Monday, May 17, 2010

கனவில் வந்த நரசிம்மன் - 1


தவி வேண்டுபவர்கள், மிரட்டி உதவி கேட்டால் வேலை நடக்குமா என்ன? அப்போது ஓடிய குயில், மீண்டும் அந்தச் சோலைப் பக்கமே வரவில்லை!

விரட்டியவளுக்கோ, சிறு நப்பாசை! ஒரு வேளை குயில் வேறு எங்காவது சென்று கோவிந்தனைக் கூவியிருந்தால்? அப்படியாவது கண்ணன் வரமாட்டானா என்ற ஏக்கம்! வெகு நாட்கள் ஆன பின்பும் கண்ணன் வராததால், குயில் கூவவில்லை என்று உணர்ந்தவள், திகைக்கிறாள்! வருத்தத்தில், மெலிகிறாள்!

நம் பாவையின் பர பக்தி, பரம பக்தியாகிறது!

காலம் கனிந்துவிட்டதை அறிந்த கண்ணன், அவளுக்குக் காட்சியளிக்கத் தீர்மானிக்கிறான்! எப்படி?

நினைவில் வந்தால், அவளுக்குச் சிறிது களிப்பு, பிறகு வருத்தம்!
கனவில் வந்தால், அவளுக்கு அதிக மகிழ்ச்சி, இரவு மட்டுமல்ல!
கனவில் வந்ததை அவள் நினைவெல்லாம் வரும், பகல் கனவும்!
கனவில் வந்தான், அவள் மணாளனாக , கண்ணனெனும் கள்வன்!

(நேரில் வந்தால் அந்த 'சந்தோஷ அதிர்ச்சி'யை அவளால் தாங்க முடியாது என்று அறிந்தே, கனவில் வந்ததாக விளக்கம் சொல்லப்படுவது உண்டு)

***

இடம்: அதே சோலை
காட்சி: பகல் காட்சி - கனவு

(பாவையும் தோழியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)


தோழி: என்ன, ரொம்ப குஷியாய் இருக்கே! அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டாரா?

பாவை: எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து!

தோழி: ஏய்! நேற்று வரை நல்லா தானே இருந்தாய்! உடம்பு சரியில்லையா?

பாவை: நேற்று இரவு ஒரு கனவு வந்தது! நாராயணன் என்னை முறையாகக் கல்யாணம் செய்தான்!

தோழி (சற்று குழம்பி): முறையாக என்றால்? புரியல ...

பாவை: ஒண்ணுமே தெரியாதா உனக்கு? நம்மாத்துக் கல்யாணம் பார்த்ததே இல்லையா?

தோழி (மழுப்பலாக): எனக்கு... எல்லாம் தெரியும்! இருந்தாலும், நீயே, உன் Style-ல் சொல்லிடேன்?

பாவை: சூரியன், தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்குத் (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதம் 10-வது மண்டலம், பகுதி 23/32/65/85-ல் உள்ளன. சில மந்திரங்கள், யஜுர் வேதத்தில் உள்ளன.

நாராயணனுக்கும் எனக்கும் நடந்த கல்யாணமும், இதையே பின்பற்றி நடந்தது!

தோழி: எல்லாமே ஒரே கனவிலா? இது Too-much! அப்புறம், அந்தச் சடங்குகள், மந்திரங்கள் ...?

***

வேத சம்பிரதாயமான திருமணத்தில், பல அங்கங்கள் உண்டு. முதல் அங்கம், வாக் தானம்.

மணமகன் (வரன்), கல்யாணம் நல்லபடியாக அமைய, தன் வீட்டுப் பெரியவர்களையும், அர்யமாவையும் (Lord of Cosmic order), பகனையும் (Lord of Blessings/Grace) வேண்டி, 2 மந்திரங்கள் (10.32.1, 10.85.23) சொல்கிறான்.

பின்னர் அவன் வீட்டுப் பெரியவர்கள் பெண் (வது) வீட்டிற்குச் சென்று, பெண் கேட்பர்.

பெண்ணின் தந்தை வரனை ஒப்புக் கொள்வது முதல், திருமணச் சடங்குகளும், ஏற்பாடுகளும் தொடங்கும்.

ஆண்டாள் கனவில், கண்ணன் திருமணக் காட்சி தந்த அதே சமயத்தில், பெரியாழ்வார் கனவில் தோன்றி 'ஸ்ரீ ஆண்டாளை அரங்கத்திற்கு அழைத்து வாரும், அவளை நாம் திருமணம் செய்து கொள்கிறோம்' என்று கூறியதாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள புரோகிதர்கள் சிலர் கனவிலும் வந்து, 'பெரியாழ்வார் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆண்டாளைப் பெண் கேளுங்கள்' என்று உத்தரவிட, 'வாக் தானம்' நடந்ததாகக் கூறுவர்.

திருமணம் முழுவதையும் கனவாகக் கண்டது பற்றித் தோழியிடம் விவரித்த ஆண்டாள், 'அரங்கன் வீட்டார் தன் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்கள்' என்று மட்டும் இத்திருமொழியில் சொல்லவில்லை. எனவே ஆண்டாள் இத்திருமொழியை அருளிச் செய்த போது, அரங்கன் பெரியாழ்வார் கனவில் வந்து பெண் கேட்கவில்லை என்று யூகிக்க இடமுள்ளது.

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' அருளிச் செய்த பிறகும், ஆண்டாள் 'கண்ணன் வரவில்லை' என்று, வேங்கடவனையும், திருமாலிருஞ்சோலை அழகரையும் வரச் சொல்லி, மேகங்களையும், பூக்களையும் தூது விடுகின்றாள். அதன் பிறகே, 'அரங்கனைக் காண வேண்டும்' என்று சொல்கிறாள். எனவே, அரங்கன் 'பெரியாழ்வாரிடம் பெண் கேட்கும் படலம் நடந்தது இன்னும் சில காலத்திற்குப் பிறகே' என்று இன்னொரு சாரார் கூறுவர்.

வேறு சிலர், பெரியாழ்வார் கனவில் அரங்கன் வந்தான்; ஆனால், திருவரங்கத்துப் புரோகிதர்கள் வர கால தாமதம் ஆகிவிட்டதால், அதைக் கூடப் பொறுக்காமல் ஆண்டாள் மீதித் திருமொழிகளை அருளிச் செய்ததாகக் கூறுவர்.

***

(கனவாடல் ... அதாங்க - கனவு + உரையாடல் .. .தொடர்கிறது ...)

பாவை: நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ (வாரணம் ஆயிரம் சூழ) வருகின்றான்!


தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது?

பாவை: எல்லாம் நந்தகோபருடையது! அவர் தன் எதிரிகளை அழிப்பதற்கு, யானைப் படையையே வைத்துள்ளாரே! 'உந்து மதகளிற்றன்' பாசுரம் சொன்னேனே, அதற்குள் மறந்து விட்டதா?

தோழி: சரி! சரி! அப்புறம்?

பாவை: தன்னைப் போலவே தன் தோழர்களையும் யானை மீது ஏற்றி, அவர்கள் சூழ்ந்து வர ஸ்ரீவில்லிபுத்தூர் தெருக்களை வலமிருந்து இடமாகப் பிரதக்ஷிணம் செய்து (வலம் செய்து) வருகின்றான்!

தோழி: தோழர்களும் யானைகள் மீதா?

பாவை: 'தம்மையே வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே ஒக்க அருள் செய்வர்' எனும்படி இருக்கும் 'நாரண நம்பி' ஆயிற்றே அவன்? தன் நண்பர்களையும், யானை மேல் ஏற்றிக் கொள்கிறான் (இப்போது, மாப்பிள்ளை தன் நண்பர்களையும், ஊர்வலத்தில் காரில் ஏற்றிக் கொள்வது போல்)!

தோழி ('கனவில் கூட நல்லாவே யோசிக்கறா இவ' என்று நினைத்து): மேலே சொல்லு!

பாவை: ஊரெங்கும் தோரணம் கட்டி, என் அப்பாவும், உறவினரும், என் தோழிகளும் (நீயும் தான்), பூரண கும்பங்களுடன் நாராயணன் எதிரே வந்து, அவனை வரவேற்றனர்!

தோழி: ஒரு வழியாக கனவு முடிந்ததா?

பாவை: இல்லடீ! இப்போ தான் ஆரம்பமே!

***

நாளை வதுவை* மணமென்று நாளிட்டு* 
பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தன் என்பான்* ஓர்
காளை புகுத* கனாக் கண்டேன், தோழீ! நான்.
நாச்சியார் திருமொழி 6-2

நாளை திருமணம் என்று நாள் குறித்து, பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் கனவு கண்டேன், தோழி, நான்!

(பாளை - பட்டை; கமுகு - பாக்கு மரம்; பரிசு - அழகு, பெருமை; கோள் - மிடுக்கு, ஒளி)

***

(நம் பாவை மீண்டும் தொடர்கிறாள் ...)

பாவை: நாளை திருமணம் (நாளை வதுவை மணம்) என்று பெரியோர்கள் நாள் குறித்தனர் (நாளிட்டு). குறிப்பிட்ட நல்ல நேரத்தில், நரசிம்மனும், மாதவனும் ஆகிய கோவிந்தன் (கோளரி மாதவன் கோவிந்தன்), பாக்கு மரப் பட்டைகளுடன் (பாளை கமுகு) அலங்கரிக்கப் பட்ட மணப் பந்தலுக்கு (பரிசுடைப் பந்தல் கீழ்) வந்தான்.


ராமாயணத்தில், சீதை, உப்பரிகையில் இருந்து, ராமன் எனும் சிங்கத்தை நேரில் பார்த்து வெட்கமடைந்தது போல நானும், கோவிந்தனை, வெட்கத்துடன் நேரிலே பார்த்தேன்!

(மிடுக்கும், ஒளியும் உள்ள முக அழகைப் பற்றிப் பேசும் போதும், நடந்து, பந்தலுக்குள் வரும் அழகையும் சொல்லும் போதும், ஆண்டாளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, நம் நரசிம்மன் தான்! மற்ற பெருமாள்கள் எல்லாம் அதன் பிறகே!

எனவே தான் இதையும் நரசிம்மன் பாசுரமாக அடியேன் கருதுகிறேன்! சிலர், இதை நரசிம்மர் பாசுரம் இல்லை என்பர்! அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை!)

தோழி ('முற்றி விட்டது' என்று நினைத்து): அதாவது, நேரிலே, கனவிலே, பார்த்தேன் என்கிறாய்!

பாவை: ஏய்! கிண்டல் வேண்டாம்! அப்புறம் நான் வீட்டுக்குப் போய் விடுவேன்!

தோழி: கோவிச்சுக்காதடி! மேலே சொல்லு!

பாவை: என் அப்பா, கோவிந்தனை கிழக்கு முகமாக உட்கார வைத்து, தன் வருங்கால மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே நினைத்து, அவன் திருவடிகளை அலம்பி விடுகிறார். பின்னர், கோவிந்தனுக்கு, சில வேத மந்திரங்களைச் சொல்லி, 'மது பர்க்கா' (தயிர், தேன், நெய் ஆகியவற்றின் கலவை) கொடுத்தார்!

(வேதங்கள், சூரியன், சோமனையும் விஷ்ணுவாகவே நினைத்து மந்திரங்களைச் சொன்னதாகக் கூறும்; இந்தச் சடங்கு, 'கன்யா தானம்' எனும் சடங்கின் ஒரு பகுதி.

சில வீட்டார், இந்தக் கலவையைக் கொடுப்பதில்லை!
)

***

பாவை: பின்னர் என்னை, பந்தலுக்கு அழைத்து வந்தனர்! இப்போது தான், முறையாக நேரில் கண்ணனைப் பார்த்தேன்!

தோழி (பாவை வெட்கப் படுவதைப் பார்த்து): கனவிலேயும் வெட்கம் வருமா உனக்கு?

பாவை: சும்மா இருடீ! மண்டபத்தில், இந்திரன் உட்பட (இந்திரன் உள்ளிட்ட) பல தேவர்கள் வந்திருந்தனர் (தேவர் குழாமெல்லாம் வந்திருந்து). அங்குள்ள தேவர்களும், முனிவர்களும், என்னை மாதவனுக்குத் திருமணம் செய்து (என்னை மகள் பேசி) கொடுக்க முடிவு செய்தனர்.

நானும் மாதவனும், எனக்கு இருக்கும் தோஷங்களைப் போக்க, பிரஹஸ்பதி, இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரங்கள் (Rg 10.85.44-47) சொல்லி வணங்கினோம் (மந்திரித்து).

இந்திரனிடம், பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்! அவர், எங்களைத் தம்பதிகளாக ஆசீர்வதித்தார்.

கண்ணன், என் தோஷங்கள் நீங்க, மந்திரங்கள் சொல்லி, தர்ப்பைப் புல்லால், என் புருவங்களில் தடவினான்.

(புரோகிதர் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, மணப் பெண்கள், பக்தியுடன் நன்கு திரும்பச் சொன்னால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்)

தோழி: பத்து பெற்றால், எப்படிடீ சமாளிப்பே நீ? இதிலே உனக்கு 'Buy-10-Get-11th-Free' வேறே!

பாவை: சும்மா வாயை மூடிண்டு கேளுடீ! நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான். பிறகு, எனக்கு மணமாலை அணிவித்தனர். இவ்வாறு, எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தது!


தோழி (Tension-னுடன்): Suspense தாங்கலை! கல்யாணம் நடந்ததா, இல்லையா?

***

பாவை: கண்ணன், என் வலது கையைப் பிடித்து, அக்னி குண்டத்தின் மேற்குப் புறம் மணையில் (பாய்) அமரச் செய்தான். அவனும் வடக்குப் புறம் அமர்ந்தான்.

மந்திரம் (Rg 10.85.26) சொல்லி, புஷனை (12 ஆதித்யர்களில் ஒருவன்) வணங்கி, என்னை கண்ணனின் வீட்டுத் தலைவி ஆக்குமாறு வேண்டினோம்.

தோழி: ம்ம்...

பாவை: நல்ல ஒழுக்கம் உடைய, வேதம் ஓதுகின்ற பிராம்மணர்கள் பலர் (பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்), பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் (நால் திசை) இருந்து, புனித நீரைக் கொண்டு (தீர்த்தம் கொணர்ந்து) வந்திருந்தனர்!

தோழி (ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக): எதற்காம்?

பாவை: எனக்கு மங்களாசாசனம் செய்யத்தான்! சவிதா, சூரியன், வருணன், தேவர்கள், புனித நதிகள் (Holy Waters) ஆகியோர் மீது 5 மந்திரங்கள் சொல்லி (எடுத்து ஏத்தி), எங்கள் மீது தெளித்தனர் (நனி நல்கி)! எங்கள் வீட்டுக் குழாயில் அன்று தண்ணீர் வராததால், என் மீது இன்னும் கொஞ்சம் நன்றாகச் தெளிக்கச் சொன்னேன்!

பின்னர், பலவித மாலைகள் அணிந்து, புனிதனாக வந்த கண்ணனுடன் (பூப்புனை கண்ணிப் புனிதனோடு) என்னைச் சேர்த்து வைத்தனர்.

தோழி: கண்ணன் புனிதனாக வந்தானா? எதற்கு?

பாவை: அதுவா! இவனோ, எப்போதும் காடுகளில் மாடுகளுடன் திரிந்து, வெண்ணை திருடித் தின்று உடம்பெல்லாம் அழுக்காய் இருப்பவன்! என் அப்பாவோ ரொம்ப ஆசாரம் ஆயிற்றே! சுத்தமா வரலேன்னா கல்யாணம் இல்லைன்னுட்டார்
 
(அமலனையே சுத்தமாக்கச் சொன்னவர் என்ற பெருமை பெரியாழ்வாரை மட்டுமே சாரும்)!
 
கண்ணன் நீராடி, மாலை தரித்து, கையில் தர்ப்பையுடன் ஆசாரமாக வந்தான்!

பின்னர், கண்ணன், என் இடுப்பில் தர்ப்பைப் புல்லால் காப்பு கட்டினான் (காப்பு நாண் கட்ட). என் கையிலும் காப்பு (கங்கணம்) கட்டினான்!


(இன்று சிலர் வழக்கத்தில், கையில் மஞ்சள் கயிறு மட்டும் காப்பாகக் கட்டப் படுகிறது)

***

பாவை: அவன் மீண்டும் மணப்பந்தலுக்கு வரும் போது, நீயும், பக்கத்து வீட்டு பத்மாவும், வேறு சில தோழிகளும் சேர்ந்து (சதிரிள மங்கையார்), சூரியன் போன்ற ஒளி உடைய மங்கள தீபங்களுடனும் (கதிரொளி தீபம்), பூர்ண கும்பங்களோடும் (கலசமுடன் ஏந்தி), எதிரே வந்து வரவேற்றீர்கள் (வந்து எதிர் கொள்ள)!


தோழி: நானா? நான் நேற்று என் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்! உன் கல்யாணத்திற்கு வந்து, கும்பமும் தீபமும் தூக்கிய நினைவு இல்லையே எனக்கு?

பாவை: அம்மா தாயே! கனவிலே, நீ வருங்காலத்தில் ரயிலைக் கூடத் தூக்கலாம்!! ... சும்மா குறுக்கே பேசாமல், மேலே கேள்! மதுரை மன்னன் (மதுரையார் மன்னன்), பாதுகைகளை அணிந்து கொண்டு (அடிநிலை தொட்டு) பூமி அதிரும் படி வந்தான் (அதிரப் புகுத)!

('கொடுத்தே பழக்கப் பட்ட வாமனன், யாசிக்க வந்ததனால், பதற்றத்தில் பூமி அதிரும்படி வந்தான்' என்று நஞ்சீயர் கூறுவது போலே, இங்கு கண்ணன் பூமி அதிரும்படி வந்தான் என்கின்றாள் நம் பாவை!)

(கண்ணனுக்கு, பரமபத நாதன் என்ற பெயரை விட, 'மதுரையார் மன்னன்' எனும் பெயர் அதிகம் பெருமை தரும்! பரமபதத்தை விட்டு, இங்கு வருவதைத் தானே அவன் விரும்பினான்? இதனால் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை' என்று தானே அவனை அழைக்கின்றாள்!

ஒரு வைணவர், வெண்ணைக்காடும்பிள்ளை சிலையை வைத்து, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அன்றிரவு அவர் கனவில் கண்ணன் தோன்றி, "என்னை 'நம்பி', 'பிம்பி', என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைக்காதே! ’மதுரை மன்னன்’ என்று கூப்பிடு" என்று சொல்லி மறைந்ததாக ஒரு கதை உண்டு!)

- சிம்ம சொப்பனம் தொடரும்!

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP