Sunday, May 16, 2010

நம்பன் நரசிம்மன்


பெரியாழ்வாரின் திருக்கோட்டியூர் பெருமையும், புராணமும் தொடர்கின்றன ...
 
***

கொம்பின் ஆர் பொழில்வாய்* குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்*
செம்பொன் ஆர் மதில் சூழ்* செழுங்கழனி உடைத் திருக்கோட்டியூர்*
நம்பனை நரசிங்கனை* நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான் தன் சின்னங்கள்* இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே.
நாவகாரியம் 4-4-9

கிளைகள் நிறைந்த சோலைகளிலே, குயில் கூட்டங்கள் கோவிந்தன் குணம் பாடுகின்ற இரைச்சலும், சுத்தமான பொன் பொருந்தியுள்ள மதில் சுவர்களாலே சூழப் பெற்றதும், வளம் மிகுந்த வயல்களை உடையதும் ஆன திருக்கோட்டியூரில் வாழும் கடவுளான நரசிம்மனைத் துதிப்பவர்களைக் கண்டால், 'இவர்களே எம்பெருமான் இருப்பதன் அடையாளம் என்று நினைத்து, என் ஆசைகள் தீரப் பெறுவேன்'.

(கொம்பு - மரக் கிளை; ஆர் - நிறைந்த, பொருந்திய; சீர் - இரைச்சல், பாட்டுச் சத்தம், சீரான; நம்பன் - கடவுள்)

மரமில்லாது கிளையா? மரங்களா, அல்லது கிளைகளா? ஆழ்வார் குழம்பி விட்டாரோ?
 
***

ரங்களும், புதர்களும் அடர்ந்து இருந்தால் அது காடு! அங்கு குயில், மயில் போன்ற பறவைகள் இருந்தாலும், கழுகு போன்ற பறவைகளும் உண்டு. பயங்கர மிருகங்களும் இருப்பதால், மனிதர்களும் இருக்க மாட்டார்கள்!

மரங்கள் மிகவும் அதிகமில்லாமல், ஆனால், கிளைகள் அதிகமாகப் படர்ந்து, அங்கு நிழல் அதிகமாக இருந்தால் மட்டுமே அது சோலை! இங்கு தான் மயிலும், குயிலும் அழகாகப் பாடும்! மனிதர்களும் ஓய்வு எடுக்க இயலும்!

இப்படிப்பட்ட சோலைகள் அதிகம் இருப்பதாலேயே, 'மரம் ஆர் பொழில்' என்னாமல், 'கொம்பு ஆர் பொழில்' என்கின்றாரோ ஆழ்வார்?

திருக்கோட்டியூர் கோயில் மதிலில் தங்கம் இருக்கின்றதாம்! ஊரில், செழுமையான வயல்களும் இருக்கின்றதாம்!

அடியேன் இரண்டு வருடங்களுக்கு முன் (கோயில் மதிலில் உள்ள தங்கத்தை கொஞ்சம் சுரண்டி எடுக்கலாம் என்று ஆசைப்பட்டு) திருக்கோட்டியூர் சென்ற பொழுது மதிலில் தங்கமே இல்லை (இது வரைக்கும் தங்கத்தை விட்டு வைத்திருப்பார்களா என்ன?)!

தங்கம் உள்ள மதிலும் திருக்கோட்டியூருக்கு ஒரு சிறப்பு தானே?

***


விட்ட கதையை மீண்டும் தொடலாமா?

மந்தர மலைக்கு சென்று தவம் செய்து, இரணியன் பிரமனிடம் இருந்து வரங்களைப் பெறுகிறான். இவன் பெற்ற வரங்களை, பாகவதம், கம்ப ராமாயணம் வாயிலாக ஏற்கனவே நாம் குறிப்பிட்டாலும், செவ்வை சூடுவாரின் பாடலையும் பார்த்து விடலாம் (ஒரே ஒரு பாடல் தான்)!

பங்கயப் பொகுட்டின் மேலான் படைத்தன தம்மின் மாளான்;
அங்கண் வானுலகின், மண்ணின், அகத்தினில், புறத்தினில் துஞ்சான்;
கங்குலும், பகலும் மாயான்; கனல் உமிழ் படையின் பொன்றான்;
வெங்கண் வாள் அவுணன் பெற்ற வரனை என் விளம்புகேம் ஆல்.
1624

பாகவதத்திலோ, நரசிம்ம புராணத்திலோ, விஷ்ணு புராணத்திலோ, கம்பராமாயணத்திலோ, சூடுவார் பாகவதத்திலோ, இரணியன் முதலில் 'சாகா வரம்' கேட்டதாகக் கூறப்படவில்லை (தன் தாய்க்குக் கூறும் உபதேசத்தில், 'பிறந்தால் கட்டாயம் இறக்க வேண்டும்' என்றும் சொல்கிறான்).

இப்படி வரம் பெற்ற இரணியன், மூவுலகிலும் யாராலும் அழிக்க முடியாத அரசனாக, 71 சதுர் யுகங்கள் ஆள்கிறான்.

அதுவரை? தேவர்கள்? பாவம்!
 
***

இடம்: ஒளிந்திருக்கும் இடம்
நேரம்: பயப்படும் நேரம்

(இரணியனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள், உதவியை நாடி, கைலாயம் செல்கின்றனர்)

தேவர்கள்: ஈசனே! சரணம்!

ஈசன்: ஏம்பா தவம் செய்யும்போது தொந்தரவு பண்ணறீங்க!

தேவர்கள்: பிரபோ! இரணியன் லொள்ளு தாங்க முடியலை!

ஈசன்: வரம் கொடுத்த பிரம்மாவிடம் போங்க! நானும் கூட வந்து நல்லா நாலு வார்த்தை கேக்கறேன்!

(எல்லோரும் பிரமனிடம் செல்கின்றனர்)

பிரமன்: வாருங்கள் ஈசனே! தேவர்களே! இன்னும் யாருக்காவது நான் வரம் கொடுக்கணுமா?


இந்திரன்: ஐயோ! இனிமேல் நாங்கள் யாருக்கும் 'Recommendation'-க்கு உங்களிடம் வரமாட்டோம்!

பிரமன்: பின்னே இப்போ எதுக்கு வந்தீங்க?

இந்திரன்: வரம் கொடுத்தா மட்டும் போதுமா? அதிலிருந்து மீள வழியை யார் சொல்லுவாங்களாம்?

பிரமன்: என் வேலை வரம் கொடுப்பது மட்டும் தான்! காக்கும் கடவுள் தான் உங்களைக் காக்க வேண்டும்!

(கை விரிக்கிறார் அவர்)

ஈசன்: வாருங்கள்! எல்லோரும் பரந்தாமனிடம் செல்வோம்!

(பாற்கடலில், இவர்கள் பிரச்சனையைக் கேட்கிறார் நாராயணன்)


பரந்தாமன்: இரணியன் ஆதிக்கம் எங்கும் உள்ளது. அவன் ஆதிக்கம் எங்கும் இல்லாத இடம் சொல்லுங்கள்! அங்கு சென்று ரகசியமாய்ப் பேசி முடிக்கலாம்!

பிரமன்: பூவுலகில், கதம்ப முனிவர் தவம் செய்யும் வனம் தான் அவன் ஆதிக்கம் இல்லாத இடம்! அங்கு மட்டும் தான், அவர் செய்யும் தவத்தால் எப்போதும் நாராயண நாமம் ஒலிக்கின்றது!

பரந்தாமன்: வாருங்கள்! எல்லோரும் அங்கு செல்வோம்!

(எல்லோரும் கதம்ப வனத்திற்குச் செல்கின்றனர்)

***

இடம்: கதம்ப வனம்
நேரம்: கூட்டம் கூடும் நேரம்

(கதம்ப வனத்தில், எம்பெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருக்கிறார்; ஆனால், மும்மூர்த்திகளும் இங்கு! அவர்களுடன் அங்கு, முப்பத்து முக்கோடி தேவர்களும்! எல்லோரும் அருகே இருந்தும், அவர்களைப் பார்க்கத் தவம் செய்கிறார் கதம்ப ரிஷி!)

(சிறிது நேர உரையாடலின் பின் ...)

பரந்தாமன்: அவனுடைய முடிவை நான் செய்யப் போகிறேன். அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

(அருகில் இருக்கும் சங்கு கர்ணனைப் பார்த்து)

நீ சென்று இரணியன் மனைவி வசந்தமாலையின் வயிற்றில் பிரகலாதனாகப் பிற!

முற்றிலும் அடங்கியவனாகிய தன் புதல்வனும், என் பக்தனுமாகிய பிரகலாதனுக்கு எப்பொழுது இரணியன் துரோகம் செய்கிறானோ, அப்போது வரங்களால் பலமுள்ளவனகிலும், நான் தோன்றி, இரணியனைக் கொல்வேன்'.

(இதைக் கேட்ட தேவர்கள் ஆரவாரம் செய்கின்றனர்!)

ஏற்கனவே, மரக்கிளைகளில் உள்ள குயில்கள் கோவிந்தனின் குணம் பாடுவது சத்தமாக இருக்கும்! இப்பொழுது, 33 கோடி தேவர்களும் ஆரவாரம் செய்தால் எப்படி இருக்கும்?

(ஆஹா ... போட்டுட்டான்யா நச்சுன்னு நங்கூரத்த ... கதைக்கும், பெரியாழ்வார் பாசுரத்தில் வரும் மரக்கிளைக்கும், குயில்களுக்கும்!’ என்று நினைக்கிறீர்களா?)

அதுக்குத் தான் பெரியாழ்வார் போன பாசுரத்திலேயே, எல்லாம் ‘Adjust' ஆயிரும்னாரே! ஹி ... ஹி ...

***

வங்க இருந்து பேசின இந்தக் கதம்ப வனம் தாங்க நம்ம திருக்கோட்டியூர்!

நரசிம்மாவதாரம் துவங்கியது இங்க தானுங்க! தூணில் இல்லீங்க!

மேலே கூறிய கதை வருவது, ப்ரம்ம வைவர்த்த புராணம், மற்றும் பிர்ம்மாண்ட புராணத்தில் (பாகவதத்திலும், நரசிம்ம புராணத்திலும் இல்லை)!

இந்தத் தலத்தின் பழைய பெயர், திரு + கோஷ்டி + ஊர். அதாவது, திரு (மும்மூர்த்திகள், தேவர்கள்) கோஷ்டியாய் (கூட்டமாய்) இருந்த ஊர்!

மும்மூர்த்திகளும் இங்கு இருந்ததால், இந்த ஊரின் பெயர், திருக்கு + ஓட்டி + ஓர். அதாவது, பாவங்களை ஓட்டக் கூடிய ஊர்!

இரணிய வதம் முடியும் வரை, தேவர்கள் இங்கு ஒளிந்து இருக்கின்றனராம்! பின்னர் தவம் கலைந்த ரிஷி, இந்திரனிடமிருந்து நடந்ததை அறிகிறார்.

இந்திரன், அவர் வேண்டியதற்கு இணங்க, விஸ்வகர்மா, மயன் இருவரையும் அழைத்து, தேவலோகத்தில் இருப்பது போன்ற அஷ்டாங்க விமானத்தை இங்கு அமைத்துக் கொடுக்கிறான்! மூன்று அடுக்குகள் கொண்ட இந்த விமானம் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி! தனிக் கலை அமைப்பு!

இந்த விமானத்தின் வடபகுதியில், இரணியனைக் கொன்ற நரசிம்மன் உருவமும் (வடக்காழ்வான்), தென் பகுதியில், இரணியனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும் (தட்சிணேஸ்வரன்) உள்ளன. இவை, காண்போரைப் பிரமிக்கச் செய்யக் கூடியவை!

கோயிலின் உற்சவர் சௌம்ய நாராயணன், மற்ற கோயில்களின் உற்சவர்களைப் போல் பஞ்ச லோகத்தில் இல்லாது, தூய வெள்ளியில் இருக்கின்றார்! இது, கதம்ப ரிஷிக்கு இந்திரன் அளித்ததாக ஐதீகம்!

இந்தப் பெருமை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

***

'ம்பனை, நரசிங்கனை' என்கிறார் ஆழ்வார்!

நம்பன்’ என்றாள், கடவுள்! ஆனாலும், இவனை நம்பியவர்களான பிரகலாதன், கஜேந்திரன், திரௌபதி போன்றோரை, கூப்பிட்டவுடன் உடனே காக்கின்றானாம்! எனவே, இவன் ‘நாம் நம்பத் தகுந்தவன்' என்கிறாரோ ஆழ்வார்?

கோயிலின் முதல் தெய்வம் நரசிம்மன்! எனவே, நம்பனை, நாராயணனை என்னாது, 'நம்பனை, நரசிங்கனை' என்கின்றார் ஆழ்வார்!

தான் எம்பெருமானைப் பார்க்காவிட்டாலும், நரசிம்மனைப் பாடுபவர்களைக் கண்டால், 'அவன் இருக்கின்றான்! இவர்களே அவன் அடையாளங்கள்! இவர்களைப் பார்த்தால், அவனைப் பார்த்தது போல் ஆயிற்று! என் ஆசைகள் தீரும்' என்று, பாகவதர்களின் ஏற்றத்தையும் கூறி, பாசுரத்தை முடிக்கிறார்!

- நம்பனே சரணம்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP