Friday, May 14, 2010

நரசிம்மனைப் பார்த்தீரா?


இடம்: ஒரு மண்டபம்
காலம்: கலியுகம்
நேரம்: கேள்வி நேரம்

(மண்டபத்தில், ஒரு பாகவதர் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்; ஒரு கூட்டம் அதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஒரு பக்தன் (திடீரென எழுந்து): ஸ்வாமி! ஒரு கேள்வி கேட்கலாமா?

பாகவதர்: தாராளமாக!

பக்தன்: நான்முகனும், நீலகண்டனும் நாளும் நாடும் நாராயணனை நாம் எங்கு நோக்கலாம்?

பாகவதர்: கண்ணனே நாராயணன்! ருக்மிணியை வலியக் கைப்பற்றி, தேரில் ஏற்றிக் கொண்ட கண்ணனுடன் ருக்மிணியின் அண்ணன் போரிட வருகின்றான். அப்போது இருவருக்கும் நடந்த போரை நன்றாகக் கண்டவர் உளர். கண்ணனைப் பார்த்தால் நாராயணனைப் பார்த்த மாதிரித் தானே! 
பக்தன்: யார்? அந்தச் சிறுவனா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே? தாய் போன்ற பூதனையின் முலையைச் சுவைத்து அவள் உயிர் உண்டதாகச் சொல்வார்களே? பெண்கள் மீது இரக்கமற்றவன் தானே இப்படிச் செய்ய முடியும்? 

பாகவதர் ('ஐயோ! மீண்டும் பூதனையா!' என்ற முனகலுடன்): அப்படிப் பேசாதே! அந்தக் கண்ணனே, நரகன் அடைத்து வைத்திருந்த பதினாயிரம் கன்னிகைகளை விடுவித்து, தானே அனைவரையும் மணந்து கொண்டவன்! இவனா பொல்லாதவன்?கண்ணன் தன் தேவிமார்களொடு, துவாரகையில் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாண்டதைப் பார்த்தவர்கள் உள்ளனர்! 

பக்தன் (மீண்டும்): இவன் ஏழு உலகையும் உண்டதாகச் சொல்வார்களே? இதையாவது யாராவது பார்த்திருக்கின்றனரா?

பாகவதர் (சற்று கோபத்துடன்): நீ இன்று இங்கு நின்று, என்னைக் கேள்வியால் துளைப்பது, அன்று நாராயணன் வராக உருவில் கடலைத் துளைத்து, பூமியை வெளிக் கொணர்ந்ததால் தானே? அதற்காகவாவது அவனிடம் கொஞ்சம் நன்றியோடு நடந்து கொள்!


பக்தன்: ஸ்வாமி! குழப்புகிறீர்களே! நாம் கடைக்குச் சென்று கடைக்காரனிடம் 'பச்சரிசி இருக்கின்றதா' என்று கேட்டால், 'புழுங்கரிசி இருக்கு' என்று கடைக்காரன் சொல்வது போல் அல்லவா இருக்கின்றது?

(பாகவதர் பதில் சொல்வதற்குள், பின்னால் இருந்து, 'ஏய்! உக்காருப்பா! Chance கிடைத்தால் போதுமே! பேசிட்டே இருப்பீங்களே!’ என்று ஒரு குரல் ... அதற்கு சில ஆமாம் சாமிகள் கூட ... அங்கு சிறு சலசலப்பு!)

பாகவதர் (எல்லோரையும் பார்த்து): அமைதி! அவன் கேட்கட்டும்!

இன்னொரு பக்தன் (குறிக்கிட்டு): எங்களுக்கும் Chance கொடுப்பா! ... ஸ்வாமிகளே! எம்பெருமானுக்கு, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்குமே! இந்தக் கண்ணனுக்கு அவை இல்லையே?

பாகவதர்: கொடியில் அனுமன் அமர, வெள்ளைக் குதிரைகளின் கடிவாளத்துடன் அருச்சுனன் தேர் முன் அமர்ந்த கண்ணன், அவனுக்கு ஆயிரம் கைகளுடன் விசுவரூப தரிசனம் தந்தாரே? அந்தக் கைகளில் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் அனைத்தும் இருந்தனவே! அவற்றை, இரண்டு பெரும் படைகள் பார்த்தனவே!

அதே பக்தன்: சரி! கண்ணன் நாராயணன் தான்! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ராமன் நாராயணனா?

பாகவதர் (சற்று யோசித்து): இதில் சந்தேகமென்ன? ராமன் மிதிலையில், சிவனுடைய வில்லை வளைத்தானே? சிவனுடைய வில்லை வளைப்பவன் எம்பெருமானாகத் தான் இருக்க வேண்டும்? மேலும் பிராட்டியை வேறு யாரும் மணக்க முடியுமா?

இதை, அங்கு கூடியிருந்த மிதிலை மக்களும், ஸ்வயம்வரத்திற்கு அங்கு வந்த மற்ற மன்னர்களும் பார்த்திருக்கின்றனரே?


அதே பக்தன்: ஸ்வாமி! இன்னொரு கேள்வி!

(கூட்டத்தில் முணுமுணுப்பு ... 'ஸ்வாமிகள் பாகவதம் சொல்ல வந்தால், இங்கு ராமாயணம் ஆரம்பித்து விட்டார்களே!' என்று ஒரு வயதானவர் புலம்புகிறார்) 

பாகவதர் (எரிச்சலுடன்): இன்னும் என்னப்பா?

பக்தன்: இந்த ராமன், கண்ணன் எல்லாம் பாரதத்தில் தான் பிறந்தார்கள். ஆனால், கலியுகத்தில் பிறக்கவில்லையே? இந்த ராமனை நாம் இப்போது எங்கு பார்ப்பது?

பாகவதர் (’எப்ப பாத்தாலும் நமக்கு இப்படி ஒருத்தன் வந்து மாட்டுகிறானே’ என்று நினைத்து): அந்த ராமனைத் தேடுகிறீர்களா? மார்பைப் பிளந்து ரத்தத்துடன் அளைந்த கைகளுடன் நரசிம்மம் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்!

இன்னொரு பக்தன் (பாகவதரை மடக்க, வேகமாக எழுந்து): இதுவும் எப்பொழுதோ நடந்தது தானே? நரசிம்மரை இப்போது எப்படிப் பார்ப்பது?

கூட்டத்தில், ஒருவர் (சத்தமாக): 'நீ எப்பொழுதும் நாராயணனை நன்றாகத் திட்டிக் கொண்டிரு! அவர் வந்து உன் மார்பையும் பிளப்பார்; அப்போது உன் மூலம் நாங்களும் நரசிம்மனைப் பார்ப்போம்! 

(மண்டபத்தில் சிரிப்பலை! Tension ஆன பாகவதர், துண்டால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, கேள்விக்குப் பதில் சொல்லாமல், அத்துடன் அன்றைய பாகவதத்தை முடித்துக் கொள்கிறார் ... சபை கலைகிறது)

***

து அடியேன் கற்பனை அல்ல ... பெரியாழ்வார் எழுதியது!

இதற்கு முன், பல பாசுரங்களில் தன்னை யசோதையாக நினைத்து, கண்ணனை அனுபவித்து மகிழ்ந்த பெரியாழ்வாருக்கு, ஒரு புறம் அவனை மீண்டும் நேரில் காணும் ஆவலும், மறுபுறம், அனுபவ முதிர்ச்சியால் எம்பெருமானை ஏற்கனவே நன்கு பார்த்துவிட்ட ஞானமும் வருகிறது! விளைவு?

தானே 'நாராயணனைக் காண வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்டு, தானே, 'அவனைக் கண்டவர்கள் இருக்கின்றார்களே!' என்று பதிலும் உரைத்துக் கொண்டு, ’கதிராயிரம்’ எனும் இத் திருமொழியை இயற்றியுள்ளார்.

ஒவ்வொரு பாசுரத்திலும், முதல் இரண்டு வரிகளில், எம்பெருமானையோ அவனது அவதாரத்தையோ அல்லது அவதார லீலைகளையோ காண வேண்டுமா என்ற கேள்வி! அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில்!

(இதே போல் ஸ்ரீ ஆண்டாளும், 'பட்டி மேய்ந்து' [நாச்சியார் திருமொழி-14] எனும் திருமொழியை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது)

(இத்தகைய தமிழ்ப் பாடல்களுக்கு, ’எதிரும் புதிரும்’ என்ற பெயர் உண்டு என்று கேள்விப் பட்டுள்ளேன்! தமிழ் அறிஞர்களே! இது சரியா? பதில் சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்)

பெரும்பாலும், ஆழ்வார் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இருந்தாலும், சில பாசுரங்களில் தொடர்பு நேரடியாக இல்லை. இந்தத் தொடர்பிலும் ஆசாரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு!

இதில் முதல் பாசுரத்திலேயே நரசிம்மனைப் பார்க்கின்றார் ஆழ்வார்.

***

கதிராயிரம் இரவி கலந்தெறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*
அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்*
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டாருளர்.
கதிராயிரம் 4-1-1

ஆயிரம் கதிர்கள் உடைய சூரியன் ஒளி வீசுவதை ஒத்து இருக்கும் நீண்ட முடியை உடையவனும், ஒப்பு இல்லாத பெருமை உடைய ராமன் இருக்கும் இடத்தைத் தேடுகிறீர்களா?

வீரக் கழல் அணிந்தவனும், போர் புரியும் தோள்களையும் உடைய இரணியனின் மார்பைப் பிளந்து, ரத்தத்தை விலக்க அளைந்த கைகளோடு, நரசிம்மன் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்.

(இரவி - சூரியன்; ஆகம் - மார்பு; எதிரில் = எதிர் + இல் - ஒப்பு இல்லாத)

ஆயிரம் கதிரா? ஆயிரம் இரவியா?

***

திர்கள் ஆயிரம் உண்டு ஒவ்வொரு சூரியனுக்கும்! எனவே, இதைச் சொல்வதில் ஒன்றும் புதிதில்லை! ஆனால், எம்பெருமான் நீள் முடி, ஒரு சூரியன் ஒளி மட்டுமே கொண்டதா? இல்லையே?


இங்கு, 'ஆயிரம்' எனும் வார்த்தை, கதிருடனும், இரவியினுடனும் சேரும்! 'கதிர் ஆயிரம், (ஆயிரம்) இரவி கலந்து எறித்தால் போல்' என்று பொருள் கொள்வதே சரி!

பாசுரத்தில், ராமனை, ‘எதிரில் பெருமை இராமனை’ என்கின்றார். எதிரில் = எதிர் + இல் = எதிரிகள் இல்லாத பெருமை உடையவனாம் ராமன்!

இதற்குப் பொருள் கூற ஆரம்பித்தால், முன்னால் மண்டபத்தில் ஒருவர் கூறியது போல், நரசிம்மாவதாரத்தில் இருந்து ராமாயணம் ஆரம்பித்து விடும். எனவே ராமனுக்கு ‘எதிர் இல்’ என்று ஒப்புக் கொண்டு, பாசுரத்தில் கவனம் செலுத்துவோம்!

ஆழ்வாரின் கேள்வி: இந்த ராமன் உண்மையிலேயே இருக்கின்றானா? அவன் இருக்கும் இடம் தேடுகிறீர்களா?

அவர் பதில்: நரசிம்மன் இருக்கின்றான்! அவன் இரணியனை அன்று மார்பு பிளந்ததை, பலர் பார்த்தனர்!

ராமரைக் கேட்டால் நரசிம்மரைச் சொல்கிறாரே? இன்னொரு ’பச்சரிசி+புழுங்கரிசி’ கதையா? ஒருவேளை ஆழ்வார் வேறு கணக்குப் போட்டாரோ?

***

a=b, a=c என்றால், ஃ b=c என்று தானே அர்த்தம்?

நாராயணன் = ராமன்; நாராயணன் = நரசிம்மன்; ஃ ராமன் = நரசிம்மன்

இது தான் ஆழ்வார் போட்ட கணக்கு!

கணக்கு இருக்கட்டும்! ஆழ்வார் நமக்கு என்ன சொல்கிறார்?


எம்பெருமான் பாற்கடலிலேயே இருந்தால் நம்மால் அவனைப் பார்க்கவே முடியாது! நமக்காக அவன் அவ்வப் பொழுது கீழே வந்து, ’நான் வந்திருக்கிறேன்! பார்த்துக் கொள்’ என்று தரிசனம் தருகிறான்.

எல்லா அவதாரங்களும் ’தானே’ என்று முத்திரையும் காட்டிவிட்டுப் போகிறான்!

இவனை நீங்கள் நேரிலே பார்க்காவிட்டாலும், ’உங்கள் மூதாதையரில் ஒருவராவது பார்த்திருப்பர்’ என்கிறார்!

கலியுகத்தில் அவன் இன்னும் வரவில்லை! நமக்கு தரிசனம் தருவதற்காகவே கோயில்களில் இருக்கிறான்!

நரசிம்மன், கைகளில் ரத்தத்துடன் இருந்ததைப் பலர் பார்த்தனராமே? யார் அவர்கள்?

***

செவ்வை சூடுவார், சுமார் ஐந்நூறு ஆண்டுகள் (சிலர் 300 என்பர்) முன்பு வாழ்ந்த புலவர்! 'தமிழில் பாகவதம் இல்லையே' என்ற குறையைத் தீர்க்க அவதரித்தவர்! இவர் ஓலைச் சுவடியில் எழுதிய பாகவதத்தை, உ.வே.சாமிநாத ஐயர் வெளிக் கொணர்ந்தார்! இதிலும் பிரகலாத சரித்திரம் விவரமாக இருக்கின்றது!

இரணிய வதத்தின் பின், எம்பெருமான் இருந்த நிலையை வருணிக்கிறார் இவர்! அவற்றுள் சில பாடல்கள் இதோ:

கழை சுளி களிறு அன்னானை, கவானிடைக் கிடத்தி, மாலைக்
குழவி வெண் திங்கள் அன்ன கூருகிர் நுதியின், பைந்தேன்
பொழி மலர் அலங்கல் மார்பம் போழ்ந்து, செங்குருதி ஊறி,
வழி பசுங் குடர் மென் கண்ணி ஆளரி வளைந்தது அன்றே.
1692

யானையைப் போல் இருந்த இரணியனை மடியில் கிடத்தி, சந்திரன் போல் பளபளக்கும் தன் கூர்மையான நகங்களால், மாலை அணிந்த அவன் மார்பைக் கீறி, அவன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார் ஆளரி!

ஆர்த்தனர் அமர் ஓடி; அரும்பு அவிழ் பசும்பொற் போது
தூர்த்தனர்; உலகம் உண்ட சுடர் நகைப் பவள வாயும்,
கூர்த்த வாள் உகிரும், கையும், கொழுங்குடர் அணிந்த மார்பும்
பார்த்தனர்; வெருவல் உற்றார், பனி இரு விசும்பு மொய்த்தார்.
1693தேவர்கள் இதை ஓடி வந்து, மேலிருந்து பார்க்கின்றனராம் (அதுவரை இரணியனிடம் உள்ள பயத்தால் ஒளிந்து இருந்தவர்கள்)! அன்றே பூத்த மலர்களைத் தூவுகின்றனர்! போட்டி போட்டுக் கொண்டு, அந்தரத்தில் இடம் பிடிக்கின்றனர்!

ஆனால் அவர்கள் பார்த்ததோ ஒரு புதிய உருவத்தை! உலகம் உண்ட அந்தப் பவள வாயையும், கூர்மையான அந்த நகங்களையும், குடல் அணிந்த அந்த மார்பையும்! விசுவ ரூபத்தையும்! தேவர்கள் மட்டுமா பார்த்தனர்? மற்றவர்களும் தான்!

வெஞ்சினத் திகிரி மாயன் வெருவரு தோற்றம் நோக்கி,
கஞ்ச நாண் மலரினானும் கண்ணுதல் பிறரும் அஞ்சி,
செஞ்சுடர் விரிக்கும் போதின், 'தெரிவை! நீ, சேறி!' என்ன,
அஞ்சினள் அணங்கு, நண்ண அவ்வுருக் கண்டு; மன்னோ.
1694

அவனுடைய கோபம் தரும் தோற்றம் காண்கின்றனர், பிரமனும், சிவனும், இந்திரனும்! அருகே செல்லப் பயப்படுகின்றனர்! பிரமன், அருகே நிற்கும் திருமகளைப் பார்த்து, 'தெரிவை! நீ சேறி!' என்று கூறுகின்றான்!

ஆனால் அருகில் செல்ல, திருமகளும் பயப்படுகின்றாள்! ஏன்?

***

தற்கு முன்பு, 'ஆளரிநாதன்' பதிப்பில், அடியேன், 'நரசிம்மனை யாரும் இதற்கு முன் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று எது?' என்று கேட்டிருந்தேன். இதோ ஒரு விளக்கம்:

பிரமனும் சிவனும் திருமகளைப் பார்த்து, 'நீ செல்!' என்று கூற, திருமகள் அஞ்சுகின்றாளாம்! பயத்தினால் அல்ல!

தான் இதுவரை பார்த்திராத உருவமாம் அது! தன் கணவனையே அடையாளம் தெரியவில்லை அவளுக்கு! ஒரு வேளை இது நாராயணன் இல்லை என்றால்! பிற புருஷனிடம் எப்படிச் செல்வது? எனவே அஞ்சினாளாம் திருமகள்! இதற்கு மேல் வேறு சான்று வேண்டுமா நரசிம்மம் புதிது என்பதற்கு?

திருமகள் தயங்கித் தயங்கிப் பார்க்கின்றாள்!

மலரயன், கிரீசன், தேவர், வாசவன், முனிவர், சித்தர்,
இலகு தென்புலத்தோர், நாகர், இயக்கர், கந்திருவர், ஆதி
அலகிலோர் அணுகார் ஆகி; ஆளரி உருவத்தோனை,
பலமுறை தொழுது, பாத பங்கயம் பரவினார்; ஆல். 1695

எல்லாத் தேவர்களும் பார்க்கின்றனர்! ஆனாலும், அருகில் நெருங்க பயம்! தள்ளி இருந்தே திருவடி தொழுகின்றனர்!

சண்டைக்குப் பின், மீதமுள்ள அசுரர்களும் பார்க்கின்றனர்! அசுரர்களின் ஒரே ஒரு ஆழ்வானான பிரகலாதாழ்வானும் பார்க்கின்றான்! இரணியன் அரண்மனையில் அப்பொழுது இருந்த புரோகிதர்களும், மற்ற மனிதர்களும் பார்க்கின்றனராம்!

இப்படி, 'நரசிம்மனைப் பார்த்தவர்கள் பலர் உண்டே' என்கின்றார் ஆழ்வார்! சரிதானே!

- நரசிம்மர் நமக்கும் தரிசனம் தருவார்!


1 கருத்துகள்:

Rangan Devarajan said...

அன்பர்களே

இந்தப் பதிவு, மாதவிப் பந்தலில் முன்னரே அடியேனால் எழுதப் பட்டது. இதற்கான Comments அங்கு உள்ளன.

அங்கு சென்றால், தங்கள் எண்ணங்களுடன், மற்ற அடியவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP