ஊன் கொண்ட - சதைப் பற்றுள்ள, சக்தி வாய்ந்த; சரிவளை - கைகளில் இருந்து சரிந்து விழும் கைவளைகள்; சாற்றுமின் - சொல்லுங்கள்)

***

இந்தத் திருமொழியின் நான்காம் பாசுரம் வரை, 'மழை பொழியும் மேகங்கள்' என்று சாதாரணமாகக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்போது, 'கிளர்ந்து எழுங்கள்' (வான் கொண்டு கிளர்ந்தெழுந்த) என்கின்றாள்! எப்படி?

ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளர்ந்து எழ வேண்டுமாம்! இரணியனை வதைக்க நரசிம்மன் தூணில் இருந்து கிளர்ந்து எழுந்தது போல!


'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று திருப்பாவையில் சொன்ன அதே ஆண்டாள், இங்கு, மலர்கள் அழியும்படி, சிதறும்படி (தேன் கொண்ட மலர் சிதற) ’திரண்டு வந்து மழை பொழியும் மேகங்களே’ (திரண்டேறிப் பொழிவீர்காள்)' என்று சொல்கின்றாள்! ஏன்?

நரசிம்மன், இரணியன் உடன் வந்த அசுரர்கள் சிதறும்படி கிளர்ந்து எழுந்தானாம்! அது போன்று, திருமலையில், 'தேன் ஊறிக் கிடந்த மலர்கள் சிதறும்படி மழை பெய்ய வந்த மேகங்களே!' என்கின்றாள்!

அவை என்ன செய்ய வேண்டுமாம்?

'பிரகலாதன் கூப்பிடாமலேயே, அவனுக்காக, உன் வலிமையான (ஊன் கொண்ட) கைகளால், ஒரு இரணியனை அழிக்க வந்தாய்! ஆனால், நானோ உன்னை அழிக்க வரச் சொல்லவில்லை! என் கைவளைகளை (சரிவளைகள்) மட்டும் திருப்பித் தா! (தருமாகில்)' என்று நரசிம்மனிடம் சொல்ல வேண்டுமாம் (சாற்றுமின்)!

’கைவளைகள்’ என்று கூறாது, ‘சரிவளைகள்’ என்று ஆண்டாள் ஏன் கூற வேண்டும்? கண்ணனைப் பிரிந்த ஏக்கத்தினால், அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். கைகளில் இருந்த வளைகள், கையில் இருந்து சரிந்து விழுந்தன. அதையே கண்ணன் எடுத்துச் சென்றான்!


(’சரிவளை’- வினைத் தொகை = சரிந்த வளை, சரிகின்ற வளை, சரியும் வளை!)

"'சக்தியுள்ள கைகளால் இரணியன் உடலைக் கிழித்தாய்! அதே கைகளால், என் வளையைத் திருடிச் சென்றாய்! அதே கைகளால், என் கைகளில் வளைகளை மீண்டும் அணிந்து விடு!' என்று, நான் சொன்னதாக, திருவேங்கட மலையில் இருக்கும் நரசிம்மனிடம் சொல்" என்று மேகத்தின் மூலம் தூது விடுகின்றாள் ஆண்டாள்!

('வளைகளைத் திருப்பித் தா', என்பதன் உள் அர்த்தம், 'நீயே நேரில் வந்து, உன் கைகளால் என் கையில் அணிவித்தால் தான் நான் வளையல்களை அணிவேன்; அதற்காகவாவது, நீ நேரில் வரவேண்டும்' என்பதே!)

(இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது. அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் அனுபவத்தைப் பார்க்கலாம்)

- நரசிம்மன் வருவான்!

நரசிம்மன் கல்யாணம் - 2

 
(பாவை தன் கல்யாண வைபவத்தைத் தொடர்கிறாள் ...)


பாவை:
என்ன! இப்போதாவது, நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்னன்னு புரிஞ்சதா, இல்லே, இப்பவும் தூங்கிட்டயா?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!

பாவை: புரோகிதர்கள், கோவிந்தனை, என் வலது கால் கட்டை விரலைப் பிடிக்கச் சொல்லினர். உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்' என்றனர்!

இப்படி இரு தரப்பினரும் (விளையாட்டோ, நிஜமோ, தெரியாது) விவாதம் செய்து கொண்டிருந்த போது, கோவிந்தன், சடக்கென்று குனிந்து, தன் சிவந்த (செம்மை உடைய) வலது கையால் (திருக்கையால்), என் வலது கால் கட்டை விரலைப் பற்றி (தாள் பற்றி), அம்மியின் மேல் வைத்து (அம்மி மிதிக்க), இன்னொரு வேத மந்திரம் சொன்னான்!


தோழி: எதுக்குடீ அவன், உன் காலைப் பிடிக்கணும்?

பாவை: உறவினர்களின் மனதில், 'யார் உசத்தி?' என்ற எண்ணமே இருந்தது! ஆனால், கோவிந்தனோ, அவனிடம் சரணாகதி செய்த அடியார்க்கு அடியவன்! எனவே, உறவினர்களின் முடிவு பற்றிக் கவலைப் படாமல், அடியாரின் காலைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டதனால், என் காலைப் பிடித்தான்!

கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?


இப்படி, கௌரவம் பாராது, சரணடைந்தவர்களின் காலையே பிடிக்கும் அந்தக் கைகள் மட்டுமே 'செம்மை உடைய திருக்கை'! மற்ற கை எல்லாம் 'வெறும் கை' தான்!

தோழி: சரி, உன் காலைப் பிடித்தால் மட்டும் போதாதா? அம்மியில் ஏன் வைக்க வேண்டும்?

பாவை: நீ, கனவிலே, வருங்கால 'TV'-யிலே 'எங்கே பிராம்மணன் I' பார்த்திருந்தால் உனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கும்! இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோ! இதன் அர்த்தம் இது தான்!

  • 'நீ இந்த நிலையான அம்மியின் மேல் நில்!
  • நீ, இந்தக் கல்லைப் போல, எப்போதும் நிதானமாக, நிலையாக நில்!
  • நீ, எந்தப் பிரச்சனை வந்தாலும், இந்தக் கல்லைப் போல், நிதானமாக, எதிர் கொள்!
  • நீ, எத்தனை பேர் மிதித்தாலும், தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கும் இந்தக் கல்லைப் போல் இருந்து, என் குடும்பத்தை நடத்திச் செல்!
  • நீ மட்டும், இந்தக் கல்லில் மற்றவர் இடறித் தடம் புரண்டாலும், இந்தக் கல் போல, தடம் புரளாது நிதானமாக இரு!'

என்று விஷ்ணுவை வேண்டியும், எனக்கு அறிவுரை சொல்லியும் தான்!

தோழி:
டீ! எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்ன?

தோழி: முதல் இரண்டு வரிகளில், சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் ஏன் அம்மியைப் பற்றிச் சொல்கிறாய்?

பாவை: நல்ல கேள்வி! வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அம்மியைப் போல், நிதானமாக இரு என்று ஒரு பொருள்! இது, கல்யாணத்தில் மணப்பெண்ணுக்குச் சொல்வது!

ஆனால், எல்லோருக்கும் பொதுவாக,

'ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எப்போதும் (திருமணத்திற்கு முன்னும்), எந்தப் பிரச்சனை வந்தாலும், நாராயண பக்தியில் இருந்து, தடம் புரளாது, அந்த அம்மியைப் போல இரு'

என்று எல்லோருக்கும் சொல்லத்தான், இந்தப் பாசுரத்தில் சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் அம்மியைப் பற்றிச் சொன்னேன்!

தோழி: நீ 'அருந்ததி பார்க்க'வில்லையா?

பாவை: எங்கடீ, கேக்கலையேன்னு நினைச்சேன்!

மண நாளின் இரவில், சாந்தி முகூர்த்தத்தின் முன் தான், நாங்கள் இருவரும் வானத்தில் இருக்கும் நட்சத்திரமான துருவனைப் பார்த்து, 'அவனைப் போல் சக்தியுடனும் வைராக்கியத்துடனும்', இன்னொரு நட்சத்திரமான அருந்ததியைப் பார்த்து, 'நான் அவளைப் போல் கற்புக்கரசியாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவோம்! துருவனும், அருந்ததியும் நம் கண்ணுக்குத் தெரிவது, இரவில் தான்!

அம்மி மிதித்து, ’பகலிலேயே அருந்ததி பார்க்கும்' வழக்கம், பின்னாடி, ஒரே நாளில் கல்யாணம் முடிக்கும் வழக்கம் வந்தவுடன் தான் வந்தது! எனவே தான் இதைப் பற்றி இப்போது நான் பாடவில்லை!

***

நேகமாக, ஒவ்வொரு திவ்வியப் பிரபந்தத்திலும் ஒரு சரணாகதித் தத்துவப் பாசுரம் இருக்கும் - திருப்பாவையில், 'சிற்றஞ்சிறுகாலே' போல! ஒரு சிலர், 'நாச்சியார் திருமொழியில், ஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் இது' என்று கூறுவர்!

'நம்மை உடையவன் நாராயணன் நம்பி' என்று ஆண்டாள், அவனை மங்களாசாசனம் செய்கின்றாள்!!

அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், 8-வது பாசுரத்தில் ஆண்டாள் சொல்வது, இன்னொரு தனிச் சிறப்பு!

அவனன்றி நமக்கு வேறு வழி இல்லையாதலால், நாமும், குலசேகரனைப் போல, ஆண்டாளைப் போல, நரசிம்மனிடம் சரணாகதி அடைவோம்!

***

பாவை: அடுத்து, லாஜ ஹோமம் நடைபெற்றது!

தோழி: ஏய்! எனக்கு வடமொழி புரியாது! தமிழில் சொல்லுடீ!

(நம் பாவை, ஒரு தமிழ்ப் பாட்டு பாடுகிறாள்)

வரிசிலை வாள் முகத்து* என்னைமார் தாம் வந்திட்டு*
எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்து*
பொரிமுகந் தட்ட* கனாக் கண்டேன்!தோழீ நான்.
நாச்சியார் திருமொழி 6-9
 
தோழி: ஒண்ணு வடமொழி, இல்லேன்னா பழம் பாட்டு! தமிழ்ல சொல்லறயா?

பாவை: அழகிய வில் போன்ற புருவத்தையும் (வரி சிலை), ஒளி பொருந்திய முகத்தையும் உடைய (வாள் முகம்) என் அண்ணன் இராமாநுஜன் (என்னைமார்) ஹோம குண்டத்தின் அருகில் வந்து அமர்ந்து (தாம் வந்திட்டு), ....


தோழி: நிறுத்து, நிறுத்து! ஆரம்பமே குழப்புதே? பாசுரத்தில் அண்ணன் எங்கு வருகிறான்?

பாவை: 'என்னைமார்' என்று சொன்னேனே? 'என்னைமார் = என் + ஐ + மார்'! '' என்றால், 9-வது உயிரெழுத்து மட்டுமல்ல (9-ம் பாசுரத்தில் 9-வது உயிரெழுத்து சம்பந்தமான கருத்து, இன்னொரு சிறப்பு!)!

'' எனும் 'வார்த்தைக்கு', மென்மை, நுண்மை, கப வியாதி (Bronchitis), அரசன், தலைவன், ஆசான், தந்தை, தமையன், இரண்டாம் வேற்றுமை உருபு என்ற 9 (!!!) பொருள்/உபயோகம் உண்டு!

தோழி: போதுமடி தமிழ் இலக்கணம்! ஆனால் உனக்கு சொந்தத்தில் சித்தப்பா, பெரியப்பா முறையில் அண்ணன், தம்பி யாருமே கிடையாதே? திடீரென்று ஏதோ பேரைச் சொல்லி, அண்ணன் என்கிறாயே?

பாவை: எல்லாமே உனக்குச் சொல்லிக் கொடுக்கணுமா? முதலில், தமையன் என்றால், 'சும்மா அப்பாவின் சொத்தை வாரிசு என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போகலாம்' என்ற உரிமை உள்ளவன் மட்டும் இல்லை!

அப்பாவின் பின், அப்பா தன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது, தொடர்ந்து, அப்பாவின் இடத்தில் இருந்து செய்பவனே தமையன் ('தம் அய்யன்' என்று பிரித்தும் சொல்வதுண்டு)! உண்மையில் அப்படிச் செய்பவன், வயதில் சிறியவனாயாக இருந்தாலும், அவன் அண்ணனே! 
 
(எனவே, தம்பியாக இருந்தாலும், பொரியிடலாம் - ஆனால், பின்னால் கடமை அழைக்கும்!)

வயதில் இளையவனாக இருந்தாலும், இராமாநுஜன் என் தந்தை செய்ய வேண்டிய கடமையைச் செய்ததால், அவனை 'அண்ணன்' () என்றேன்! அவன் என் கல்யாணத்தில், ஹோம குண்டத்தின் அருகே வந்து உட்கார்ந்து, பொரியிட்டதாகவே கனவு கண்டேன்!

தோழி: 'உனக்கு அண்ணன்' என்று சொல்லுமளவுக்கு இந்த இராமாநுஜன் உனக்கு அப்படி என்ன செய்தான்?

***

(பாவை, மிகவும் உற்சாகமாகச் சொல்கிறாள்)

பாவை: இவனைப் பற்றிச் சொல்லி முடியாது! இவன், அஷ்டாக்ஷர மந்திரத்தை சாமானியருக்கும் உபதேசிக்கப் போகிறவன்; கலியுக தெய்வமான வேங்கடவனை நாராயணனாக நம் எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கப் போகிறவன்! கலியுகத்தில் வைணவம் தழைக்க ஆணிவேராக நிற்கப் போகிறவன்!

(ஆண்டாள் சொல்லாவிட்டாலும், என் போன்ற சாப்பாட்டு ராமன்கள் சொல்வது இது ... வைணவக் கோயில்களில் புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் நன்கு விளங்கச் செய்தவன் இவனே .. ஹி .. ஹி ..)
 
பின்னால் ஒரு பாசுரத்தில் நான், திருமாலிருஞ்சோலை அழகருக்கு (நாறு நறும்பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு), 'மந்த்ர புஷ்பம்' போல், நூறு தடாக்கள் நிறைந்த வெண்ணெயும் (நூறு தடாவில் வெண்ணெய்), இன்னும் நூறு தடாக்களில் (நூறு தடா நிறைந்த) அக்கார அடிசிலையும் (அக்கார அடிசில்), வாயாலே சொல்லிச் (வாய் நேர்ந்து) சமர்ப்பித்தேன் (சொன்னேன்)!

பாவை (மீண்டும், வருத்ததுடன்): ஆனால், உண்மையில் அங்கு போய் இதைச் செய்ய முடியவில்லை! என் அப்பாவாலும் செய்ய முடியவில்லை!

தோழி: அப்புறம்?
 

பாவை: இந்தப் பாசுரத்தைப் பின்னாளில் படித்த இராமாநுஜன், என்னால் இதைச் செய்ய முடியாததைக் கேள்விப் பட்டு, என் மணாளனான அழகருக்குச் செய்து வைத்தான், இந்த ராமாநுஜன்!

ஒரு கிலோ வெண்ணெய் 250/- ரூபாய் விற்கிற காலத்திலே, நூறு தடாவில் வெண்ணெயையும், நூறு தடாவில் அக்கார அடிசிலும், சொந்த அண்ணன் கூடக் கொடுக்க மாட்டான்! எனவே, இப்படி எனக்குச் சீர் செய்தவன், என் உடன் பிறவாவிட்டாலும், எனக்கு அண்ணன் தானே?

அதனாலேயே, பின்னர் ஒரு நாள் இராமாநுஜன் வில்லிபுத்தூர் வந்திருந்த போது, அவனை (விக்கிரகமாக இருந்தாலும்) ஒரு அடி முன்னே வந்து வரவேற்றேன்!

(ஆண்டாளுக்கு, தமையன்கள் இருந்ததாக, எந்தச் சான்றும் இல்லை. பாசுரத்தில் தமையன்கள் வந்தாலும், அது கனவில் தான்! இங்கு, இராமநுஜன் உட்கார்ந்ததாகச் சொன்னது அடியேன் சுவாரஸ்யத்திற்காகச் செய்த கற்பனையே!

ஆனால், திருமாலிருஞ்சோலை அழகருக்கு, இந்தப் பாசுரத்தைப் படித்து விட்டு, சீர் செய்ததன் காரணமாகவே குரு பரம்பரையும், திவ்விய சூரி சரிதமும், இராமாநுஜரை, ஆண்டாளுக்கு 'அண்ணன்' என்று குறிப்பிடுவது உண்டு!

'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்று ஆண்டாளைப் பற்றிய வாழித் திருமொழியின் உள்ளர்த்தமும் இதுதான்!

சர்க்கரைப் பொங்கல் எம்பெருமானுக்கு அமுது செய்யும் போது, இந்தப் பாசுரத்தை 2 முறை சொல்வது, இன்றும் பல வைணவ இல்லங்களில் நடைபெறுகின்றது - நீங்களும் சொல்லலாமே!)

***

(பாவை, தொடர்கிறாள்)

பாவை: இராமாநுஜன், நன்கு தீயை வளர்த்து (எரி முகம் பாரித்து), அக்னியின் முன் என்னை அமர வைத்தான் (முன்னே என்னை நிறுத்தி). இராமாநுஜன் என் கையில் பொரியை அள்ளி இட (பொரி முகந்து), நரசிம்மன் அதில் நெய் விட, நரசிம்மன் (அரிமுகன்) கைகளின் மேல் நான் என் கைகளை வைக்க (கைம்மேல் என் கை வைத்து), நான் பொரியை ஹோமத்தில் இட்டேன் (அட்ட)!


தோழி: ஏன் கோவிந்தன் திடீரென்று நரசிம்மனான்?


பாவை: 'அச்சுதன்' என்றால், கைவிடாதவன் என்று அர்த்தம்! இராமானுஜன் பொரியிட்டவுடன், என்னை கோவிந்தன் கையில் பிடித்துக் கொடுத்து, தன் கையை விட்டு விட்டான்! இவ்வாறு, மற்றவர்கள் எல்லோருமே கை விட்டாலும், கைவிடாதவன் இவன் ஒருவனே! நரசிம்மன் ஒருவனே, அடியவனைக் கைவிடாது, தூணிலே தோன்றியவன்!

 
இப்படி, அடியவர்களின் கைகளின் கீழே தன் கையை வைத்து (கைம்மேல் என் கை வைத்து), அடியவர்களைத் தாங்குபவனும் அவனே!

(அடியவர்களுக்கு அபயம் அளிப்பதில், எம்பெருமானை விட, தாயாருக்குத் தான் அதிக ஆர்வம் உண்டு என்பதையே, 'அவன் கைகளின் மேல் தன் கை உள்ளது' ’கைம்மேல் என் கை வைத்து’ என்று ஆண்டாள் சொல்வதாகப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்!)

எனவே தான், என்னைக் கைவிடாத இவனை, 'அரிமுகன்' என்று அழைத்தேன்! அச்சுதன்' என்றும் அழைத்தேன்!

தோழி: ஏன் பொரியை இட வேண்டும்? வேறு ஏதாவது தானியத்தை இட்டிருக்கலாமே?

பாவை: பரவாயில்லையே! உனக்குக் கூட நல்ல கேள்வி கேட்க வருகிறதே!

'இதுவரை, எங்கள் வீட்டுப் பெண்ணை, நாங்கள் நெல்லில் உள்ள அரிசியைப் போன்று, பொத்திப் பொத்தி வளர்த்தோம்! இன்று முதல், இவள் பொரிந்த நெல்லைப் போன்று, முதிர்ந்து, திருமணமாகி, உங்கள் வீட்டுப் பெண் ஆகி விட்டாள்!'

என்று, பொரியிடுவதன் மூலம் மறைமுகமாக என் அண்ணன்களும் இந்தக் கல்யாணத்தை ஒப்புக் கொள்கின்றனர்!

தோழி: பொரியிடும்போது மந்திரம் சொன்னார்களா?

பாவை: நீண்ட திருமண வாழ்க்கைக்காகவும், நல்ல குழந்தைகளுக்காகவும், பொறுமைக்காகவும், அக்னியை வேண்டியும், மந்திரம் சொன்னோம். கடைசியில், நான் அக்னியிடம், 'இனிமேல் பிறந்த விட்டுப் பந்தங்களை விட்டு, புகுந்த வீட்டுப் பந்தகளை ஏற்க, என்னை ஆசீர்வாதம் செய்!' என்று வேண்டினேன்!

இத்துடன், என் 'திருமணம்' முடிந்தது. என் இடுப்பில் கட்டியிருந்த தர்ப்பையை - 'வருண பாசத்தை' - எடுத்து விட்டேன். இப்போது நான், 'தர்ம பத்தினி' ஆனேன்!

***

தோழி: இருடீ! பந்தி போட்டுவிட்டார்கள்! சாப்பிட்டு வருகிறேன்!


பாவை: கனவிலும் இந்தப் புத்தி போகாதே உனக்கு? அடுத்த பாசுரத்தில் உனக்கு ஒரு Role உண்டு!

தோழி: நான் சாப்பிடுவதைத் தடுக்க இப்படி ஒரு வழியா?

பாவை: இவ்வளவு நேரம் பெரிய அலங்காரங்களுடன் அக்னியின் அருகே உட்கார்ந்திருந்ததால் வாடியிருந்த மென்மையான என் மேனியைக் குளிர்ச்சி அடையச் செய்ய, குங்குமமும், சந்தனமும் நீ தடவினாய் (குங்குகம் அப்பி, குளிர் சாந்தம் மட்டித்து)!

பின்னர், உறவினர்களும், மற்ற விருந்தினர்களும் புடை சூழ, நாராயணன் வந்திருந்த யானையின் மேல் (அங்கு, ஆனை மேல்), நானும் அவனும் ஏறி அமர்ந்து (அங்கு, அவனோடும் உடன் சென்று), ஊர்வலமாக அலங்கரித்த வீதிகளைச் சுற்றி (மங்கல வீதி வலம் செய்து), வசுதேவர் திருமாளிகைக்குச் சென்றோம்! இப்படியாக, கோலாகலத்துடன் எங்கள் க்ருஹப்ரவேசம் நடைபெற்றது!


அங்கு, எங்கள் இருவரையும், நல்ல வாஸனைத் திரவியங்கள் கலந்த நீரினால் (மண நீர்) என் புடவை நுனியையும், அவன் வஸ்த்திர நுனியையும் முடித்து வைத்து, எங்களை மண நீராட்டம் செய்தனர் (மஞ்சனம் ஆட்ட).

(யானையில் செல்லும்போதே ‘மண நீராட்டம்’ நடைபெற்றதாகவும் கேள்விப் பட்டதுண்டு! படமும் அதையே சொல்கின்றது!)

எங்கள் ஊர்வலத்தின் பின்னே, புரோகிதர்கள், புது வீட்டில் நான் நன்றாக வழ வேண்டும் என்று, ரிக் வேதத்தில் இருந்து பல மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

தோழி: போதுமடி உன் புராணம்! சீக்கிறம் முடிடி! பசிக்கிறது!

பாவை: சரிடி! இதற்கப்புறம், ப்ரவஸ்ய ஹோமம் (13 மந்திரங்கள் கொண்டது), ஜயாதி ஹோமம், சேஷ ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் மூலம், நாங்கள் தம்பதியராக 100 வருடங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அக்னியையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்தோம்!

இதன் பிறகே, நான் அவன் இடப் பாகமானேன் (அதுவரை, அவன் வலது புறமே அமர்ந்திருந்தேன்)!

பின்னர், ஒரு குழந்தையை மடியில் வைத்து, அதற்குப் பாலும் பழமும் நான் கொடுத்தேன்.

அதன் பின்னர், பிராயச்சித்த ஹோமம் நடைபெற்றது.

***

தோழி (திடீரென்று): ஏய்! பாருடீ! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள்! திருமண வாத்தியார்கள் கூட சாப்பிடப் போய்விட்டனர்! நாமும் போலாமடி?

பாவை: நீ போ! நான், கோவிந்தனுடன் வரேன்!

தோழி: பாத்தியா! தமிழ் சினிமா மாதிரி, கனவுல காதலன் வந்தவுடன் என்னைக் கழட்டி விடறயே!

பாவை: ஸாரிடி! ...

பாவை (மீண்டும்): என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!


தோழி: ஏய்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! அதுக்குள்ள எப்படிடீ குழந்தை பிறக்கும்? இது என்ன மேல் நாடா - Your Children and My Children Are Playing With Our Children - என்று சொல்வதற்கு?

பாவை: இந்த நக்கல் தானே வேணாம்கிறது! நான் சொன்னதற்கு அர்த்தம், 'உனக்கு நல்ல வரன் கிடைக்கும்! திருமணத்தின் பின், பிறகு நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பாய்! (வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே)' என்பதே!

உனக்கு மட்டுமல்ல! வில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வரின் (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) புதல்வியாகிய நான் (கோதை) கண்ட கனவினை (தான் கண்ட கனாவினை) வர்ணிக்கும் இந்தத் திருமொழியை (தூய தமிழ் மாலை) யார் சொல்லி வந்தாலும் (ஈரைந்தும் வல்லவர்) அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்!

(திருமணம் நடைபெற வேண்டுமென்றாலும், நல்ல குழந்தைகள் வேண்டுமென்றாலும், இந்தத் திருமொழியை ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் பலன் உண்டு என்று கூறப்படுகிறது!)


(இதை, மிகவும் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமைய, நரசிம்மனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்)

- நரசிம்மன் வருவான்!

நரசிம்மன் கல்யாணம்


'கல்யாணம் வரை சொல்லி முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவேன்' என்று பாவை, தன் தோழியிடம் தொடர்ந்து சொல்கிறாள் ...

***

தோழி: அந்தக் காலக் கல்யாணங்கள் 5 நாள்! அதைச் சொல்லவே நீ 5 நாட்கள் ஆக்காமல், கொஞ்சம் வேகமா சொல்லுடீ! பக்கத்து விட்டுப் பையன் பார்க்கில் சாயங்காலம் 5 மணிக்கு கண்ணாமூச்சி விளையாடக் கூப்பிட்டிருக்கான்!

பாவை: பொறாமையோ? மேலே கேளு! எங்கள் இருவரையும் மணப் பந்தலில், கிழக்கு முகமாக, ஹோம குண்டத்தின் முன், மணையில் உட்கார வைத்தனர்.

மாதவன் 3 மந்திரங்கள் மூலம், எனக்கு குடும்ப பாரத்தைச் சுமக்கும் சக்திக்காக சோமனையும், என் இளமைக்காக கந்தர்வர்களையும், என் அழகிற்காக அக்னியையும் பிரார்த்தித்தான்.

(சோமன், தன் மனைவி சூர்யாவுக்காக சோமனை - அதாவது தன்னையே - குறிப்பிட்டு மந்திரம் சொல்வது, அதிசயமானது!)

கோவிந்தன், 4 மந்திரங்கள் மூலம் (ரிக் 10.85.36-39) பகன், அர்யமா, சவிதா, இந்திரன், அக்னி, சுரியன், வாயு, சரஸ்வதி ஆகியோரை வணங்கி என் கையைப் பிடித்தான் (கைத்தலம் பற்ற)! என் கையுடன், 'இதயத்தை'யும் கொடுத்தேன்!

தோழி: இதயமா? நல்லெண்ணெய் ரொம்ப விலையாச்சே! அதையும் உன் அப்பா கொடுத்தாரா?

பாவை: அடி வாங்கப் போறே நீ! என் கை விரல்கள் ஐந்தையும், ஒரு குவிந்த தாமரை போல் சேர்த்து வைக்க, அவன் என் கைப்பற்றினான்! 'குவிந்த கைகள்' ஒரு முத்திரை! இது, இதயத்தைக் குறிக்கும்!


(கை விரல் நுனிகளில் நரம்புகள் முடிவதால், அதனைத் தடவிக் கொள்ளுதல், நரம்புகளை தளர்த்தி, மன அமைதியை அளிக்கும்; விரல்களைக் குவித்து வைத்து, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று சுமார் 5 நிமிடங்கள் தடவிக் கொள்வது, மனதை அமைதிப் படுத்தும் ஒரு உடல் பயிற்சியாகச் செய்யலாம்!)

***

பாவை: நல்ல நேரத்தில் - மத்தளமும் நாதஸ்வரமும் சேர்ந்து இசைக்க (மத்தளம் கொட்ட), நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத), புரோகிதர் மந்திரம் சொல்ல - மதுசூதனன் எனக்குத் தாலி கட்டினான்! இப்படியாக, மாங்கல்ய தாரணம் முடிந்தது! என் கனவில் என் வாழ்க்கைக் கனவு நிறைவேறியது!

(நல்ல நேரம் வந்ததை, 'மத்தளம் கொட்ட' என்பதன் மூலம் நம் பாவை குறிப்பிடுகிறாள்)

தோழி: உடனே எல்லாரும் மேடைக்குப் பாய்ந்து, கை குலுக்கிவிட்டு, சாப்பிடப் போயிருப்பார்களே?

பாவை: இது மட்டும் உனக்குத் நல்லா தெரியுமே?

தோழி: எவ்வளவு கல்யாணம் பார்க்கறேன்! கல்யாணக் காட்சின்னா, 'கெட்டி மேளம்', 'மாங்கல்யம் ...', தானே? அப்புறம் வயிறு தானே?

பாவை: கேலியை நிறுத்து! உண்மையில், 'மாங்கல்யம் ...' அது மந்திரமே இல்லை! அதற்கு அர்த்தம், 'இது மங்களகரமானது. இதை உன் கழுத்தில் நான் கட்டுகிறேன்! நீ என்னுடன், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க வேண்டும்'. தாலி கட்டும் போது, எந்தக் கடவுளையும் நினைத்து மந்திரம் சொல்வதில்லை!

தோழி: அப்படியா?

பாவை: எங்கள் கல்யாணத்தில், மிக முக்கியமானது இது இல்லை! அதுனால தான் இதைப் பற்றி நான் பாசுரத்தில் சொல்லலை!

தோழி: பின் எதுடீ முக்கியம்?

***

(பாவை தொடர்கிறாள்)

தோழி: ஏய்! தாலி கட்டியாகி விட்டதல்லவா? சீக்கிரம் கனவை முடிடீ!

பாவை: முக்கியாமன நிகழ்ச்சி வரலையே! அதற்குள் அவசரம் உனக்கு! வைதீகர்கள் (வாய் நல்லார்), நல்ல வேதங்களை ஓதினர் (மந்திரத்தால் நல்ல மறை ஓதி)! எங்கள் திருமணத்திற்கு, அந்த விஷ்ணுவும், அந்த அக்னியுமே சாட்சி!

(மறை 'ஓத' என்று இருக்க வேண்டும்! 'ஓதி' என்று பாசுரம் இட்டுள்ளாள் நம் பாவை. இது எச்சத் திரிபு!

'வாய் நல்லார் நல்ல மறை ஓத, காய்சின மாகளிறன்னான், மந்திரத்தால் பாசிலை நாணல் பரிதி வைத்து, என் கை பற்றி, தீ வலம் செய்யக் கனாக் கண்டேன்'

என்று பொருள் கொள்ள வேண்டும்!)

தோழி: ஏண்டி 'நல்ல மறை' என்கிறாய்? 'கெட்ட மறை'யும் இருக்கிறதா என்ன?

பாவை: வேதத்தில், முதலில் (பூர்வ பாகம்), யாகத்தின் வகைகள், அவைகளைச் செய்யும் முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. பின்னரே (உத்தர பாகம்), புருஷ சூக்தம் போன்றவற்றில், எல்லாவற்றிலும் உள்ளே உறையும் விஷ்ணுவின் ஸ்வரூப குணங்கள் சொல்லப் படுகின்றன. பெரும்பாலும், கல்யாண ஹோமத்தில் நாராயணனின் பெருமைகளைக் கூறும் புருஷ சூக்தமே முதலில் சொல்லப் படுகின்றது! இதைத் தான் 'நல்ல மறை' என்றேன்!

தோழி: Thanks-டி! இப்பதாண்டீ கனவில், நனவாக ஒன்று சொல்லி இருக்கே!

பாவை: பயங்கரக் கோபம் கொண்ட பெரிய யானை (காய் சின மா களிறு) போல் கம்பீரமான (அன்னான்) கண்ணன், அக்னி குண்டத்தைச் சுற்றி, பசுமையான இலைகளை உடைய நாணல் புல்லை (பாசு இலை நாணல்) , தரையில் காப்பாக வைத்து (படுத்து), வாசனை உடைய சின்ன மரக் குச்சிகளை (ஸமித்துகளை) வைத்து (பரிதி வைத்து), தன் வலது கையால் என் கையைப் பற்றி (என் கை பற்றி), தீயை வலம் செய்தான் (தீவலம் செய்ய)!


ஒரு அடி எடுத்து வைத்தவுடன், அவன் குனிந்து, தன் கையால் என் திருவடி பற்றினான்!

(அளவற்ற பலமும் சக்தியும் படைத்த எம்பெருமானும், தாயாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று இவள் சொல்கின்றாளோ?)

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், (திரும்பி, பின்னால் வரும்?!?) மஹா விஷ்ணுவின் மீது ஒரு மந்திரம் சொல்லி (யஜுர் அஷ்டகம்-3, ப்ரஸ்ந-7, பஞ்-89), எங்களை நன்றாக வைக்குமாறு வேண்டினான்! இப்படி, 7 முறை (ஸப்த பதி) செய்தோம்!

தோழி: அப்படி என்ன வேண்டினான் அவன்?

பாவை: நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!

- விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
- விஷ்ணு உனக்கு, 'மண வாழ்வு' இனிமையாக இருக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!

தோழி: ஆஹா! கேக்கறத்துக்கே நல்லா இருக்கே! நிஜமாவே இப்படி நடந்தா நல்லாயிருக்குமே!

பாவை: வேத முறைப்படி நடக்கும் கல்யாணத்தில், தீவலம் முடிந்த பிறகு தான் 'திருமணம்' முடிந்ததாகக் கணக்கு! கை குலுக்குதல், பரிசளித்தல் எல்லாம் இதற்குப் பின் தான் நடக்க வேண்டும்!

தோழி: இழுக்காம, மேலே சொல்லுடி!

பாவை: கண்ணன் தீயினில் நெய் விட, தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி, இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி, ஸவிதா, விஸ்வ தேவர்கள், வருணன், ஆகாஸ தேவதை) ஆசிகளைப் பெற, 'ப்ரதான ஹோமம்' எனப்படும் 16 மந்திரங்கள் கொண்ட ஹோமம் நடந்தது!

***

தோழி: எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்னடீ?

தோழி: இந்தக் கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே, 'வரும், ஆனால் வராது' எனும்படித்தானே இருக்கிறான்! ஒரு நாள் வந்தால், ஒரு மாதம் வருவதில்ல! கல்யாணத்தின் பின் ஓடி விட்டால்?

பாவை: இவ்வளவு தானா? நான் ஏதோன்னு பயந்துட்டேன்! கண்ணன், அக்னி சாட்சியாக, என்னைக் கைவிட மாட்டேன் என்று மந்திரம் சொல்லியுள்ளான்! அக்னியே கை விட்டாலும், விஷ்ணு சாட்சியாகச் சொன்னதால், கண்ணனால் என்னை விட முடியாது! விஷ்ணு சாட்சியாகக் கை கொடுத்ததால், என்னாலும் அவனை விட முடியாது!

தோழி: அதெப்படி?

பாவை: என்ன இப்படிக் கேட்டுட்டே? இந்தப் பிறவியிலும் (இம்மைக்கும்), 'ஏழேழ்' பிறவியிலும் (ஏழேழ் பிறவிக்கும்), அவன் நமக்குப் பிடித்தவனாயிற்றே (பற்றாவான்) நாராயணன்? நமக்கெல்லாம் உரிமையாளன் (நம்மை உடையவன்) ஆயிற்றே அந்த நாராயணன் (நாராயணன் நம்பி)! அந்த நாராயணனே ஒப்புக் கொண்டதால், யாராலும் கை விடமுடியாது!

தோழி: ஏழாம் வாய்ப்பாடில், 7x7=49 என்று வருமே? அந்த 49-ஆ? ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்ப்பா!

பாவை: உனக்குக் கணக்கு வரும்னு காட்டிக்கணுமாக்கும்?

மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்! ஆனால், நாராயணன் திருவடிகளைப் பற்றினால், நம் ஆத்மா உள்ள அளவும், கால தத்வம் உள்ள வரையிலும் நமக்கு பகவதனுபவம் உண்டு! இதைத் தான் 'ஏழேழ்' என்று சொன்னேன்!

நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு, ஒண்ணா ரெண்டா, எடுத்துச் சொல்ல?

தோழி: அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?

பாவை: ஏய்! 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்'னு, திருப்பாவையிலேயே சொன்னேனே? அப்போ தூங்கிட்டு இப்போ கேட்டா? சரி ... போனாப் போறது! இன்னொரு தடவை சொல்றேன்! ஆனால், நானே Repeat பண்ணறதுக்குப் பதிலா, குலசேகரரைச் சொல்லச் சொல்றேன்!

***

ரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்!

கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:

வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!

என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!

அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!

மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!


புட்கொடியானே! கடலில் செல்லும் கப்பலின் கூம்பு மேல் உள்ள பறவை, எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, கரையைக் காண முடியாமல், மீண்டும் அந்தக் கூம்பு மேல் வந்து உட்காருவது போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தாங்குபவன்-தாங்கப்படும் பொருள் உறவு)!

தாமரைக் கண்ணா! சூரிய கிரணங்கள் எவ்வளவு எரித்தாலும், சந்திரனுக்கு மலராது, சூரியனுக்கு மட்டுமே மலரும் தாமரையைப் போல் உனக்காகவே காத்திருப்பேன் (ஆண்டான்-அடிமை உறவு)!


மழைக் கண்ணா! எவ்வளவு தான் மழை பெய்யாமல் இருந்தாலும், மழை மேகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயிர்கள் போல, உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் (அறிபவன்-அறியப்படும் பொருள் உறவு)!

கடல் வண்ணா! ஆறுகள் எவ்வளவு வளைந்து, பாய்ந்து, நீண்டு ஓடினாலும், கடைசியில் கடலிடம் வந்து சேர்வது போல், உன்னிடமே வந்து சேர்வேன் (சொத்துக்கு உரியவன்-சொத்து உறவு)!

திருமகள் கேள்வா! செல்வம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவனிடம், அந்தச் செல்வமே தானாக வந்து சேர்வது போல், உன்னையே அடைய விரும்புவேன் (போகத்தை அனுபவிப்பவன்-போகப் பொருள் உறவு)!

எனக்கும், இந்த உலகத்தில் உள்ள வேறு எந்தப் பொருளுக்கும், ஒன்றோ, அல்லது, சில உறவுகளோ இருக்கலாம்! ஆனால், எனக்கு, உன்னிடத்தில் மட்டும் தான் இந்த 9 உறவுகள் அனைத்தும் ஒரு சேர இருக்கின்றன! எனவே, உன்னிடமே மீண்டும் மீண்டும் வருவேன்!

***

பாவை: என்ன! நமக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று இப்போதாவது புரிஞ்சதா ?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!
- கனவு தொடரும்!

Monday, May 17, 2010

கனவில் வந்த நரசிம்மன் - 1


தவி வேண்டுபவர்கள், மிரட்டி உதவி கேட்டால் வேலை நடக்குமா என்ன? அப்போது ஓடிய குயில், மீண்டும் அந்தச் சோலைப் பக்கமே வரவில்லை!

விரட்டியவளுக்கோ, சிறு நப்பாசை! ஒரு வேளை குயில் வேறு எங்காவது சென்று கோவிந்தனைக் கூவியிருந்தால்? அப்படியாவது கண்ணன் வரமாட்டானா என்ற ஏக்கம்! வெகு நாட்கள் ஆன பின்பும் கண்ணன் வராததால், குயில் கூவவில்லை என்று உணர்ந்தவள், திகைக்கிறாள்! வருத்தத்தில், மெலிகிறாள்!

நம் பாவையின் பர பக்தி, பரம பக்தியாகிறது!

காலம் கனிந்துவிட்டதை அறிந்த கண்ணன், அவளுக்குக் காட்சியளிக்கத் தீர்மானிக்கிறான்! எப்படி?

நினைவில் வந்தால், அவளுக்குச் சிறிது களிப்பு, பிறகு வருத்தம்!
கனவில் வந்தால், அவளுக்கு அதிக மகிழ்ச்சி, இரவு மட்டுமல்ல!
கனவில் வந்ததை அவள் நினைவெல்லாம் வரும், பகல் கனவும்!
கனவில் வந்தான், அவள் மணாளனாக , கண்ணனெனும் கள்வன்!

(நேரில் வந்தால் அந்த 'சந்தோஷ அதிர்ச்சி'யை அவளால் தாங்க முடியாது என்று அறிந்தே, கனவில் வந்ததாக விளக்கம் சொல்லப்படுவது உண்டு)

***

இடம்: அதே சோலை
காட்சி: பகல் காட்சி - கனவு

(பாவையும் தோழியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)


தோழி: என்ன, ரொம்ப குஷியாய் இருக்கே! அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டாரா?

பாவை: எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து!

தோழி: ஏய்! நேற்று வரை நல்லா தானே இருந்தாய்! உடம்பு சரியில்லையா?

பாவை: நேற்று இரவு ஒரு கனவு வந்தது! நாராயணன் என்னை முறையாகக் கல்யாணம் செய்தான்!

தோழி (சற்று குழம்பி): முறையாக என்றால்? புரியல ...

பாவை: ஒண்ணுமே தெரியாதா உனக்கு? நம்மாத்துக் கல்யாணம் பார்த்ததே இல்லையா?

தோழி (மழுப்பலாக): எனக்கு... எல்லாம் தெரியும்! இருந்தாலும், நீயே, உன் Style-ல் சொல்லிடேன்?

பாவை: சூரியன், தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்குத் (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதம் 10-வது மண்டலம், பகுதி 23/32/65/85-ல் உள்ளன. சில மந்திரங்கள், யஜுர் வேதத்தில் உள்ளன.

நாராயணனுக்கும் எனக்கும் நடந்த கல்யாணமும், இதையே பின்பற்றி நடந்தது!

தோழி: எல்லாமே ஒரே கனவிலா? இது Too-much! அப்புறம், அந்தச் சடங்குகள், மந்திரங்கள் ...?

***

வேத சம்பிரதாயமான திருமணத்தில், பல அங்கங்கள் உண்டு. முதல் அங்கம், வாக் தானம்.

மணமகன் (வரன்), கல்யாணம் நல்லபடியாக அமைய, தன் வீட்டுப் பெரியவர்களையும், அர்யமாவையும் (Lord of Cosmic order), பகனையும் (Lord of Blessings/Grace) வேண்டி, 2 மந்திரங்கள் (10.32.1, 10.85.23) சொல்கிறான்.

பின்னர் அவன் வீட்டுப் பெரியவர்கள் பெண் (வது) வீட்டிற்குச் சென்று, பெண் கேட்பர்.

பெண்ணின் தந்தை வரனை ஒப்புக் கொள்வது முதல், திருமணச் சடங்குகளும், ஏற்பாடுகளும் தொடங்கும்.

ஆண்டாள் கனவில், கண்ணன் திருமணக் காட்சி தந்த அதே சமயத்தில், பெரியாழ்வார் கனவில் தோன்றி 'ஸ்ரீ ஆண்டாளை அரங்கத்திற்கு அழைத்து வாரும், அவளை நாம் திருமணம் செய்து கொள்கிறோம்' என்று கூறியதாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள புரோகிதர்கள் சிலர் கனவிலும் வந்து, 'பெரியாழ்வார் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆண்டாளைப் பெண் கேளுங்கள்' என்று உத்தரவிட, 'வாக் தானம்' நடந்ததாகக் கூறுவர்.

திருமணம் முழுவதையும் கனவாகக் கண்டது பற்றித் தோழியிடம் விவரித்த ஆண்டாள், 'அரங்கன் வீட்டார் தன் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்கள்' என்று மட்டும் இத்திருமொழியில் சொல்லவில்லை. எனவே ஆண்டாள் இத்திருமொழியை அருளிச் செய்த போது, அரங்கன் பெரியாழ்வார் கனவில் வந்து பெண் கேட்கவில்லை என்று யூகிக்க இடமுள்ளது.

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' அருளிச் செய்த பிறகும், ஆண்டாள் 'கண்ணன் வரவில்லை' என்று, வேங்கடவனையும், திருமாலிருஞ்சோலை அழகரையும் வரச் சொல்லி, மேகங்களையும், பூக்களையும் தூது விடுகின்றாள். அதன் பிறகே, 'அரங்கனைக் காண வேண்டும்' என்று சொல்கிறாள். எனவே, அரங்கன் 'பெரியாழ்வாரிடம் பெண் கேட்கும் படலம் நடந்தது இன்னும் சில காலத்திற்குப் பிறகே' என்று இன்னொரு சாரார் கூறுவர்.

வேறு சிலர், பெரியாழ்வார் கனவில் அரங்கன் வந்தான்; ஆனால், திருவரங்கத்துப் புரோகிதர்கள் வர கால தாமதம் ஆகிவிட்டதால், அதைக் கூடப் பொறுக்காமல் ஆண்டாள் மீதித் திருமொழிகளை அருளிச் செய்ததாகக் கூறுவர்.

***

(கனவாடல் ... அதாங்க - கனவு + உரையாடல் .. .தொடர்கிறது ...)

பாவை: நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ (வாரணம் ஆயிரம் சூழ) வருகின்றான்!


தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது?

பாவை: எல்லாம் நந்தகோபருடையது! அவர் தன் எதிரிகளை அழிப்பதற்கு, யானைப் படையையே வைத்துள்ளாரே! 'உந்து மதகளிற்றன்' பாசுரம் சொன்னேனே, அதற்குள் மறந்து விட்டதா?

தோழி: சரி! சரி! அப்புறம்?

பாவை: தன்னைப் போலவே தன் தோழர்களையும் யானை மீது ஏற்றி, அவர்கள் சூழ்ந்து வர ஸ்ரீவில்லிபுத்தூர் தெருக்களை வலமிருந்து இடமாகப் பிரதக்ஷிணம் செய்து (வலம் செய்து) வருகின்றான்!

தோழி: தோழர்களும் யானைகள் மீதா?

பாவை: 'தம்மையே வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே ஒக்க அருள் செய்வர்' எனும்படி இருக்கும் 'நாரண நம்பி' ஆயிற்றே அவன்? தன் நண்பர்களையும், யானை மேல் ஏற்றிக் கொள்கிறான் (இப்போது, மாப்பிள்ளை தன் நண்பர்களையும், ஊர்வலத்தில் காரில் ஏற்றிக் கொள்வது போல்)!

தோழி ('கனவில் கூட நல்லாவே யோசிக்கறா இவ' என்று நினைத்து): மேலே சொல்லு!

பாவை: ஊரெங்கும் தோரணம் கட்டி, என் அப்பாவும், உறவினரும், என் தோழிகளும் (நீயும் தான்), பூரண கும்பங்களுடன் நாராயணன் எதிரே வந்து, அவனை வரவேற்றனர்!

தோழி: ஒரு வழியாக கனவு முடிந்ததா?

பாவை: இல்லடீ! இப்போ தான் ஆரம்பமே!

***

நாளை வதுவை* மணமென்று நாளிட்டு* 
பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தன் என்பான்* ஓர்
காளை புகுத* கனாக் கண்டேன், தோழீ! நான்.
நாச்சியார் திருமொழி 6-2

நாளை திருமணம் என்று நாள் குறித்து, பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் கனவு கண்டேன், தோழி, நான்!

(பாளை - பட்டை; கமுகு - பாக்கு மரம்; பரிசு - அழகு, பெருமை; கோள் - மிடுக்கு, ஒளி)

***

(நம் பாவை மீண்டும் தொடர்கிறாள் ...)

பாவை: நாளை திருமணம் (நாளை வதுவை மணம்) என்று பெரியோர்கள் நாள் குறித்தனர் (நாளிட்டு). குறிப்பிட்ட நல்ல நேரத்தில், நரசிம்மனும், மாதவனும் ஆகிய கோவிந்தன் (கோளரி மாதவன் கோவிந்தன்), பாக்கு மரப் பட்டைகளுடன் (பாளை கமுகு) அலங்கரிக்கப் பட்ட மணப் பந்தலுக்கு (பரிசுடைப் பந்தல் கீழ்) வந்தான்.


ராமாயணத்தில், சீதை, உப்பரிகையில் இருந்து, ராமன் எனும் சிங்கத்தை நேரில் பார்த்து வெட்கமடைந்தது போல நானும், கோவிந்தனை, வெட்கத்துடன் நேரிலே பார்த்தேன்!

(மிடுக்கும், ஒளியும் உள்ள முக அழகைப் பற்றிப் பேசும் போதும், நடந்து, பந்தலுக்குள் வரும் அழகையும் சொல்லும் போதும், ஆண்டாளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, நம் நரசிம்மன் தான்! மற்ற பெருமாள்கள் எல்லாம் அதன் பிறகே!

எனவே தான் இதையும் நரசிம்மன் பாசுரமாக அடியேன் கருதுகிறேன்! சிலர், இதை நரசிம்மர் பாசுரம் இல்லை என்பர்! அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை!)

தோழி ('முற்றி விட்டது' என்று நினைத்து): அதாவது, நேரிலே, கனவிலே, பார்த்தேன் என்கிறாய்!

பாவை: ஏய்! கிண்டல் வேண்டாம்! அப்புறம் நான் வீட்டுக்குப் போய் விடுவேன்!

தோழி: கோவிச்சுக்காதடி! மேலே சொல்லு!

பாவை: என் அப்பா, கோவிந்தனை கிழக்கு முகமாக உட்கார வைத்து, தன் வருங்கால மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே நினைத்து, அவன் திருவடிகளை அலம்பி விடுகிறார். பின்னர், கோவிந்தனுக்கு, சில வேத மந்திரங்களைச் சொல்லி, 'மது பர்க்கா' (தயிர், தேன், நெய் ஆகியவற்றின் கலவை) கொடுத்தார்!

(வேதங்கள், சூரியன், சோமனையும் விஷ்ணுவாகவே நினைத்து மந்திரங்களைச் சொன்னதாகக் கூறும்; இந்தச் சடங்கு, 'கன்யா தானம்' எனும் சடங்கின் ஒரு பகுதி.

சில வீட்டார், இந்தக் கலவையைக் கொடுப்பதில்லை!
)

***

பாவை: பின்னர் என்னை, பந்தலுக்கு அழைத்து வந்தனர்! இப்போது தான், முறையாக நேரில் கண்ணனைப் பார்த்தேன்!

தோழி (பாவை வெட்கப் படுவதைப் பார்த்து): கனவிலேயும் வெட்கம் வருமா உனக்கு?

பாவை: சும்மா இருடீ! மண்டபத்தில், இந்திரன் உட்பட (இந்திரன் உள்ளிட்ட) பல தேவர்கள் வந்திருந்தனர் (தேவர் குழாமெல்லாம் வந்திருந்து). அங்குள்ள தேவர்களும், முனிவர்களும், என்னை மாதவனுக்குத் திருமணம் செய்து (என்னை மகள் பேசி) கொடுக்க முடிவு செய்தனர்.

நானும் மாதவனும், எனக்கு இருக்கும் தோஷங்களைப் போக்க, பிரஹஸ்பதி, இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரங்கள் (Rg 10.85.44-47) சொல்லி வணங்கினோம் (மந்திரித்து).

இந்திரனிடம், பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்! அவர், எங்களைத் தம்பதிகளாக ஆசீர்வதித்தார்.

கண்ணன், என் தோஷங்கள் நீங்க, மந்திரங்கள் சொல்லி, தர்ப்பைப் புல்லால், என் புருவங்களில் தடவினான்.

(புரோகிதர் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, மணப் பெண்கள், பக்தியுடன் நன்கு திரும்பச் சொன்னால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்)

தோழி: பத்து பெற்றால், எப்படிடீ சமாளிப்பே நீ? இதிலே உனக்கு 'Buy-10-Get-11th-Free' வேறே!

பாவை: சும்மா வாயை மூடிண்டு கேளுடீ! நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான். பிறகு, எனக்கு மணமாலை அணிவித்தனர். இவ்வாறு, எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தது!


தோழி (Tension-னுடன்): Suspense தாங்கலை! கல்யாணம் நடந்ததா, இல்லையா?

***

பாவை: கண்ணன், என் வலது கையைப் பிடித்து, அக்னி குண்டத்தின் மேற்குப் புறம் மணையில் (பாய்) அமரச் செய்தான். அவனும் வடக்குப் புறம் அமர்ந்தான்.

மந்திரம் (Rg 10.85.26) சொல்லி, புஷனை (12 ஆதித்யர்களில் ஒருவன்) வணங்கி, என்னை கண்ணனின் வீட்டுத் தலைவி ஆக்குமாறு வேண்டினோம்.

தோழி: ம்ம்...

பாவை: நல்ல ஒழுக்கம் உடைய, வேதம் ஓதுகின்ற பிராம்மணர்கள் பலர் (பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்), பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் (நால் திசை) இருந்து, புனித நீரைக் கொண்டு (தீர்த்தம் கொணர்ந்து) வந்திருந்தனர்!

தோழி (ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக): எதற்காம்?

பாவை: எனக்கு மங்களாசாசனம் செய்யத்தான்! சவிதா, சூரியன், வருணன், தேவர்கள், புனித நதிகள் (Holy Waters) ஆகியோர் மீது 5 மந்திரங்கள் சொல்லி (எடுத்து ஏத்தி), எங்கள் மீது தெளித்தனர் (நனி நல்கி)! எங்கள் வீட்டுக் குழாயில் அன்று தண்ணீர் வராததால், என் மீது இன்னும் கொஞ்சம் நன்றாகச் தெளிக்கச் சொன்னேன்!

பின்னர், பலவித மாலைகள் அணிந்து, புனிதனாக வந்த கண்ணனுடன் (பூப்புனை கண்ணிப் புனிதனோடு) என்னைச் சேர்த்து வைத்தனர்.

தோழி: கண்ணன் புனிதனாக வந்தானா? எதற்கு?

பாவை: அதுவா! இவனோ, எப்போதும் காடுகளில் மாடுகளுடன் திரிந்து, வெண்ணை திருடித் தின்று உடம்பெல்லாம் அழுக்காய் இருப்பவன்! என் அப்பாவோ ரொம்ப ஆசாரம் ஆயிற்றே! சுத்தமா வரலேன்னா கல்யாணம் இல்லைன்னுட்டார்
 
(அமலனையே சுத்தமாக்கச் சொன்னவர் என்ற பெருமை பெரியாழ்வாரை மட்டுமே சாரும்)!
 
கண்ணன் நீராடி, மாலை தரித்து, கையில் தர்ப்பையுடன் ஆசாரமாக வந்தான்!

பின்னர், கண்ணன், என் இடுப்பில் தர்ப்பைப் புல்லால் காப்பு கட்டினான் (காப்பு நாண் கட்ட). என் கையிலும் காப்பு (கங்கணம்) கட்டினான்!


(இன்று சிலர் வழக்கத்தில், கையில் மஞ்சள் கயிறு மட்டும் காப்பாகக் கட்டப் படுகிறது)

***

பாவை: அவன் மீண்டும் மணப்பந்தலுக்கு வரும் போது, நீயும், பக்கத்து வீட்டு பத்மாவும், வேறு சில தோழிகளும் சேர்ந்து (சதிரிள மங்கையார்), சூரியன் போன்ற ஒளி உடைய மங்கள தீபங்களுடனும் (கதிரொளி தீபம்), பூர்ண கும்பங்களோடும் (கலசமுடன் ஏந்தி), எதிரே வந்து வரவேற்றீர்கள் (வந்து எதிர் கொள்ள)!


தோழி: நானா? நான் நேற்று என் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்! உன் கல்யாணத்திற்கு வந்து, கும்பமும் தீபமும் தூக்கிய நினைவு இல்லையே எனக்கு?

பாவை: அம்மா தாயே! கனவிலே, நீ வருங்காலத்தில் ரயிலைக் கூடத் தூக்கலாம்!! ... சும்மா குறுக்கே பேசாமல், மேலே கேள்! மதுரை மன்னன் (மதுரையார் மன்னன்), பாதுகைகளை அணிந்து கொண்டு (அடிநிலை தொட்டு) பூமி அதிரும் படி வந்தான் (அதிரப் புகுத)!

('கொடுத்தே பழக்கப் பட்ட வாமனன், யாசிக்க வந்ததனால், பதற்றத்தில் பூமி அதிரும்படி வந்தான்' என்று நஞ்சீயர் கூறுவது போலே, இங்கு கண்ணன் பூமி அதிரும்படி வந்தான் என்கின்றாள் நம் பாவை!)

(கண்ணனுக்கு, பரமபத நாதன் என்ற பெயரை விட, 'மதுரையார் மன்னன்' எனும் பெயர் அதிகம் பெருமை தரும்! பரமபதத்தை விட்டு, இங்கு வருவதைத் தானே அவன் விரும்பினான்? இதனால் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை' என்று தானே அவனை அழைக்கின்றாள்!

ஒரு வைணவர், வெண்ணைக்காடும்பிள்ளை சிலையை வைத்து, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அன்றிரவு அவர் கனவில் கண்ணன் தோன்றி, "என்னை 'நம்பி', 'பிம்பி', என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைக்காதே! ’மதுரை மன்னன்’ என்று கூப்பிடு" என்று சொல்லி மறைந்ததாக ஒரு கதை உண்டு!)

- சிம்ம சொப்பனம் தொடரும்!

நரசிம்மனைக் காணாத பாவையின் புலம்பல்
இடம்: தென் தமிழ் நாட்டில், ஒரு வீட்டு முகப்பு
காலம்: மாசி மாதத்தின் முதல் பகுதி
நேரம்: ஓடும் நேரம்

(நம் 'பாவை', தன் வீட்டின் வாசலில், புலம்பிக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்)
பாவை (தனக்குள்ளே): மார்கழி மாதம் நோன்பிருந்தால் வேண்டிய மணாளன் கிடைப்பான் என்று சொன்னார்களே? அதற்காகத் தானே 30 பாசுரங்கள் எழுதி, நோன்பு நோற்றேன்? தை மாதம் முடிந்து, மாசியும் ஆரம்பித்து விட்டதே? கண்ணனைக் காணோமே? வரட்டும், பேசிக்கறேன்!

(அப்போது, தெருவின் முனையில், ஒரு அழகன் வந்து கொண்டிருக்கிறான்)

பாவை (காதலன் வந்து விட்டான் என்று நினைத்து): வா! இப்போது தான் வழி தெரிந்ததா?

மன்மதன் (அருகில் வந்து): என்னம்மா! என்னை ஏன் கூப்பிட்டாய்!

பாவை (நிமிர்ந்து பார்த்து): சே ... நீயா? ... என்ன மன்மதா? என் காதலனோ என்று நினைத்தேன்! என்ன வேண்டும் உனக்கு?

மன்மதன்: ஓஹோ! உனக்குக் காதலன் உண்டா? யார்? பக்கத்துத் தெரு பத்மநாபனா?

பாவை: ம்ஹும்!

மன்மதன்: கோடி வீட்டுக் கோவிந்தனா?

பாவை: ஏய்! உளராதே! என்னை, மானிடர் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்க நினைத்தால், தற்கொலை தான்!

மன்மதன்: பின்னே? தேவர்கள், கந்தர்வர்கள், இவர்களில் யாரையாவது ....

பாவை: அந்த level-க்கு எல்லாம் நாங்கள் இறங்க மாட்டோம்! Straight-ஆ தல - அதான் ... அந்த வேங்கடவன் - அவன் தான் என் குறி!

மன்மதன்: பேராசை தான் உனக்கு!

பாவை: ஏன் இருக்கக் கூடாதா? ... சரி ... வந்தது தான் வந்தாய்! கேசவ நம்பிக்குக் கால் பிடித்து விடும் பாக்கியம் கிடைக்கும்படி, உன் கரும்பினால் ஏதாவது செய்யேன்?


மன்மதன்: அதுக்கு வேற ஆளைப் பாரு!

(ஓடி விடுகிறான் மன்மதன்)

***

இடம்: அதே ஊர்
நேரம்: பங்குனி மாதத்தில் ஒரு நாள்

('காமன் வரும் காலமான பங்குனி வந்த பிறகும் கண்ணன் வரவில்லையே!' என்று கோபம் கொண்ட அந்தப் பாவை, தன் தோழிகளோடு, ஆற்றங்கரைக்குச் சென்று மணல் வீடு - சிற்றில் - கட்டிக் கொண்டிருக்கின்றாள். 
இதற்கிடையில், 'நம்மை அடைவதற்கு, நாம் தானே உபாயம்! இவள் வேறு ஒரு தேவதையை - மன்மதனை - நாடும்படி நாம் நடந்து கொண்டோமே', என்று கண்ணன் வருந்துகிறான்; அவளைச் சமாதானப் படுத்த நினைத்து, ஆற்றங்கரைக்கு வருகின்றான்)


பாவை (கோபத்துடன்): நாங்கள் காமனுக்காகக் காத்திருக்கிறோம்! நாராயணா! நீ ஏன் இங்கு வந்தாய்!

(கண்ணன், பதில் பேசாமல் மணல் வீடுகளைத் தன் காலால் இடறி அழிக்க முற்படுகிறான்)

தோழிகள் (அனைவரும் சேர்ந்து): இன்று முழுவதும் முதுகு வலியுடன் நாங்கள் கட்டிய இந்த மணல் வீடுகளை ஏன் அழிக்க நினைக்கிறாய்! தீமை செய்யும் ஸ்ரீதரா! இதுவும் எங்கள் பாவமே!

(கண்ணன் மணல் வீடுகளை அழிக்கத் தொடங்குகிறான்)

ஒரு தோழி: கண்ணா! கஜேந்திரன் போன்ற மிருகங்களுக்கு இரக்கப் படும் நீ, மனிதர்கள் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா?

கண்ணன்: நீங்களோ என் மீது கோபப் படுகிறீர்கள்! நான் ஏன் உங்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்?

 
பாவை: கள்ள மாதவா! உன் மேல் எங்களுக்குக் கோபம் இல்லை! உன்னைக் காணாததால் உடல் நைந்து, உள்ளம் உருகி இருக்கிறோம், அவ்வளவு தான்!

(அப்படியும் கண்ணன் அதற்குள் ஓரிரு வீடுகளை அழித்து விடுகிறான்)

பாவை: நீ ஒரு கால், கடலின் மேல் அணை கட்டினாய்! அது உனக்குப் பெருமை! உன் காலால் வீட்டை அழிக்கிறாயே! இதனால் உனக்கு என்ன பயன்?

(அப்படியும் கண்ணன் கேளாமல், எல்லா மணல் வீடுகளையும் அழிக்கிறான்; வருத்தம் அடைந்த பாவையர் அனைவரும் கூடிப் பேசி, ஒரு முடிவுக்கு வருகிறார்கள் - தங்கள் வீடுகளுக்கு உடனே சென்று, கண்ணன் வர முடியாதபடி முன் கதவு, பின் கதவு இரண்டையும் பூட்டிக் கொள்வது என்று! அப்படியே செய்தும் விடுகிறார்கள். 
மூவுலக மண்ணையும் அளந்தவனுக்கு, வீடுகளில் புகுவதா கஷ்டம்? பாவையின் வீட்டில், முகம் காட்டி, அழகாய்ச் சிரித்துக் கொண்டு நிற்கின்றான்!)

பாவை (திடுக்கிட்டு): கோவிந்தா! நீ எப்படி உள்ளே வந்தாய்?


கண்ணன்: முற்றம் புகுந்து வந்தேன்!

பாவை: அங்கு எங்கள் சிற்றிலை சிதைத்தது போதாதா? ஏன் இங்கு வந்தாய்? உனக்கு இன்னும் எங்களிடமிருந்து என்ன வேண்டும்?

(கண்ணன், அதற்குப் பதிலாக, அவளை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொள்கிறான்)


பாவை: சீதை மணாளனே! சிற்றிலோடு, எங்கள் சிந்தையும் நீ கலைத்து விடுகிறாயே! இந்தப் பக்கம் வருபவர்கள், நம்மை இப்படிப் பார்த்தால் ஏதாவது சொல்வார்களே?

(பாவை சற்றே சிணுங்கினாலும், அவள் கோபம் மறைகிறது! ஒரு வழியாக, கண்ணனைப் பார்த்ததால் நிம்மதி அடைகிறாள்)

***

(கண்ணன், முன் பாசுரத்தின் முடிவில், பாவையருடன் கூடியதை அறிந்து, பெண்களை நிலவறையில் அடைத்து வைக்கின்றனர் பெற்றோர். அவர்கள் மெலிந்து விட்டதைப் பார்த்து, இரக்கம் கொண்டு பனி நீராட அனுமதிக்க, அவர்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கின்றனர்)

ஒரு தோழி (திடீரென்று): ஐயோ! நம் உடைகளில் பாதியைக் காணவில்லை!

(சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், மரத்தில் கண்ணன் உடைகளோடு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கின்றனர்)

கண்ணன்: அடைத்து வைக்கப்பட்ட நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? 
பாவை: அரவணை மேலாய்! பனி நீராட பெற்றோர்கள் அனுமதியுடன், இரவு முடியும் முன்னரே நீராடுவதற்கு வந்தோம்!

கண்ணன்: அப்படியெனில், சூரியன் எழும் வரை ஏன் இங்கு இருந்தீர்கள்?

பாவை: இனிமேல் இங்கு வரமாட்டோம்! எங்கள் துணிகளைக் கொடு!

(கண்ணன், திடீரெனக் கீழே குதித்து, மீத உடைகளையும் எடுத்துச் செல்கிறான்; அவன் இவர்களுடன் கூடி இருக்க நினைக்க, இவர்களோ உடைகளை எடுத்து சென்றுவிட நினைக்கிறார்கள்; அங்கே ஒரு 'மினி' பாரதம் நடக்கிறது)

தோழி: மாயனே! நீ எவ்வாறு இங்கே வந்தாய்? காளியன் தலையில் குதித்த மாதிரி, நீ கீழே குதித்து எங்கள் உடையைத் திருடலாமா? துணிகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: அப்படியென்றால், மேலே ஏறி வந்து ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!


(கண்ணனின் இந்தப் பேச்சை நம்பி, சில பாவையர் மேலே ஏறி வர, கண்ணன் அவர்களை உற்றுப் பார்த்து, புன்முறுவல் செய்கின்றான்)

ஒரு தோழி (வெட்கப்பட்டு): ராமா! இது என்ன சிறு பிள்ளைத்தனம்! ஒரு பெண்ணுக்காக இலங்கையை அழித்த நீ, பல பெண்களைத் தவிக்க விடுகிறாயே?

இன்னொரு பெண் (கோபத்துடன்): குரங்குகளுக்குத் தலைவனாக இருந்தவன் தானே நீ! அது தான் குரங்கு வேலை செய்கிறாய் இப்பொழுது!

பாவை (சமாதானமாக): கரிய பிரானே! மீன்கள் எங்கள் கால்களைக் கடிக்கின்றன! நாங்கள் தேள் கொட்டியது போல வேதனைப் படுகின்றோம்! நீரிலே நின்று நடுங்குகிறோம்!

கண்ணன்: நானும் நீங்கள் வெளியே வாருங்கள் என்று தானே சொல்கின்றேன்.

மற்றொரு தோழி: குடக் கூத்தனே! நீ நீதியற்ற செய்கையைச் செய்கின்றாய்! உன் விளையாட்டைத் தவிர்த்து, உடனே உடைகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: நீரில் அதிக நேரம் விளையாடியது நீங்கள் தான்! உங்களோடு பொழுது போக்கலாம் என்று அதிகாலையிலேயே நான் வந்து, இந்த மரத்தில் முடங்கிக் கிடந்து, நானல்லவோ வேதனைப் படுகின்றேன்? என்னைத் தவிக்க விட்டது நீங்கள் தான்!

ஒரு தோழி: ஊழி முதல்வா! எங்களுக்கும் உன்னுடன் விளையாட ஆர்வம் உண்டு! ஆனால், பெற்றோர்கள் பார்த்தால், வம்பு!

கண்ணன்: பெற்றோர்கள் பார்த்தால் என்ன? என் முறைப் பெண்களுடனும், நான் மணமுடிக்கும் வயதும் உள்ள தானே நான் விளையாடுகிறேன்?

பாவை: ஆயர் கொழுந்தே! உனக்கு மாமியார், பெரியவர் உறவு முறை உடையவர்களும் இங்கு இருக்கின்றனர்! ஆகவே, நீ இத்தகைய செயல்களைச் செய்யக் கூடாது!

கண்ணன்: என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து வந்திருந்தால், மாமியாரையும், மக்களையும் கூட்டிக் கொண்டா வருவீர்கள்?

பாவை (கோபப்படுகிறாள்): வெட்கம் கெட்டவனே! உனக்கு அந்த இருள், பிறந்ததில் இருந்தே உதவி செய்கிறது! உன் தாயாரும் உன்னைக் கண்டிப்பதில்லை! இல்லை, பூதனையின் பேய்ப் பாலை உண்டதனால் உனக்கு புத்தி பிசகிற்றோ?

(கண்ணன், போனால் போகிறது என்று, உடைகளைக் கொடுக்கிறான்; அதனால் பாவையர் கோபம் தணிந்து, கண்ணனிடம் சிறிது நேரம் கூடிவிட்டு, வீட்டிற்குச் செல்கின்றனர்)

***

ற்றங்கரையில், கண்ணனும், பாவையும், தோழிகளும் சேர்ந்திருந்தாலும், அப்போது சென்ற கண்ணன் மீண்டும் வரவில்லை!

வெகு நாட்கள் கழிந்து விடவே, பாவைக்கு கண்ணனைப் பிரிந்த ஏக்கம் அதிகமாகிறது! இவனைப் பார்ப்போமா, மாட்டோமா என்ற சந்தேகம் வருகின்றது! தரையில் வட்டம் போட்டு, 'ஒத்தையா இரட்டையா' விளையாடுகிறாள்!


தரையில், ஒரு பெரிய வட்டம்! அதில், பல மனம் தோன்றியவாறு, பல சுழிகள் - பெரியதும், சிறியதுமாக - போடுகிறாள்!

எத்தனை சுழிகள் என்று எண்ண ஆரம்பிக்கின்றாள்! இரட்டையாக் வந்தால், (கண்ணனுடன் சேருகின்ற) காரியம் கை கூடுமாம்! ஒத்தையாக வந்தால், காரியம் கைகூடாது! கண்ணன் வரமாட்டானாம்!
(இதற்கு, ’கூடல் இழைத்தல்’ என்ற பெயர் உண்டு)
இப்படி, அந்தக் 'கூடலை'ப் பார்த்துப் பேசுகின்றாள் நம் பாவை!

- திருமாலிருஞ்சோலை அழகன் திருவடிகளில் அடியேன் சேவகம் செய்ய முடியுமென்றால், கூடிடு!
- வேங்கடவனும், கண்ணபுரத்தானுமானவன் வந்து என் கை பற்றுவான் என்றால், கூடிடு!
- தேவகி, வசுதேவரின் மகன் வருவானென்றால், கூடிடு!
- காளியன் மேல் நடமாடிய கூத்தன் வருவானெனில், கூடிடு!
- குவலயாபீடத்தை உதைத்தவன், நம் தெருவுக்கு வந்து என்னுடன் கூடிவானாகில், கூடிடு!
- கம்சனைக் கொன்ற மதுரையரசன் வருவானெனில் கூடிடு!
- சிசுபாலன், பகாசுரன் போன்றோர்களை அழித்தவன் வருவானெனில் கூடிடு!
- கன்று மேய்ப்வன் வருவானென்றால் கூடிடு!
- அடி ஒன்றினால் உலகளந்தான் வருவானெனில் கூடிடு!
- கஜேந்திரனுக்கு துயர் தீர்த்தவன், என் துயர் தீர்க்க வருவானெனில், நீ கூடிடு கூடலே! 
'கூடல்' என்ன செய்தது?

***

த்து முறை கூடலைக் கேட்டும், அது பதில் சொல்லவில்லை (ஒவ்வொரு முறையும், 'ஒத்தை'யாகவே வந்தது!)

'கூடலுக்கு உயிரில்லை; எனவே அது நான் சொல்லியதைக் கேட்கவில்லை! என்னுடனும் பேசவில்லை!'


தனக்குத் தானே அறிவுரை சொல்லி, தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறாள், காதல் தலைக்கேறிய அந்தப் பாவை!

சரி, இனிமேல், உயிருள்ளது, அறிவுள்ளது ஒன்றின் காலில் விழலாம் எனத் தோன்றுகிறது!

விழுகின்றாள் நம் பாவை! எம்பெருமான் குழலூதும் போது, அருகே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றது, வார்த்தை கேட்டால் சில சமயங்களிலாவது பதில் சொல்லும் பழக்கம் உடையதும், சிறிது அறிவுள்ளதுமான - குயிலின் காலில்!

***

இடம்: அருகே ஒரு சோலை
காட்சி: குயில் பத்து

பாவை: குயிலே! மாதவனை நினைத்து ஏங்கி, இளைத்து, என் வளையல் தொலைந்து விட்டது! என் பவள வாயனை வரச் சொல்லு!

(குயில், தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு, அங்கேயே நிற்கிறது)

பாவை: உன்னை இங்கே நிற்கச் சொல்ல வில்லை! என் உயிர், வேங்கடவனைக் காணாமல், தத்தளிக்கின்றது! நீ விளையாடாமல், வேங்கடவனிடம் என் நிலைமையைச் சொல்லிக் கூவ வேணும்!

குயில்: க்க்.. க்க்... க்.. க்க்க்.. கூஊ (இவ்வளவு நாள், எனக்கு ஒரு கைப்பிடி பழைய சாதம் கூடப் போடாமல் வெறுப்பேத்தினாயே! இப்ப மட்டும் உனக்கு நான் வேணுமாக்கும்?)

பாவை: த்ரிவிக்கிரமனை, இங்கே வரும்படி கூவினால், உனக்கு, இனிய சோறும், பால் அமுதும் தந்து வளர்த்த என் கிளியை நட்புக் கொள்ளச் செய்வேன்!

குயில்: க்கி... க்.. க்க்க்க்... (கிளிக்குப் பால் சோறு, எனக்கு மட்டும் பழைய சோறா?)

பாவை: நீ இருடீகேசனை வரச் சொன்னால், என் தலையை உன் காலடியில் வைப்பேன்! அவன் வந்தவுடனே அவனை நான் கவனிக்க வேண்டி இருக்கிறது!

குயில்: கு.. கு.. கு.. கு.. (அவன் வந்தவுடனே நீ ஓடிப் போயிடுவே! நான் உக்காந்து பஜனை செய்வதா?)

(நயமாகச் சொல்லியும், உதவி செய்வதால் கிடைக்கும் பலன்களைச் சொல்லியும், சரணாகதி அடைந்தும், குயில் கேட்காததால், மிரட்டுகிறாள்)

பாவை: இப்போது வாமனனை நீ அழைக்கவில்லை என்றால், உன்னை இந்தச் சோலையில் இருந்து துரத்தி விடுவேன்!

மிரட்டலைக் கேட்ட குயில் என்ன செய்தது?

- குயில் பத்து தொடரும்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP