Thursday, May 13, 2010

நரசிம்மர் Birthday - உலகின் ஒரே அழகிய மாலைப் பொழுது



இடம்: பாண்டிய நாட்டின் ஒரு வீதியில், ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: மாலை நேரம்
காலம்: வல்லப தேவன் மதுரையை ஆண்ட காலம்

(ஒரு வழிப்போக்கன், களைப்புடன், ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்கிறான். அங்கு ஒரு பிராம்மணர் அமர்ந்திருக்கிறார்)

வழிப்போக்கன் (அமர்ந்து, சிறிது நேரம் கழித்து): பிராம்மணரே, ஒரு நல்ல வார்த்தை சொல்லும்!

பிராம்மணர் (சற்று யோசித்து, வடமொழியில்):

வர்ஷார்த்த மஷ்டௌ ப்ரயதேத மாஸாந் நிசா(யா)ர்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோரிஹ ஜந்மநா ச



வழிப்போக்கன்: பிராம்மணரே, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்றுப் புரியும்படி தமிழில் சொல்லுங்களேன்!

பிராம்மணர் (மீண்டும், தமிழில்): மழைக் காலத்துக்கு வேண்டியவற்றை மற்ற மாதங்களிலும், இரவுக்குத் தேவையானதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் சேர்த்து வைக்க வேண்டும்.

வழிப்போக்கன் (புரிந்தது போல, மகிழ்ச்சியுடன்): மிக்க நன்றி, பிராம்மணரே!

வழிப்போக்கன் (சென்று கொண்டே ... தனக்குள்): ... ம்ம்ம்... மறுமையைத் தவிர மற்ற மூன்றுக்கும் எனக்கு ஒன்றும் குறைவில்லை; இனி மறுமைக்கு வழி தேட வேண்டும்.

(இந்தப் பிராம்மணர் அந்த வீட்டில் இருப்பவரா, இல்லை அவரும் ஒரு வழிப்போக்கரா என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால், அவர் வழிப்போக்கனுக்குக் கூறிய கருத்தில், அடியேனுக்குத் தெரிந்த வரையில் மாற்றம் இல்லை)

***

இடம்: பாண்டியமன்னன் ஸ்ரீ வல்லப தேவனின் அரச சபை
நேரம்: மறுநாள் காலை

அரசன்:
புலவர்களே! சபையோர்களே! எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் உள்ளது. அதை நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்! 
(சபையிலிருந்து முணுமுணுப்பு ... என்னடா இது? மதுரைக்கு வந்த சோதனை ... மீண்டும் ஒரு திருவிளையாடலா? இப்பொழுது எந்த அரசியின் கூந்தல் வாசனை?)

அரசன்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வித உறுதிப் பொருள்களையும் தரவல்ல பரம்பொருள் எது? அதை அறிவது எப்படி?

(சபையில் சிலரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு)


ஒருவர் (அருகில் இருப்பவரிடம்): ஓ! நேற்று இரவு நான் கேள்விப்பட்டது உண்மை தானோ? அரசர் நகர சோதனையின் போது, வழிப்போக்கன் வேடத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடம் கேட்டதாகக் கேள்விப் பட்டேன்!

தலைமைப் புரோகிதர் செல்வ நம்பிகள்: அரசே! திருமாலே நீங்கள் தேடும் அந்தப் பரம்பொருள்!

அரசன்: அப்படியானால், பிற மதங்களில் பிறப்பற்ற நிலையைத் தரும் சக்தியில்லையா?

திருக்கோட்டியூர் செல்வ நம்பி (மீண்டும்): ஆம் அரசே! மற்ற தெய்வங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் கொடுத்தாலும், பரம்பொருளாகிய திருமால் ஒருவர் தான் (மறுபிறவி இல்லாத) வீடு பேற்றைக் கொடுக்க இயலும்!

அரசன் (மந்திரிகளுடன் கலந்தாலோசித்து): (சினிமா, நாடகங்களில் வருவது போல் கை தட்டி) யாரங்கே!

(இரு காவலர்கள் வருகின்றார்கள்)

அரசன்: தங்கத்தினால் ஒரு கிழி செய்து, அதை, ஒரு கம்பத்தில் கட்டி, இந்த சபை நடுவே தொங்க விடுங்கள்!


அரசன் (அவையோரைப் பார்த்து): எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், தங்கள் மதம் தான் பரம்பொருளைக் காட்டுகிறது என்று நிர்ணயம் செய்ய முயற்சி செய்யலாம்.
எப்போது பொற்கிழி தானாகவே அறுந்து கீழே விழுகிறதோ, அவர் கூறும் மதமே உண்மையான பரம்பொருளைக் காட்டுகிறது என்று யாம் ஒப்புக் கொள்வோம். அந்தப் பொற்கிழியும் அப்படிச் செய்பவருக்கே! இதை விரைவில் மக்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்!

(சபையோரிடமிருந்து மீண்டும் முணுமுணுப்பு ... என்று இதற்கு விடை தெரியுமோ? யார் தலை உருளப் போகிறதோ? ... ம்ம்ம் ... இதற்கு அந்த கூந்தல் வாசனைப் பிரச்சினையே பரவாயில்லை. அதனால் நமது சந்ததியினருக்காவது ஒரு நல்ல தமிழ்த் திரைப் படம் கிடைக்கும். இதனால், நல்லது நடந்தால் சரி ...)

... சபை கலைகிறது ...

***

சில நாட்கள் கழித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் விட்டுசித்தரின் கனவில், எம்பெருமான் தோன்றுகின்றான்.

எம்பெருமான்: விட்டுசித்தரே! எழுந்திரும்!

விட்டுசித்தர் (திடுக்கிட்டு எழுந்து): நாராயணா! நாராயணா!

எம்பெருமான்: விட்டுசித்தரே! நீர் மதுரை சென்று, பாண்டிய மன்னன் அவையில் பரம்பொருளை நிர்ணயம் செய்து வாரும்!

விட்டுசித்தர் (யோசித்து): நாராயணா! அடியேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வேதம் எவற்றையும் படிக்காத நான் எவ்வாறு பொற்கிழியை அறுக்க முடியும்?


எம்பெருமான்: இதற்கு நாமல்லவோ பொறுப்பு?

விட்டுசித்தர் (தவறை உணர்ந்து): எம்பெருமானே! மன்னிக்கவும். தங்கள் சித்தப்படி, இன்றே புறப்படுகிறேன்.

எம்பெருமான்: வெற்றியுடன், பொற்கிழியை எடுத்து வந்து, இங்குள்ள கோயிலில் திருப்பணி செய்து வாரும்!

***

விட்டுசித்தர், பாண்டிய மன்னன் அவையில், எம்பெருமான் அருளால் பரதத்துவ நிர்ணயம் செய்தார். அப்பொழுது, கம்பம் வளைந்து விட்டுசித்தர் முன் நிற்க, அவர் பொற்கிழியைப் பெற்றுக் கொண்டார்.

 
(சிலர், பொற்கிழி அறுந்து கீழே விழுந்தது என்றும், விட்டுசித்தர் கிழியை எடுத்துக் கொண்டார் என்றும் கூறுவர்)

பொற்கிழி கீழே வந்த அதிசயத்தைக் கண்ட பாண்டிய மன்னன், விட்டுசித்தரை வணங்கி, 'பட்டர் பிரான்' என்ற பட்டம் சூட்டினான். பின்னர், தன் பட்டத்து யானை மீது ஏற்றி, குடை, கொடி, சாமரம், ஆல வட்டம் முதலியவற்றை அணிவித்து, மற்ற பண்டிதர்களும் மந்திரிகளும், புடை சூழ நகர் வலம் வரச் செய்தான்.
(விட்டுசித்தருக்கு, பெரியாழ்வார் என்ற பெயர், விட்டுசித்தரின் காலத்தில் கொடுக்கப் பட்டதாகச் சான்றுகள் இல்லை. இதை குரு பரம்பரையினர் கொடுத்திருக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சி, ஆண்டாள் காலத்திற்குப் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்).

இப்படி ஆழ்வார் பவனி வரும் பொழுது இந்த அழகை நேரில் காண, பிராட்டியாருடன் ஸ்ரீமந் நாராயணன், கருடன் மீதமர்ந்து அங்கே தோன்றி, அனைவருக்கும் காட்சி அளித்தான்.



(மதுரைக்கு வந்த சோதனை, எம்பெருமானின் வரவால் விலகுகிறது ...)


அடியேனைப் போன்ற சாமானியர் எல்லாம், எம்பெருமான் எதிரே வந்து நின்றால் கூட (’நமக்கெல்லாம் காட்சி தரமாட்டார் அவர்’ என்ற அவநம்பிக்கையுடன்), ’உடை நன்றாக இருக்கிறது. எந்த நாடகக் கடையில் இருந்து உடை வாடகைக்கு எடுத்து வந்தீர்?’ என்று கேட்போம்.

ஆனால், பெரியாழ்வார், சாமானியர் அல்லவே! அவர் என்ன செய்திருப்பார்?

***

பெரியாழ்வாருக்கு, எல்லையில்லாத ஆனந்தம்! எம்பெருமானை நேரில் பார்த்ததில்! ஆனாலும் உடனே பயம்! இந்தக் கலி காலத்தில் பகவான் தன் அழகிய திருமுகத்தை எல்லோருக்கும் காட்டுகின்றானே? அதுவும், தன்னுடைய பரிவாரத்தையும், ஆயுதங்களையும் சேர்த்துக் காட்டுகிறானே? 'கண்' பட்டு விட்டால்?

தாகத்தினால் தொண்டை வரண்டு, தண்ணீர் கேட்பவன், தன்னையும் அறியாமல் 'தண்ணீர்! தண்ணீர்!' என்று ஒரு முறைக்குப் பலமுறை தண்ணீர் கேட்பது போல, எம்பெருமானுக்கு என்ன தீங்கு வருமோ என்று அஞ்சி, அவனுக்குப் பல முறை ‘பல்லாண்டு வாழ்த்து’ பாட ஆரம்பிக்கின்றார் பெரியாழ்வார்.

'பல்லாண்டு' என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்த அவருக்கு, 'வாழ்க' என்று கூறி முடிக்க இயலவில்லை - பயம் மிகவும் அதிகமாகி விட்டது! மனம் அமைதி அடையாமல், அங்கு கூடியிருக்கின்ற எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றார். அவர்களும், ஆழ்வாருடன் சேர்ந்து பல்லாண்டு பாடுகின்றனர்.

'திருப்பல்லாண்டு' எனும் இந்தப் திருமொழியில் (பதிகத்தில்) பதினொன்று பாசுரங்கள் உள்ளன. ஸ்ரீமந் நாராயணனுக்கு வாழ்த்துக் கூறும் இந்தத் திருப்பல்லாண்டே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் துவக்கமாக அமைந்துள்ளது!

கூடியிருந்த ஞானிகள், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதாக வரும் 6-வது பாசுரத்தில், நரசிம்மாவதாரம் பற்றிப் பேசப்படுகிறது.

***

ந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்*

அந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*

பந்தனை தீரப் பல்லாண்டு*பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.


திருப்பல்லாண்டு 1-1-6

(எந்தை - நானும், என்னுடைய தந்தையுமாகிய இருவர்; தம் மூத்தப்பன் - அவனும், அவனுக்குத் தந்தையும், பாட்டனும் ஆகிய 3 பேர்; ஆட்செய்தல் - அடிமைத்தொழில் செய்தல்; அரி - பகைவன்; பந்தனை - வருத்தம், களைப்பு)

"அடியேனுடைய தந்தையும், அடியேனும், அவருக்குத் தந்தையும், அவருடைய தந்தையும், அவருடைய தந்தையும், அவருக்குப் பாட்டனுமாகிய ஏழு தலைமுறையாகத் தொடங்கி, உரிய காலங்களில், வழி வழியாக எம்பெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறோம்.

திருவோணத் திருநாளில், அந்திப் பொழுதில், சிங்க உருவம் எடுத்து, இரணியன் எனும் பகைவனை அழித்தவனாகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு, அவதாரக் களைப்பு தீர, அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!"

என்று, ஞானிகள், பெரியாழ்வாருடன் சேர்ந்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகின்றனர்.

***

நாராயணின் அடியவர்கள், 'நான்', 'எனது', என்ற சொற்கள் அகங்காரத்தைக் குறிப்பதால், அவற்றை பெரும்பாலும் உபயோகப் படுத்தமாட்டார்கள் (மாறாக, அடியேன், தாஸன் என்ற சொற்களைப் பயன்படுத்துவர்). இதைப் பின்பற்றியே பெரியாழ்வார் இங்கு 'நானும், எனது தந்தையும்' என்று சொல்லாமல், தன் தந்தையை முன்னிலைப் படுத்தி, 'எந்தை' என்று பாசுரத்தைத் துவங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.

பாசுரத்தில், 'அந்திப்போதில்' என்று குறிப்பிடாமல், 'அந்தி அம் போதில்' என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன?

'அம்' என்றால் அழகு என்றும் பொருள். அழகிய மாலைப் பொழுது, என்று பொருள் கொள்ளலாம். எது அழகு?

இந்த மாலைப் பொழுதானது, தினமும் வருகின்ற மாலைப் பொழுது போன்றதல்ல; ’எம்பெருமான் சிங்க உருவம் எடுத்து வந்த அந்த திருவோண மாலைப் பொழுது. இதுவே அழகிய மாலைப் பொழுது, மற்ற மாலைப் பொழுதெல்லாம் வெறும் மாலைப் பொழுதுதான்' என்று ஆழ்வார் கூறுகின்றார் போலும்!

அம்-அந்திப்-போதில் என்று தானே இருக்க வேண்டும்? பாசுர அமைப்பு கருதி, அந்தி-அம்-போதில் என்று ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

'அரி' என்றால் பகைவன். பகைவனை அழித்தவன் என்று நாராயணனைக் குறிப்பிடுகின்றார் பெரியாழ்வார். எல்லாப் பொருட்களிலும் உள்ளே உறைந்து நிற்கும் அவனுக்கென்று யாரும் பகைவன் இருக்க முடியாதே! இந்த நாராயணனுக்கு யார் பகைவன்?

தன் பக்தர்களுக்கு (இங்கு, பிரகலாதனுக்கு) யார் பகைவனோ, அவனே நாராயணனுக்குப் பகைவன். ஏனென்றால் அவன் அடியவருக்கு அடியவன் ஆயிற்றே! பக்தர்களுக்கு ஒரு துன்பம் வந்தால் தாங்கமாட்டானாம் அவன்!

இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கூறியது போல (திருவோண ... அழித்தவனை), நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் திருவோணமா அல்லது ஸ்வாதியா?

***

ரசிம்மாவதாரம் பற்றி, பாகவதம், அக்னி புராணம், பாத்ம புராணம், ப்ரம்மாண்ட புராணம், வாயு புராணம், ஹரி வம்ஸம், ப்ரம்ம புராணம், விஷ்ணு புராணம், கூர்ம புராணம், மத்ஸ்ய புராணம், நரசிம்ம புராணம், சிவ புராணம், மஹாபாரதம், போன்ற பல புராணங்களும், உப புராணங்களும், உபநிடதங்களும் குறிப்பிடுகின்றன. சிலவற்றில் மிகவும் விவரமாகவும், சிலவற்றில் சிறு கதைகளாகவும், குறிப்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளன.

இத்தனை புராணங்களும் உப புராணங்களும் தவிர, நரசிம்மாவதாரம் பல மொழிகளிலும், மொழி பெயர்ப்பாகவோ, அல்லது மொழி இலக்கியமாகவோ எழுதப்பட்டுள்ளன. தமிழிலும், சில காவியங்களில் நரசிம்ம அவதாரம் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்க் காவியங்களில் இருந்து மேற்கோள்களை பின்னால் நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்.

அநேகமாக எல்லாவற்றிலும் நரசிம்ம அவதாரக் கதைத் தொகுப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆங்காங்கே விவரங்களில் பல வித்தியாசங்கள் உள்ளன.

பெரும்பாலான அவதாரக் குறிப்புகள், நரசிம்மாவதாரம் ஸ்வாதி நட்சத்திரத்தில் ஏற்பட்டது (தூணில் இருந்து தோன்றிய போது) என்று கூறுகின்றன.

இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், 'திருவோணத் திருவிழவில்' என்று நரசிம்மம் உருவாகியதைப் பற்றிக் கூறுவது எப்படிப் பொருந்தும்?

***

பாஞ்சராத்திரத்தில் (பாத்மம்), ஸ்வாதிக்குப் பதிலாக, திருவோணம் நரசிம்மனின் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது. திருவோணம் பொதுவாக விஷ்ணுவின் நட்சத்திரமாகும். எனவே, விஷ்ணு அவதாரமாயாகிய நரசிம்மனுக்கும் இது ஜன்ம நட்சத்திரமாகும் என்பர் சிலர். ஏதோ ஒரு காரணத்திற்காக ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம உத்ஸவத்தைக் கொண்டாடாதவர்கள், திருவோணத்தில் கொண்டாடலாம் என்ற நியமமும் உள்ளது.

ஆழ்வார், 'திருவோணத்தில்' என்று குறிப்பிடாமல், 'திருவோணத் திருவிழவில்' என்று கூறுகின்றாரே?

வைணவக் கோயில்களில், வருடத்தில் ஒரு முறை திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, 7-10 நாட்கள் வரை ப்ரம்மோத்ஸவம் என்னும் திருவிழாவைக் கொண்டாடுவது உண்டு (இது இப்பொழுதும், திருமலை உட்பட பல கோயில்களில் வழக்கத்தில் உள்ளது). எனவே, இந்தத் திருவிழாவின் போது, ’10 நாட்களில், ஏதோ ஒரு நாளில் வந்த ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது’ என்று ஆழ்வார் கூறுவதாகவும் இதைப் பொருள் கொள்ளலாம்.

பாசுரத்தின் அடுத்த வரியில் ’பந்தனை தீரப் பல்லாண்டு’ பாடுவதாகச் சொல்கிறார். அது என்ன ’பந்தனை’?

***

ரசிம்மாவதாரத்தின் போது, நரசிம்மர் மற்ற அசுரர்களை அழித்த விதமும், இரணியனை வதைத்த விதமும் பல புராணங்களில் மிகவும் அழகாகச் சொல்லப் பட்டுள்ளன (இதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்). அவற்றைப் படித்தால், நமக்கே சண்டை போட்ட களைப்பு வந்து விடும். சண்டையிட்ட அவனுக்கு வராதா என்ன?

எனவே பெரியாழ்வாரும், ஞானிகளும், நரசிம்மனின் அவதாரக் களைப்புத் தீர, எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றனர்.

வாருங்கள், நாமும் அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வி திருக்காப்பு*


அடியோமோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*

வடிவாய் நின் வல மார்பினில்* வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்* சுடர் ஆழியும் பல்லாண்டு*
படை போர்புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.



... நரசிம்மர் மீண்டும் வருவார்

1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP