Sunday, May 9, 2010

ஆராவமுதனின் அறிமுகம்


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
ஸ்ரீமத் அபிநவ வாகீச ப்ரம்மதந்த்ர பரகால மஹாதேசிகாய நம:
ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேசிகாய நம:


பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரி ரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணோஸ்மி நித்யம்
- ஸ்ரீ பராசர பட்டர்


உலகம் யாவையும்* தாமுள வாக்கலும்*
நிலை பெறுத்தலும்* நீக்கலும் நீங்கலா*
அலகிலா விளையாட்டுடையார்* அவர்
தலைவர்* அன்னவர்க்கே சரண் நாங்களே!
-கம்ப நாட்டாழ்வார்


இந்த உலகினில் வாழ்கின்ற ஸாதுக்களையும், நல்ல மனிதர்களையும் பாதுகாக்கவும், தீய மனிதர்களை அழிக்கவும், தர்மத்தைக் காப்பாற்றவும், யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்.
- கண்ணன், கீதையில்

ஸ்ரீமந் நாராயணன் நமக்காக எடுத்த அவதாரங்களையும், அவன் குணாதிசயங்களையும், வேதங்கள், புராணங்கள், காவியங்கள் போன்றவை நமக்குக் காட்டுகின்றன.

தெய்வ மொழிகளான தமிழிலும், ஸமஸ்க்ருதத்திலும் வாய் வழியாக, எப்பொழுதோ சொல்லப்பட்ட இவை, நமக்கு ஞாபகம் வருமா என்ன - நேற்று சொன்னது இன்றும், தேர்தலுக்கு முன்னால் சொன்னது தேர்தலுக்குப் பின்னாலும் எல்லோருக்கும் (குறிப்பாக, சொன்னவர்களுக்கு :-) வேண்டுமென்றே மறந்து விடுகிறதே?

இவற்றை யார் நமக்கு ஞாபகப் படுத்துவது?
 
***

ந்த 'நினைவூட்டல்வேலைக்கு, எம்பெருமான், தான் தேவையில்லை என்று நினைக்கின்றானோ அல்லது தன்னால் மட்டும் முடியாது (!!) என்று நினைக்கின்றானோ அல்லது உலகம் திருந்தியது போதாது என்று நினைக்கின்றானோ என்னவோ?

தான் வருவதோடு நின்றுவிடாமல், அவ்வப்பொழுது தன்னுடைய திருமேனியை அலங்கரிக்கும் அணிகலன்களையும், வைகுந்தத்தில் தம்மிடம் இருப்போரையும் (நித்தியசூரிகள்) பூமிக்கு அனுப்பி வைக்கின்றான்.

தமிழ் நாட்டிற்கு யார் வந்தனர்?
 
***

மக்கு நன்மை செய்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த நித்தியசூரிகளே பன்னிரண்டு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்.

ஒரு சில ஆசாரியர்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் இருவரையும் ஆழ்வார்கள் என ஒப்புக்கொள்வதில்லை (ஆகா! ... வந்தவுடனே நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டாயா!!).

'ஆழ்வார்கள்' என்ற சொல்லுக்கு, எம்பெருமானின் கல்யாண குணங்களிலே 'ஆழமாக ஈடுபட்டவர்கள்' என்று பொருள். இவர்கள், தாம் அனுபவித்தது மட்டுமல்லாது, பிரபந்தம் எனும் எளிய தமிழ்ப் பாசுரத் தொகுப்புகளால் இந்த அனுபவத்தை உலகிற்கும் தந்தவர்கள்.

அவர்கள் பிறந்த மாதம், நட்சத்திரம் முதலியவை சரியாகத் தெரிந்தாலும், அவர்கள் பிறந்த வருடங்கள் தெரியவில்லை.

வைணவ சமய நூல்களில் குறிப்பிட்டுள்ள ஆழ்வார்கள் காலமும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ள ஆழ்வார்களின் காலமும் பொருந்தவில்லை (இப்பத்தானே ஆரம்பிச்சீங்க ... அதுக்குள்ள இன்னொண்ணா?).

ஆழ்வார்களின் அவதாரங்கள் முடிந்தவுடன், பிரபந்தங்களும் வழக்கில் இல்லாமல் மறந்து போயின.

பின், நமக்கு எப்படி பிரபந்தங்கள் தெரிந்தன?
 
***

இடம்: காட்டுமன்னார்குடிக்கு அருகிலுள்ள வீரநாராயணபுரத்தில் மன்னார் கோயில் வளாகம்
நேரம்: ஒரு நாள் மாலை
காலம்: சுமார் கி.பி. 850 முதல் கி.பி. 900 க்குள்

(தந்யாசி ராகத்தில், ஆதி தாளத்தில், ஒரு இனிய தமிழ்ப் பாட்டு கேட்கிறது)

*ஆரா அமுதே!* அடியேன் உடலம் நின்பால் அன்பாயே* 
நீராய் அலந்து கரைய உருக்குகின்ற* நெடுமாலே* 
சீரார் செந்நெல் கவரி வீசும்* செழுநீர்த் திருக்குடந்தை* 
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!...

கோயில் வளாகத்தில், சில வைணவர்கள், தங்களை மறந்து, பாடிக் கொண்டு இருக்கின்றனர். கோயில் அர்ச்சகரான நாதமுனிகள் அவர்களுக்கு அருகில் சென்று, பாசுரத்தின் இனிமையையும், வளத்தையும் மிகவும் கவனமாகக் கேட்கிறார்.

*உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு* அவளை உயிருண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மானேய் நோக்கியர்க்கே.

(கேட்டு மெய்மறந்து நின்றவருக்கு, பாட்டு நின்றவுடன், நினைவு திரும்புகிறது)

'மிக அருமையாக இருக்கிறதே இது, எழுதியவர் யாரோ?' என்று நினைத்தவருக்கு, சட்டென்று, மனதுக்குள் ஒரு மத்தாப்பு!

இந்தப் பாசுரங்களை, மனமுருகப் பாடியவர்கள் அருகே செல்கின்றார், நாத முனிகள்.

நாதமுனிகள்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

வைணவர்கள்: நாங்கள் மேல் நாட்டைச் (மேலக் கோட்டை திரு நாராயணபுரத்தைச்) சேர்ந்தவர்கள். இந்த ஊரில் உள்ள வீரநாராயணப் பெருமாளைச் சேவிக்க வந்தோம்.

(இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன)

நாதமுனிகள்: நீங்கள் பாடிய பாடலின் கடைசியில், 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று வருகிறதே? ஆயிரமும் உங்களுக்கு வருமா?

வைணவர்கள்: இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்.

நாதமுனிகள்: உங்கள் நாட்டிலாவது யாருக்காவது இந்த ஆயிரமும் தெரியுமோ?

வைணவர்கள்: அப்படி ஒருவரும் இல்லை.

நாதமுனிகள்: உங்களுக்கு இதைக் கற்றுத் தந்தது யார்?

வைணவர்கள்: பரம்பரையாக இந்தப் பாடலை ஊர்க் கோயிலில் பாடுவோம். அவ்வளவு தான்.

நாதமுனிகள்: பாடலில்குருகூர்' என்று வருகிறதே! குருகூரில் உங்களுக்கு உறவினர் யாராவது உண்டா? அவர்களுக்காவது தெரியுமா?

வைணவர்கள்: எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அங்கு சென்றதும் இல்லை, இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் இல்லை.

(ஒரே நிமிடத்தில், மனதில் தோன்றிய மத்தாப்பு, தீபாவளி மழையில் நனைந்த மத்தாப்பு ஆகிவிட்டது:-(.

***

(சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ...)
 
நாத முனிகள் (தனக்குத் தானே): எப்படியாவது இந்த ஆயிரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் ... பாடலில் 'குருகூர்ச் சடகோபன்' என்று வந்ததே! குருகூருக்குச் செல்ல வேண்டியது தான் ... வேறு வழியே இல்லை ...

(நாதமுனிகள் திருக்குடந்தை சென்று அங்கு விசாரித்ததாகவும், அங்கிருப்போர், தெரியவில்லை என்று சொல்ல, வேறு வழியின்றி, குருகூர் சென்றதாகவும் கதை உண்டு

அடியேன் தேடியவரையில் கிடைத்த பெரும்பான்மைக் கருத்தையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்)

***

இடம்: குருகூர் (ஆழ்வார் திருநகரி), ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை

வழிப்போக்கன் (திண்ணையில் அமர்ந்து இருப்பவரிடம்): சடகோபர் வீடு எங்குள்ளது?

ஊர்க்காரர்: எந்தச் சடகோபர்? இந்த ஊரில் அப்படி யாரும் இல்லையே!

சிறிது மௌனம் ...

 
ஊர்க்காரர் (மீண்டும்): நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்?

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபரைப் பார்க்க வேண்டும்.

ஊர்க்காரர்: சரி ... என்ன விஷயமாக?

நாதமுனிகள்: இந்த ஊரில் சடகோபன் என்பவர், எம்பெருமான் மீது ஆயிரம் பாட்டுக்கள் எழுதியதாகக் கேள்விப் பட்டேன். அவரிடம் இருந்து கற்கலாம் என்று வந்தேன்.

ஊர்க்காரர் (வருத்தத்துடன்): ! அவரா? அவர் சென்று பல நூறு ஆண்டுகள் ஆகின்றதே! இப்போது வந்தால் எப்படி?

நாதமுனிகள் (ஏமாற்றத்துடன்): அவருக்குச் சீடர்கள் இங்கு யாராவது உண்டா?

ஊர்க்காரர்: இங்கு, மதுரகவி ஆழ்வார் என்பவரின் சீடர் பரம்பரையில் வந்தவரான 'பராங்குச தாஸர்' என்பவர் இருக்கிறார். அவருக்குத் தெரிந்திருக்கலாம். எதற்கும் அவரைச் சென்று பாருங்கள்.

***

இடம்: பராங்குச தாஸரின் வீடு
நேரம்: அன்று மாலை

வழிப்போக்கன் (வீட்டுப் பெரியவரைப் பார்த்து): பராங்குச தாஸரைப் பார்க்க வேண்டும்.

பெரியவர்:
அடியேன் தான்! நீங்கள் ...

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபர் எழுதிய 1,000 பாட்டுக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு வந்தேன். அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று, ஊரில் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். எனவே உங்களைப் பார்க்க வந்தேன்.

பராங்குச தாஸர் (உசுப்பேத்திக்கிட்டே இருக்காங்கப்பா' என்று நினைத்து): யார் சொன்னது? அடியேனுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் எதுவும் தெரியாது.

சிறிது மௌனம் ..
 
பராங்குச தாஸர்: ஆனால், எனக்கு, மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' எனும் பிரபந்தத்தில் உள்ள பதினொன்று பாசுரங்கள் தெரியும்.

நாதமுனிகள் (தனக்குள்): என்னடா இது ... மளிகைக் கடைக்கு வந்தாற் போல் இருக்கிறது - கடலைப் பருப்பு இருக்கா? என்று கேட்டால், 'இல்லை' என்று சொல்லாமல், ’துவரம் பருப்பு இருக்குஎன்கிறாரே இவர் ... அதுவும் விலை அதிகமாச்சே ...

நாதமுனி (பெரியவரிடம்): இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யட்டும்?

பராங்குச தாஸர் (சற்று உரக்க): கிட்ட வாங்கோ ... ஒரு ரகசியம் சொல்கிறேன் ...

நாதமுனிகள் (தனக்குள், இது என்ன 'Dhoosraa'? என்ற் எண்ணி): அது என்ன?

பராங்குச தாஸர் (அருகில் வந்து, மெதுவாக): நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து 12,000 முறை இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களைச் சேவித்தால் நம்மாழ்வார் தோன்றுவார். அப்படி அவர் தோன்றினால், அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள்ளுங்கள்.

நாதமுனிகள் ('இதுவாவது கிடைத்ததே' என்று எண்ணி): சரி பராங்குஸ தாஸரே! இதை அடியேனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பராங்குச தாஸர்: உள்ளே வாரும், முதலில்.

***

நாதமுனிகள் நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து, தியானம் செய்யநம்மாழ்வார் அவர் முன் தோன்றுகிறார்.

நம்மாழ்வார்: நாதமுனியே! உமக்கு என்ன வேண்டும்?

நாதமுனிகள்: வணக்கம்! அடியேனுக்கு தாங்கள் அருளிச் செய்த 1,000 பாசுரங்கள் வேண்டும்.

நம்மாழ்வார்: அப்பனே! நீ கேட்டதைக் நான் கொடுப்பதற்கு முன்னால் நீ திருவிலச்சினை அணிய வேண்டும்.

நாதமுனிகள், வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாத மாணவனைப் போல் 'Mr. Mr.' என விழிக்கிறார்.

நம்மாழ்வார் திடீரென்று அருகில் வந்து, இரண்டு தோள்களிலும் ஏதோ வைக்க, ’ஆஆஆஎன்ற அலறல் கேட்கிறது ...

சற்று நேரம் கழித்து ...
 
நம்மாழ்வார்: உனக்கு யாம் சங்கு, சக்கரம் (திருவிலச்சினை) அணிவித்தோம். இன்று முதல் நீ எம்பெருமானின் சீடன். உனக்கு என்ன வேண்டும் கேள்!

நாதமுனிகள்: தாங்கள் எழுதிய 1,000 பாசுரங்கள்!

நம்மாழ்வார்: அது 1,000 அல்ல. 4,000.

நாதமுனிகள் (தோள் வலியுடன்): ஏதோ ஒண்ணு! சீக்கிரம் கொடுங்கள்!

நம்மாழ்வார்: நாலாயிரம் தானே! இந்தா பிடி!

நாதமுனிகள் (தயங்கி): ... இதற்கு ... எவ்வளவு ....

நம்மாழ்வார் (இடையில் புகுந்து):
காசா, பணமா? பாடல் தானே! சும்மா வைத்துக் கொள். நம் காலத்தில்காப்புரிமைஎதுவும் கிடையாது. இதை நீயும் எல்லோருக்கும் சும்மா கொடுக்கலாம். ஆனால் வாங்கியவர்கள், பிற்காலத்தில், அரிசி யோகா, போல் இதையும் வேறு நாடுகளுக்கும எடுத்துச் சென்று, கூறு போட்டுக் காசு பார்த்தால் அதற்கு யாம் பொறுப்பில்லை.

(
நம்மாழ்வார் மறைகிறார்)

சரி, நீங்களும் 12,000 முறை இடைவிடாமல் தியானம் செய்யத் தயாரா ?

(ஆளை விடுங்கப்பா!’ என்று நீங்கள் எல்லோரும் ஓடுவது, அடியேன் வீட்டு ‘Live TV'-யில் தெரிகிறது)?

***

வ்வாறு, முதல் வைணவ குருவான நாதமுனிகள், ஒரு வழியாக நாலாயிரத்தையும் பெற்று, அவற்றை முறைப் படுத்தி, தனது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் நமக்குக் கிடைக்கச் செய்துள்ளார். இந்த நாலாயிரத்தை, 'தமிழ் மறை' என்றும் கூறுவர்.

நாதமுனிகள் கொடுத்த நாலாயிரத்திற்கும், இன்று வழக்கில் இருந்து வருகிற நாலாயிரத்திற்கும் சில கணக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன (ஐயோ! திருந்தவே மாட்டாங்களா?).

முதலில் நம்மாழ்வார் கூறிய நாலாயிரத்தில் எதுவும் விடப்படவில்லை.

ஆழ்வார்கள், தங்கள் பிரபந்தங்களில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 கோயில்கள் (திவ்விய தேசங்கள்) மீது பாடியுள்ளனர். அவதாரங்களில், கண்ணன், இராமனைப் பற்றியே அதிகமான பாசுரங்கள் காணப்பட்டாலும், நரசிம்மாவதாரமும் பல பாசுரங்களில் கூறப்படுகின்றது.

எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஒரு தமிழ் வணக்கத்துடன், ஆழ்வார்கள் அனுபவித்த அந்த நரசிம்மனை, அவர்கள் பாசுரங்கள் மூலம் நாமும் அடுத்த தபாலில் இருந்து அனுபவிக்கலாம்!

***

6 கருத்துகள்:

மதுரையம்பதி said...

வணக்கம் ரங்கன் சார்.....தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்...ஒருமுறை ராகவ் உடன் வந்து சந்திக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா, முதல் இடுகைக்கு மெளலி அண்ணாவின் முதல் பின்னூட்டமா? அருமை!
ரங்கன் அண்ணா, நீங்க ராசியான கைகள் கிட்ட இருந்து தான் முதல் பின்னூட்டம் வாங்கி இருக்கீங்க! :)

மெளலி அண்ணா,
இந்தப் பதிவுகள் எல்லாம் ரங்கன் அண்ணா முன்பே பந்தலில் இட்டவை தான்! இங்கிட்டு தொகுத்து வைக்கிறார்!
அடுத்த பதிவில் என்ன சஸ்பென்ஸ்-ன்னு காண ஆவல் என்றால், பந்தலில் வாசித்து விடுங்கள்! :)

ரங்கன் அண்ணா,
இடுகை மட்டுமல்லாமல், அங்கு அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களையும் இங்கே தொகுத்து வைக்கலாமே?
இறைவனைப் பேசுவது பதிவு!
அடியார்கள் பேசினது பின்னூட்டங்களில்!
இரண்டுமே இங்கும் இருக்கட்டும்!

Rangan Devarajan said...

//வணக்கம் ரங்கன் சார்.....தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்...ஒருமுறை ராகவ் உடன் வந்து சந்திக்கவும் ஆவலாக இருக்கிறேன்.//

தங்கள் ஆசிகளுக்கு நன்றி மௌலி அவர்களே! இன்னும் வலைத் தளத்தை அமைத்து முடிக்கவில்லை.

Rangan Devarajan said...

கே. ஆர். எஸ்

தங்கள் காலடித் தடம் பட்டதற்கு நன்றி. I am blessed.

//இடுகை மட்டுமல்லாமல், அங்கு அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களையும் இங்கே தொகுத்து வைக்கலாமே?
இறைவனைப் பேசுவது பதிவு!
அடியார்கள் பேசினது பின்னூட்டங்களில்!
இரண்டுமே இங்கும் இருக்கட்டும்!//

’Maayaa’ Agreement with Yahoo, மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது (Paid Service இது). அதனை, Blogspot-க்கு மாற்ற நினைத்தேன் - ஆராவமுது தொடங்கியது!

இன்னும் வலைத் தளத்தை அமைத்து முடிக்கவில்லை. அங்கிருந்த பதிவுகளை எப்படி இங்கு கொண்டு வருவது என்ற முயற்சி தான் இது.

'Import' செய்தால் எல்லாம் வரும்; Cut & Paste செய்ததன் விளைவு இது.

மதுரையம்பதி said...

ரங்கன் சார், உங்களைவிட நான் சிறியவனாகத்தான் இருப்பேன்...'அவர்களே', ஆசி என்பதெல்லாம் வேண்டாமே?, ப்ளீஸ்..

மேற்கொண்டு ப்ளாகை செப்பனிடும் போது, வேர்ட் வெரிபிகேஷனையும் தூக்கிடுங்க...ரொம்ப படுத்துது...:)

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP