Tuesday, May 18, 2010

நரசிம்மன் கல்யாணம் - 2

 
(பாவை தன் கல்யாண வைபவத்தைத் தொடர்கிறாள் ...)


பாவை:
என்ன! இப்போதாவது, நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்னன்னு புரிஞ்சதா, இல்லே, இப்பவும் தூங்கிட்டயா?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!

பாவை: புரோகிதர்கள், கோவிந்தனை, என் வலது கால் கட்டை விரலைப் பிடிக்கச் சொல்லினர். உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்' என்றனர்!

இப்படி இரு தரப்பினரும் (விளையாட்டோ, நிஜமோ, தெரியாது) விவாதம் செய்து கொண்டிருந்த போது, கோவிந்தன், சடக்கென்று குனிந்து, தன் சிவந்த (செம்மை உடைய) வலது கையால் (திருக்கையால்), என் வலது கால் கட்டை விரலைப் பற்றி (தாள் பற்றி), அம்மியின் மேல் வைத்து (அம்மி மிதிக்க), இன்னொரு வேத மந்திரம் சொன்னான்!


தோழி: எதுக்குடீ அவன், உன் காலைப் பிடிக்கணும்?

பாவை: உறவினர்களின் மனதில், 'யார் உசத்தி?' என்ற எண்ணமே இருந்தது! ஆனால், கோவிந்தனோ, அவனிடம் சரணாகதி செய்த அடியார்க்கு அடியவன்! எனவே, உறவினர்களின் முடிவு பற்றிக் கவலைப் படாமல், அடியாரின் காலைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டதனால், என் காலைப் பிடித்தான்!

கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?


இப்படி, கௌரவம் பாராது, சரணடைந்தவர்களின் காலையே பிடிக்கும் அந்தக் கைகள் மட்டுமே 'செம்மை உடைய திருக்கை'! மற்ற கை எல்லாம் 'வெறும் கை' தான்!

தோழி: சரி, உன் காலைப் பிடித்தால் மட்டும் போதாதா? அம்மியில் ஏன் வைக்க வேண்டும்?

பாவை: நீ, கனவிலே, வருங்கால 'TV'-யிலே 'எங்கே பிராம்மணன் I' பார்த்திருந்தால் உனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கும்! இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோ! இதன் அர்த்தம் இது தான்!

  • 'நீ இந்த நிலையான அம்மியின் மேல் நில்!
  • நீ, இந்தக் கல்லைப் போல, எப்போதும் நிதானமாக, நிலையாக நில்!
  • நீ, எந்தப் பிரச்சனை வந்தாலும், இந்தக் கல்லைப் போல், நிதானமாக, எதிர் கொள்!
  • நீ, எத்தனை பேர் மிதித்தாலும், தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கும் இந்தக் கல்லைப் போல் இருந்து, என் குடும்பத்தை நடத்திச் செல்!
  • நீ மட்டும், இந்தக் கல்லில் மற்றவர் இடறித் தடம் புரண்டாலும், இந்தக் கல் போல, தடம் புரளாது நிதானமாக இரு!'

என்று விஷ்ணுவை வேண்டியும், எனக்கு அறிவுரை சொல்லியும் தான்!

தோழி:
டீ! எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்ன?

தோழி: முதல் இரண்டு வரிகளில், சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் ஏன் அம்மியைப் பற்றிச் சொல்கிறாய்?

பாவை: நல்ல கேள்வி! வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அம்மியைப் போல், நிதானமாக இரு என்று ஒரு பொருள்! இது, கல்யாணத்தில் மணப்பெண்ணுக்குச் சொல்வது!

ஆனால், எல்லோருக்கும் பொதுவாக,

'ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எப்போதும் (திருமணத்திற்கு முன்னும்), எந்தப் பிரச்சனை வந்தாலும், நாராயண பக்தியில் இருந்து, தடம் புரளாது, அந்த அம்மியைப் போல இரு'

என்று எல்லோருக்கும் சொல்லத்தான், இந்தப் பாசுரத்தில் சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் அம்மியைப் பற்றிச் சொன்னேன்!

தோழி: நீ 'அருந்ததி பார்க்க'வில்லையா?

பாவை: எங்கடீ, கேக்கலையேன்னு நினைச்சேன்!

மண நாளின் இரவில், சாந்தி முகூர்த்தத்தின் முன் தான், நாங்கள் இருவரும் வானத்தில் இருக்கும் நட்சத்திரமான துருவனைப் பார்த்து, 'அவனைப் போல் சக்தியுடனும் வைராக்கியத்துடனும்', இன்னொரு நட்சத்திரமான அருந்ததியைப் பார்த்து, 'நான் அவளைப் போல் கற்புக்கரசியாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவோம்! துருவனும், அருந்ததியும் நம் கண்ணுக்குத் தெரிவது, இரவில் தான்!

அம்மி மிதித்து, ’பகலிலேயே அருந்ததி பார்க்கும்' வழக்கம், பின்னாடி, ஒரே நாளில் கல்யாணம் முடிக்கும் வழக்கம் வந்தவுடன் தான் வந்தது! எனவே தான் இதைப் பற்றி இப்போது நான் பாடவில்லை!

***

நேகமாக, ஒவ்வொரு திவ்வியப் பிரபந்தத்திலும் ஒரு சரணாகதித் தத்துவப் பாசுரம் இருக்கும் - திருப்பாவையில், 'சிற்றஞ்சிறுகாலே' போல! ஒரு சிலர், 'நாச்சியார் திருமொழியில், ஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் இது' என்று கூறுவர்!

'நம்மை உடையவன் நாராயணன் நம்பி' என்று ஆண்டாள், அவனை மங்களாசாசனம் செய்கின்றாள்!!

அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், 8-வது பாசுரத்தில் ஆண்டாள் சொல்வது, இன்னொரு தனிச் சிறப்பு!

அவனன்றி நமக்கு வேறு வழி இல்லையாதலால், நாமும், குலசேகரனைப் போல, ஆண்டாளைப் போல, நரசிம்மனிடம் சரணாகதி அடைவோம்!

***

பாவை: அடுத்து, லாஜ ஹோமம் நடைபெற்றது!

தோழி: ஏய்! எனக்கு வடமொழி புரியாது! தமிழில் சொல்லுடீ!

(நம் பாவை, ஒரு தமிழ்ப் பாட்டு பாடுகிறாள்)

வரிசிலை வாள் முகத்து* என்னைமார் தாம் வந்திட்டு*
எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்து*
பொரிமுகந் தட்ட* கனாக் கண்டேன்!தோழீ நான்.
நாச்சியார் திருமொழி 6-9
 
தோழி: ஒண்ணு வடமொழி, இல்லேன்னா பழம் பாட்டு! தமிழ்ல சொல்லறயா?

பாவை: அழகிய வில் போன்ற புருவத்தையும் (வரி சிலை), ஒளி பொருந்திய முகத்தையும் உடைய (வாள் முகம்) என் அண்ணன் இராமாநுஜன் (என்னைமார்) ஹோம குண்டத்தின் அருகில் வந்து அமர்ந்து (தாம் வந்திட்டு), ....


தோழி: நிறுத்து, நிறுத்து! ஆரம்பமே குழப்புதே? பாசுரத்தில் அண்ணன் எங்கு வருகிறான்?

பாவை: 'என்னைமார்' என்று சொன்னேனே? 'என்னைமார் = என் + ஐ + மார்'! '' என்றால், 9-வது உயிரெழுத்து மட்டுமல்ல (9-ம் பாசுரத்தில் 9-வது உயிரெழுத்து சம்பந்தமான கருத்து, இன்னொரு சிறப்பு!)!

'' எனும் 'வார்த்தைக்கு', மென்மை, நுண்மை, கப வியாதி (Bronchitis), அரசன், தலைவன், ஆசான், தந்தை, தமையன், இரண்டாம் வேற்றுமை உருபு என்ற 9 (!!!) பொருள்/உபயோகம் உண்டு!

தோழி: போதுமடி தமிழ் இலக்கணம்! ஆனால் உனக்கு சொந்தத்தில் சித்தப்பா, பெரியப்பா முறையில் அண்ணன், தம்பி யாருமே கிடையாதே? திடீரென்று ஏதோ பேரைச் சொல்லி, அண்ணன் என்கிறாயே?

பாவை: எல்லாமே உனக்குச் சொல்லிக் கொடுக்கணுமா? முதலில், தமையன் என்றால், 'சும்மா அப்பாவின் சொத்தை வாரிசு என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போகலாம்' என்ற உரிமை உள்ளவன் மட்டும் இல்லை!

அப்பாவின் பின், அப்பா தன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது, தொடர்ந்து, அப்பாவின் இடத்தில் இருந்து செய்பவனே தமையன் ('தம் அய்யன்' என்று பிரித்தும் சொல்வதுண்டு)! உண்மையில் அப்படிச் செய்பவன், வயதில் சிறியவனாயாக இருந்தாலும், அவன் அண்ணனே! 
 
(எனவே, தம்பியாக இருந்தாலும், பொரியிடலாம் - ஆனால், பின்னால் கடமை அழைக்கும்!)

வயதில் இளையவனாக இருந்தாலும், இராமாநுஜன் என் தந்தை செய்ய வேண்டிய கடமையைச் செய்ததால், அவனை 'அண்ணன்' () என்றேன்! அவன் என் கல்யாணத்தில், ஹோம குண்டத்தின் அருகே வந்து உட்கார்ந்து, பொரியிட்டதாகவே கனவு கண்டேன்!

தோழி: 'உனக்கு அண்ணன்' என்று சொல்லுமளவுக்கு இந்த இராமாநுஜன் உனக்கு அப்படி என்ன செய்தான்?

***

(பாவை, மிகவும் உற்சாகமாகச் சொல்கிறாள்)

பாவை: இவனைப் பற்றிச் சொல்லி முடியாது! இவன், அஷ்டாக்ஷர மந்திரத்தை சாமானியருக்கும் உபதேசிக்கப் போகிறவன்; கலியுக தெய்வமான வேங்கடவனை நாராயணனாக நம் எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கப் போகிறவன்! கலியுகத்தில் வைணவம் தழைக்க ஆணிவேராக நிற்கப் போகிறவன்!

(ஆண்டாள் சொல்லாவிட்டாலும், என் போன்ற சாப்பாட்டு ராமன்கள் சொல்வது இது ... வைணவக் கோயில்களில் புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் நன்கு விளங்கச் செய்தவன் இவனே .. ஹி .. ஹி ..)
 
பின்னால் ஒரு பாசுரத்தில் நான், திருமாலிருஞ்சோலை அழகருக்கு (நாறு நறும்பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு), 'மந்த்ர புஷ்பம்' போல், நூறு தடாக்கள் நிறைந்த வெண்ணெயும் (நூறு தடாவில் வெண்ணெய்), இன்னும் நூறு தடாக்களில் (நூறு தடா நிறைந்த) அக்கார அடிசிலையும் (அக்கார அடிசில்), வாயாலே சொல்லிச் (வாய் நேர்ந்து) சமர்ப்பித்தேன் (சொன்னேன்)!

பாவை (மீண்டும், வருத்ததுடன்): ஆனால், உண்மையில் அங்கு போய் இதைச் செய்ய முடியவில்லை! என் அப்பாவாலும் செய்ய முடியவில்லை!

தோழி: அப்புறம்?
 

பாவை: இந்தப் பாசுரத்தைப் பின்னாளில் படித்த இராமாநுஜன், என்னால் இதைச் செய்ய முடியாததைக் கேள்விப் பட்டு, என் மணாளனான அழகருக்குச் செய்து வைத்தான், இந்த ராமாநுஜன்!

ஒரு கிலோ வெண்ணெய் 250/- ரூபாய் விற்கிற காலத்திலே, நூறு தடாவில் வெண்ணெயையும், நூறு தடாவில் அக்கார அடிசிலும், சொந்த அண்ணன் கூடக் கொடுக்க மாட்டான்! எனவே, இப்படி எனக்குச் சீர் செய்தவன், என் உடன் பிறவாவிட்டாலும், எனக்கு அண்ணன் தானே?

அதனாலேயே, பின்னர் ஒரு நாள் இராமாநுஜன் வில்லிபுத்தூர் வந்திருந்த போது, அவனை (விக்கிரகமாக இருந்தாலும்) ஒரு அடி முன்னே வந்து வரவேற்றேன்!

(ஆண்டாளுக்கு, தமையன்கள் இருந்ததாக, எந்தச் சான்றும் இல்லை. பாசுரத்தில் தமையன்கள் வந்தாலும், அது கனவில் தான்! இங்கு, இராமநுஜன் உட்கார்ந்ததாகச் சொன்னது அடியேன் சுவாரஸ்யத்திற்காகச் செய்த கற்பனையே!

ஆனால், திருமாலிருஞ்சோலை அழகருக்கு, இந்தப் பாசுரத்தைப் படித்து விட்டு, சீர் செய்ததன் காரணமாகவே குரு பரம்பரையும், திவ்விய சூரி சரிதமும், இராமாநுஜரை, ஆண்டாளுக்கு 'அண்ணன்' என்று குறிப்பிடுவது உண்டு!

'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்று ஆண்டாளைப் பற்றிய வாழித் திருமொழியின் உள்ளர்த்தமும் இதுதான்!

சர்க்கரைப் பொங்கல் எம்பெருமானுக்கு அமுது செய்யும் போது, இந்தப் பாசுரத்தை 2 முறை சொல்வது, இன்றும் பல வைணவ இல்லங்களில் நடைபெறுகின்றது - நீங்களும் சொல்லலாமே!)

***

(பாவை, தொடர்கிறாள்)

பாவை: இராமாநுஜன், நன்கு தீயை வளர்த்து (எரி முகம் பாரித்து), அக்னியின் முன் என்னை அமர வைத்தான் (முன்னே என்னை நிறுத்தி). இராமாநுஜன் என் கையில் பொரியை அள்ளி இட (பொரி முகந்து), நரசிம்மன் அதில் நெய் விட, நரசிம்மன் (அரிமுகன்) கைகளின் மேல் நான் என் கைகளை வைக்க (கைம்மேல் என் கை வைத்து), நான் பொரியை ஹோமத்தில் இட்டேன் (அட்ட)!


தோழி: ஏன் கோவிந்தன் திடீரென்று நரசிம்மனான்?


பாவை: 'அச்சுதன்' என்றால், கைவிடாதவன் என்று அர்த்தம்! இராமானுஜன் பொரியிட்டவுடன், என்னை கோவிந்தன் கையில் பிடித்துக் கொடுத்து, தன் கையை விட்டு விட்டான்! இவ்வாறு, மற்றவர்கள் எல்லோருமே கை விட்டாலும், கைவிடாதவன் இவன் ஒருவனே! நரசிம்மன் ஒருவனே, அடியவனைக் கைவிடாது, தூணிலே தோன்றியவன்!

 
இப்படி, அடியவர்களின் கைகளின் கீழே தன் கையை வைத்து (கைம்மேல் என் கை வைத்து), அடியவர்களைத் தாங்குபவனும் அவனே!

(அடியவர்களுக்கு அபயம் அளிப்பதில், எம்பெருமானை விட, தாயாருக்குத் தான் அதிக ஆர்வம் உண்டு என்பதையே, 'அவன் கைகளின் மேல் தன் கை உள்ளது' ’கைம்மேல் என் கை வைத்து’ என்று ஆண்டாள் சொல்வதாகப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்!)

எனவே தான், என்னைக் கைவிடாத இவனை, 'அரிமுகன்' என்று அழைத்தேன்! அச்சுதன்' என்றும் அழைத்தேன்!

தோழி: ஏன் பொரியை இட வேண்டும்? வேறு ஏதாவது தானியத்தை இட்டிருக்கலாமே?

பாவை: பரவாயில்லையே! உனக்குக் கூட நல்ல கேள்வி கேட்க வருகிறதே!

'இதுவரை, எங்கள் வீட்டுப் பெண்ணை, நாங்கள் நெல்லில் உள்ள அரிசியைப் போன்று, பொத்திப் பொத்தி வளர்த்தோம்! இன்று முதல், இவள் பொரிந்த நெல்லைப் போன்று, முதிர்ந்து, திருமணமாகி, உங்கள் வீட்டுப் பெண் ஆகி விட்டாள்!'

என்று, பொரியிடுவதன் மூலம் மறைமுகமாக என் அண்ணன்களும் இந்தக் கல்யாணத்தை ஒப்புக் கொள்கின்றனர்!

தோழி: பொரியிடும்போது மந்திரம் சொன்னார்களா?

பாவை: நீண்ட திருமண வாழ்க்கைக்காகவும், நல்ல குழந்தைகளுக்காகவும், பொறுமைக்காகவும், அக்னியை வேண்டியும், மந்திரம் சொன்னோம். கடைசியில், நான் அக்னியிடம், 'இனிமேல் பிறந்த விட்டுப் பந்தங்களை விட்டு, புகுந்த வீட்டுப் பந்தகளை ஏற்க, என்னை ஆசீர்வாதம் செய்!' என்று வேண்டினேன்!

இத்துடன், என் 'திருமணம்' முடிந்தது. என் இடுப்பில் கட்டியிருந்த தர்ப்பையை - 'வருண பாசத்தை' - எடுத்து விட்டேன். இப்போது நான், 'தர்ம பத்தினி' ஆனேன்!

***

தோழி: இருடீ! பந்தி போட்டுவிட்டார்கள்! சாப்பிட்டு வருகிறேன்!


பாவை: கனவிலும் இந்தப் புத்தி போகாதே உனக்கு? அடுத்த பாசுரத்தில் உனக்கு ஒரு Role உண்டு!

தோழி: நான் சாப்பிடுவதைத் தடுக்க இப்படி ஒரு வழியா?

பாவை: இவ்வளவு நேரம் பெரிய அலங்காரங்களுடன் அக்னியின் அருகே உட்கார்ந்திருந்ததால் வாடியிருந்த மென்மையான என் மேனியைக் குளிர்ச்சி அடையச் செய்ய, குங்குமமும், சந்தனமும் நீ தடவினாய் (குங்குகம் அப்பி, குளிர் சாந்தம் மட்டித்து)!

பின்னர், உறவினர்களும், மற்ற விருந்தினர்களும் புடை சூழ, நாராயணன் வந்திருந்த யானையின் மேல் (அங்கு, ஆனை மேல்), நானும் அவனும் ஏறி அமர்ந்து (அங்கு, அவனோடும் உடன் சென்று), ஊர்வலமாக அலங்கரித்த வீதிகளைச் சுற்றி (மங்கல வீதி வலம் செய்து), வசுதேவர் திருமாளிகைக்குச் சென்றோம்! இப்படியாக, கோலாகலத்துடன் எங்கள் க்ருஹப்ரவேசம் நடைபெற்றது!


அங்கு, எங்கள் இருவரையும், நல்ல வாஸனைத் திரவியங்கள் கலந்த நீரினால் (மண நீர்) என் புடவை நுனியையும், அவன் வஸ்த்திர நுனியையும் முடித்து வைத்து, எங்களை மண நீராட்டம் செய்தனர் (மஞ்சனம் ஆட்ட).

(யானையில் செல்லும்போதே ‘மண நீராட்டம்’ நடைபெற்றதாகவும் கேள்விப் பட்டதுண்டு! படமும் அதையே சொல்கின்றது!)

எங்கள் ஊர்வலத்தின் பின்னே, புரோகிதர்கள், புது வீட்டில் நான் நன்றாக வழ வேண்டும் என்று, ரிக் வேதத்தில் இருந்து பல மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

தோழி: போதுமடி உன் புராணம்! சீக்கிறம் முடிடி! பசிக்கிறது!

பாவை: சரிடி! இதற்கப்புறம், ப்ரவஸ்ய ஹோமம் (13 மந்திரங்கள் கொண்டது), ஜயாதி ஹோமம், சேஷ ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் மூலம், நாங்கள் தம்பதியராக 100 வருடங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அக்னியையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்தோம்!

இதன் பிறகே, நான் அவன் இடப் பாகமானேன் (அதுவரை, அவன் வலது புறமே அமர்ந்திருந்தேன்)!

பின்னர், ஒரு குழந்தையை மடியில் வைத்து, அதற்குப் பாலும் பழமும் நான் கொடுத்தேன்.

அதன் பின்னர், பிராயச்சித்த ஹோமம் நடைபெற்றது.

***

தோழி (திடீரென்று): ஏய்! பாருடீ! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள்! திருமண வாத்தியார்கள் கூட சாப்பிடப் போய்விட்டனர்! நாமும் போலாமடி?

பாவை: நீ போ! நான், கோவிந்தனுடன் வரேன்!

தோழி: பாத்தியா! தமிழ் சினிமா மாதிரி, கனவுல காதலன் வந்தவுடன் என்னைக் கழட்டி விடறயே!

பாவை: ஸாரிடி! ...

பாவை (மீண்டும்): என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!


தோழி: ஏய்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! அதுக்குள்ள எப்படிடீ குழந்தை பிறக்கும்? இது என்ன மேல் நாடா - Your Children and My Children Are Playing With Our Children - என்று சொல்வதற்கு?

பாவை: இந்த நக்கல் தானே வேணாம்கிறது! நான் சொன்னதற்கு அர்த்தம், 'உனக்கு நல்ல வரன் கிடைக்கும்! திருமணத்தின் பின், பிறகு நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பாய்! (வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே)' என்பதே!

உனக்கு மட்டுமல்ல! வில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வரின் (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) புதல்வியாகிய நான் (கோதை) கண்ட கனவினை (தான் கண்ட கனாவினை) வர்ணிக்கும் இந்தத் திருமொழியை (தூய தமிழ் மாலை) யார் சொல்லி வந்தாலும் (ஈரைந்தும் வல்லவர்) அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்!

(திருமணம் நடைபெற வேண்டுமென்றாலும், நல்ல குழந்தைகள் வேண்டுமென்றாலும், இந்தத் திருமொழியை ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் பலன் உண்டு என்று கூறப்படுகிறது!)


(இதை, மிகவும் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமைய, நரசிம்மனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்)

- நரசிம்மன் வருவான்!

2 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

Raghunathan said...

I have enjoyed this article. No word to say. Thank you sir.
R.Raghunathan,BHEL,Ranipet.
9442394474.  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP